சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

அக்டோபர் 16-31

நூல்: புனிதப் பசு என்ற கட்டுக்கதை
ஆசிரியர்: டி.என்.ஜா
தமிழில்: வெ.கோவிந்தசாமி
பக்கம்: 176 விலை: ரூ.65
வெளியீடு: கோயம்புத்தூர் – 641015

தெய்வத்துக்கு நேர்ந்து விடப்பட்ட அல்லது வேள்விகளில் உயிர்ப்பலி தரப்பட்ட பசுக்கள் அல்லது வேறு விலங்குகளின் இறைச்சியை வேதகால ஆரியர்கள் உண்டார்-களா, இல்லையா என்பதல்ல பிரச்னை; வேத காலத்திலும், அதற்குப் பின்னர் வந்த காலத்திலும் பசு உள்ளிட்டு கறவை கால்நடைகள் இறைச்சியாக உண்ணப்பட்டிருக்-கின்றன என்பதுதான் பிரச்னையின் மய்யமே. (கொல்லப்படக் கூடாதது என்ற பொருள் கொண்ட) அக்னயா (ணீரீலீஸீஹ்ணீ) என்ற சொல் காளை அல்லது எருது என்ற சொல்லுக்குச் சமமான ஆண்பால் பெயர்ச் சொல்லாக நான்கு இடங்களிலும், பசு என்ற பொருள் தரக்கூடிய பெண்பால் பெயர்ச் சொல்லாக நாற்பத்திரண்டு முறையும் ரிக்வேதத்திலும், அதர்வண வேதத்திலும் இடம் பெற்றுள்ளது. உயரிய சமய முக்கியத்துவம் கொண்ட பொருட்களைச் சுட்டிக்காட்டும் நோக்கோடுதான் அடைமொழியாக அல்லது உவமையாக, உருவகமாக பசு குறித்த சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனவே தவிர, உண்மையில் அந்த விலங்கைக் குறிக்கும் நேரடிப் பொருளில் அவை கையாளப் படவில்லை என்ற பார்வைகளும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

வேத காலத்தில் பசு புனிதமாக மதிக்கப்பட்டு வந்தது – அதாவது பசுக்கள் கொல்லப்-படவில்லை – என்ற கருத்துக்குச் சான்றாக மேலே சொல்லியுள்ள இரண்டு வகையான ஆதாரங்களையும் முன் வைக்க முடியாது. இதற்கு மாறாக, மேலே சொன்ன ஆதாரங்கள் பசுக்களின் பொருளாதார முக்கியத்துவத்தையே வலியுத்துகின்றன. பசுக்கள் கொல்லப்படும்போது மக்களுக்கும், புரோகிதர்-களுக்கும் அது உணவாகப் பயன்படுகிறது. இறைச்சி மிகச் சிறந்த உணவு, என்று சதபத பிராமணம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. கூடுதலாக, பாலையும், பல்வேறு பால்பொருட்களையும் அவை தந்தன. இப் பொருட்கள் உணவாகவும், அதேவேளையில் வேள்விகளில் இடப்படும் படையல் பொருட்களாகவும் (ஹவிஸ்) பயன்பட்டன.

எருதுகள் பாரம் இழுக்கப் பயன்படுத்தப்-பட்டன. உழவுக்கும் பயன் பட்டன. சூரியனின் தேரை இழுக்கும் விலங்குகளாகவும் அவை குறிப்பிடப்பட்டுள்ளன.  ஆடு, மாடுகளின் தோல்கள் பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்-பட்டன. பசுவின் தோலைக் கொண்டுதான் வில்லின் நாண் தயாரிக்கப்பட்டது. இப்பழக்கம்தான் பின்னர் வந்த காலங்களிலும் தொடர்ந்திருக்கக் கூடும்.  ரதத்தின் பல்வேறு பகுதிகள் தோல்வார்களைக் கொண்டு இணைக்கப்பட்டன. வில்லின் நாணாகவும் தோல்வார்கள் பயன்பட்டன. விலங்குகளை அடிப்பதற்கான சவுக்கு பசுவின் தோல் அல்லது வாலைக் கொண்டுதான் தயாரிக்கப் பட்டது. வலைப்பொறிகளைத் தயாரிக்கப் பயன்பட்ட-தோடு கோதா (ரீஷீபீலீணீ) என்ற இசைக் கருவியைத் தயாரிக்கவும் தோல்வார்கள் பயன்பட்டன. கால்நடைகள் பயன்பாட்டு மதிப்பும், முக்கியத்துவமும் வாய்ந்தவையாக இருந்ததால் அவற்றைக் கைப்பற்றுவதற்காகக்கூடப் போர்கள் நடைபெற்றன. வெற்றி கொள்ளப்பட்ட பழங்குடியினரின் கால்நடைச் செல்வங்களின் ஒரு பகுதி சூறையாடலின் போது கொல்லப்பட்டிருக்கவும் வேண்டும். வேதகாலத்தில் பசு புனிதமாக மதிக்கப்-பட்டது என்ற வெகுஜனக் கருத்துக்கு எதிராக, வேள்விகளுக்காகவும் உணவுக்காகவும், மற்ற தேவைகளுக்காகவும் பசுக்கள் கொல்லப்-பட்டிருக்கின்றன என்பதை மெய்ப்பிப்பதாகவே இந்த விஷயங்கள் அனைத்தும் இருக்கின்றன. பசு புனிதமாகக் கருதப்பட்டதாக வைத்துக் கொண்டாலும்கூட, பசுவின் பொருளாதார மதிப்பு அதன் புனிதத்துக்கு எவ்வளவு தூரம் காரணமாயிருந்தது என்பதைச் சொல்வது கடினம்.

செல்வத்தின் குறியீடாக பசு இருந்ததால் வேதங்கள் அதை அதிதியோடும் (தெய்வங்களின் தாய்; ஆனால், குறைவற்ற சொர்க்கம் என்பதே இதன் நேரடிப் பொருள்) பூமியோடும் (பிரித்வி) விருத்திரனைக் கொன்று இந்திரன் விடுவித்த வானுலக நீரால் உருவாக்கப்பட்ட உலக நியதியோடும் (ஹ்ருத) தாய்மையோடும் ஒப் பிட்டிருந்தன. மிக முக்கியமாக பார்ப்பனர்களின் ஏகபோகச் சொத்தாக இருந்த கவிதை / பேச்சு (வாக்கு) உடனும் ஒப்பிட்டிருந்தன. எல்லா விலங்குகளைக் காட்டிலும் பசு மட்டுமே உவமையாகவும், உருவக மாகவும் அடிக்கடி அதிக அளவில் குறிப்பிடப்-பட்டுள்ளது. ஆனால், பின்னர் வந்தவர்கள் காலப்போக்கில் இதை நேரடிப் பொருளில் எடுத்துக்கொண்டனர். கவிதைகளில் காணப்பட்ட கவிதைக் கற்பனை கைவிடப்பட்டு, பசு புனிதமாகக் கருதப்பட்டு வந்ததாகப் பின்னர் வந்த காலங்களில் அனுமானம் செய்யப்பட்டதற்கு இது அடிப்படையாய் இருந்திருக்கலாம்.

பசுக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக ஒரு வலுவான குரல், அதர்வண வேதத்தில் எழுப்பப்பட்டுள்ளதாக விளக்கம் தரப்படுகிற போதிலும் வேத காலத்தில் பசு புனிதப் பொருளாகவும் இருக்கவில்லை; கொல்லப்படக்கூடாதது என்று கருதப்படவுமில்லை. பார்ப்பனருக்குச் சொந்தமான பசுக்கள் மட்டுமே குறிப்பிட்ட அளவு மரியாதைக்குரியதாகக் கருதப்-பட்டிருக்கலாம்; அவ்வளவுதான். பார்ப்பனப் புரோகிதருக்குத் தரப்படும் தட்சணைக்கு பசுவே பொருத்தமான பொருளாகத் தேர்ந்தெடுக்கப்-பட்டிருந்தது. வேதகாலப் பார்ப்பனன் தன் தட்சணையின்மீது (நல்ல கறவைப்பசு) காட்டிய ஆர்வத்திற்கும், அந்தத் தட்சணையைத் தடுத்து நிறுத்தும் அல்லது அதற்கு ஊறு விளைவிக்கும் அல்லது அதைத் தவறாகக் கையாளும் நபர்களுக்கு நேரிடப்போகும் கடுமையான கேடுகள் குறித்தும், அந்தத் தட்சணையைத் தரும் நபருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்தும், ஏராளமான ஆதாரங்கள் கிடைக்கின்றன. ஓ, மன்னனே, (நிர்பதி) அதை (பசு) சாப்பிடுவதற்காக தேவர்கள் உன்னிடம் தரவில்லை. ஓ, வீரனே, (ராஜன்யா) பார்ப்பனர்களின் பசுவைச் சாப்பிட ஆசைப்படக்கூடாது.

அவள் (பசு) சாப்பிடக்-கூடிய பொருளல்ல (அனாதியம்) என்ற எச்சரிக்கை வாசகம் ஒன்றை அதர்வண வேதத்தில் ஒரிடத்தில் காண முடிகிறது. பார்ப்பனனின் பசுவைச் சாப்பிட்ட வைதாகவியாஸ் அழிந்து போனதாக அதேநூலில் வேறொரு இடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  இரண்டு மடிகள் கொண்ட பசு (யாமினி) அமங்கலமானது என்று அதர்வண வேதத்தில் கூறப்பட்டிருந்தாலும் (இந்தப் பசு பார்ப்பனர் களுக்குத் தரப்பட்டு பின்னர் வேள்வியில் பலி தரப்பட்டது) பார்ப்ப னருக்குச் சொந்தமான அல்லது அவருக்குத் தட்சணையாகத் தரப்பட்ட பசுக்கள் மட்டுமே மரியாதைக்குரியவையாக கருதப்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பார்ப்பனர்-களின் பசுக்களுக்குத் தரப்பட்ட சிறப்பான முக்கியத்துவத்தைச் சற்று விரிவுபடுத்தி, வேத காலப் பசு புனித அவதாரமாக இருந்தது என்று வாதிட முடியாது.

வெவ்வேறு காலகட்டங்களிலும், வெவ்வேறு இடங்களிலும் கிடைத்த தொல்லியல் ஆதாரங்கள் பசு உள்ளிட்ட கால்நடைகளைக் கொல்வது வழக்கத்தில் இருந்தது என்பதற்குத் தெளிவான சான்று களாக விளங்குகின்றன. ஒரு இலட்சம் ஆண்டுகளிலிருந்து பத்தாயிரம் ஆண்டுகள் வரையிலான யுகத்தைச் சேர்ந்த மண்படிவுகளில் அகழ்வாய்வு செய்தபோது, பல ஆற்றோரப் பகுதிகளிலும், மற்ற இடங்களிலும் பசு / எருதுகளின் எலும்புகளே பிற விலங்குகளின் எலும்புகளைக் காட்டிலும் மிக அதிகமாகக் கிடைத்துள்ளன, என்று ஹெச். டி. சங்காலியாவை ஆதாரமாகக் கொண்டு நாம் உறுதியாகச் சொல்லலாம். கல்லினால் செய்யப்பட்ட கருவிகளோடு இந்த எலும்புகளும் காணப்படுவ-தால் கற்கால மனிதன் உணவுக்காக அவற்றை (கால்நடைகளை) வேட்டையாடியிருக்கிறான் என்பதையே இவை எடுத்துக்காட்டுகின்றன. ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் கால்நடைகளின் இறைச்சியை உணவாக உண்டிருக்கிறார்கள் என்பதை அகழ்வாய்வுகள் தெளிவாக மெய்ப்பித்துள்ளன.

சிந்து, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், கட்ச், சௌராஷ்டிரம் எனப் பல இடங்களிலும் இதை உறுதிப்படுத்தும் தொல்லியல் ஆதாரங்களைக் காண முடிகிறது. ஹரப்பா நாகரிகம் பரவியிருந்த பகுதிக்கு வெளியே கிடைத்த செம்புப் பொருட்கள், செம்புக்கால கட்டத்தில் நிலவி வந்த உணவு –  முறைக்கு – மாட்டிறைச்சி உண்டது. இதில் முக்கிய அம்சமாக இருந்திருக்கிறது – – தெளிவான ஆதாரங்களாக விளங்குகின்றன.

மாட்டிறைச்சி உண்ணும் இந்தப் பழக்கம் கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய ஆயிரம் ஆண்டுகள் முழுவதிலும் தொடர்ந்து வந்திருக்கிறது என்பதைத் தொல்லியல் ஆதாரங்கள் மெய்ப்பிக்கின்றன. வேத காலத்தின் இறுதிக் கட்டத்தில்தான் இந்தோ – கங்கை நீர்ப்படுகையில் ஆரியர்களின் குடியேற்றங்கள் நிரந்தரமானவையாக இருந்தன. அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த மக்களின் கலாச்சார அடையாளத்தைக் காட்டும் வண்ணம் பூசப்பட்ட சாம்பல்நிற மட்பாண்டங்கள் அகழ்ந் தெடுக்கப்பட்டது இந்த விஷயத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன.

எடுத்துக்காட்டாக அஸ்தினாபுரத்தில் (மீரட்) எருமை, ஆடு, பன்றி, யானை ஆகியவற்றின் எலும்புகளும் அத்துடன் திமில் இல்லாத, சிறிய கொம்புகளைக் கொண்ட கால்நடைகளின் எலும்புகளும் கண்டு-பிடிக்கப்பட்டன. இவற்றில் கணிசமானவை கி.மு. பதினொன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. மூன்றாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவையாகும். பெரும்பாலான கால்நடை எலும்புகளில் தீயில் கருகியதற்கான அடையாளமோ, ஆயுதத்தால் வெட்டப்பட்டதற்கான அடையாளமோ இருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்த விலங்குகள் சமைக்கப்பட்டு உணவாக உண்ணப் பட்டிருக்கலாம் என்பதையே இவை காட்டுகின்றன. வேதகாலத்தின் இறுதிக்கட்டத்தைச் சேர்ந்த குடியிருப்புகளின் அகழ்வாய்வு கிடைத்த அல்லாபூரில் (மீரட்) தீயில் கருகிய எலும்புகளும், கொம்புகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இதைப் போன்ற ஆதாரங்கள் அட்ரான்ஜி கேரளாவில் (இதாக் மாவட்டம்) மிக அதிக எண்ணிக்கையில் கிடைத் திருக்கிறது. இங்கு அடையாளம் காணப்பட்ட எலும்புத் துண்டுகளின் எண்ணிக்கை 927 ஆகும். இவற்றில் அறுபத்துநான்கு விழுக்காடு எலும்புகள் பசுவின் எலும்புகளாகும்.

இவற்றில் பலவற்றில் வெட்டுப் பட்ட அடையாளங்-களைப் பார்க்க முடிகிறது. இவை கி.மு. அய்ந்தாம் நூற்றாண்டுக்கும் முந்தியவை ஆகும். ஆட்டிறைச்சி, மானிறைச்சி, பன்றி இறைச்சி, மீன், கடல் ஆமை, காட்டுக்கோழி, சிறுத்தை (பரசிங்கம், நில்காய்) போன்ற காட்டு விலங்குகளின் இறைச்சிகள் உண்ணப்-பட்டிருந்தாலும் மாட்டிறைச்சியே விருப்பமான உணவாக இருந்திருக்கும்போல் தெரிகிறது. ஹரியானாவிலுள்ள பகவான் புரத்தில் (குருசேத்திர மாவட்டம்) தீயில் கருகிய அடையாளங்களைக் கொண்ட கால்நடைகளின் எலும்புகள் பெரும் எண்ணிக்கையில் கிடைத்திருக்கின்றன. பஞ்சாப் மாநிலத்தில் ரோபர் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குடியிருப்புகளில் (கி.மு. 600 — 200) வண்ணம் பூசப்பட்ட சாம்பல்நிற மட்பாண்டங்கள் கிடைத்தன. அங்கே கால்நடைகள், எருமை, ஆடு, பன்றி, குதிரை, நாய், காட்டுக்கோழி, ஆமை, சிறுத்தைப் புலி ஆகியவற்றின் எலும்புகள் வெட்டுக்காயங்க ளோடும், தீயில் கருகிய அடையாளங்களோடும் கிடைத்திருக்கின்றன. கால்நடைகளின் பாதுகாவலனான கிருஷ்ணனோடு தொடர்பு கொண்ட புகழ்பெற்ற மதுராவில் நடந்த இரண்டாம் கட்ட குடியேற்ற (கி.மு. 400 – 200) காலத்தைச் சேர்ந்த ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன.

வண்ணம் பூசப்பட்ட சாம்பல்நிற மட்பாண்டங்கள் கிடைத்த அனைத்து இடங்களிலும் இதுவரை கிடைத்தவற்றில் எலும்பு எச்சங்களும், கால்நடைகளின் எலும்புகளுமே அதிகமாக இருக்கின்றன. உணவுக்காகவும், வேறு பயன்களுக்காகவுமே கால் நடைகள் வீட்டில் வளர்க்கப்பட்டன என்ற சரியான முடிவுக்கே இவை நம்மை அழைத்துச் செல்கின்றன. மேற்கு உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்டு வடஇந்தியாவின் பெரும்பகுதிகளில் (வேத காலத்தின் இறுதிக் கட்டத்தையும் வேத காலத்துக்குப் பிந்தைய கட்டத்தையும் சேர்ந்த பல இடங்களில்) செய்யப்பட்ட அகழ்வாய்வுகளின் முடிவுகள் அப்போது மாட்டிறைச்சி உண்ணப்பட்டதை உறுதி செய்கின்றன. வெட்டுக்காயங்களோடும், தீயில் கருகிய அடையாளங்களோடும் கிடைத்த எலும்புகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதைக் காட்டிலும், கால்நடைகளின் இறைச்சி முக்கியமான உணவுப் பொருளாக இருந்திருக்கிறது என்பதற்கு வேத நூல்களில் கிடைக்கும் ஆதாரங்களை அகழ்வாய்வு ஆதாரங்களோடு இணைத்துப் பார்ப்பதே போதுமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *