உயர்வு எது?…
அறிவை, உணர்ச்சி….. வெல்வது இயல்பு!…. அறிவால், உணர்ச்சியை… வெல்வதே…உயர்வு!!……
– நெய்வேலி க. தியாகராசன் கொரநாட்டுக் கருப்பூர்
அன்னை
ஒரு வேளை நல்ல சாப்பாட்டிற்கு ஏங்கியபடி தாய் ஒட்டுத் திண்ணையில் அய்யனார்க்கு ஆடுவெட்டி ஊரைக் கூப்பிட்டு விருந்து அன்னையைக் காட்டிலும் தெருவில் நிற்கும் அய்யனார் என்ன தந்தார்…?
பாவம்
வரங்கள் அள்ளித்தரும் அய்யனார் கோயில் பூசாரி அஞ்சுகிறான் வட்டிக்காரனைப் பார்த்து….
– பெரியார் நாடு ஜோதி- ஆர்சுத்திப்பட்டு
யாரிடம் பிரார்த்தனை….?
விரலைச் சொடுக்கி விபூதி தந்திடுவார் மூடிய கைவிரித்து தங்கம் வரவழைப்பார் பார்வை ஒன்றினால் பாவங்கள் போக்கிடுவார் தொட்டு ஆசிர்வதித்து நோயெல்லாம் தீர்த்திடுவார்
இப்படி வித்தைகள் காட்டியவரை அவதாரம் என்றார்கள் கடவுளெனத் துதித்தார்கள்…
முற்பிறவி குறித்து முழுதும் அறிந்தவராம் அடுத்த பிறவியும் அறிந்தே சொன்னவராம் ஆனால், இப்பிறவி எப்போது முடியுமென்று அவரால் இயம்பிடத்தான் இயலவில்லை முதுமையும் நோயும் அவரையும் தாக்க பக்தர்கள் பதறினர் பிழைத்து வரவேண்டி சொந்தங்கள் விழித்தனர் சொத்துகளைப் பங்குபோட….
இவையெதுவும் அறியாமல் சுயநினைவும் இல்லாமல் சலனமின்றி மகான் கிடந்தார்
இதுவரை அவரைப் பிரார்த்தித்தவர்கள் அவருக்காய்ப் பிரார்த்தித்தார்கள்
கடவுளே அவர்தானே யாரிடம் பிரார்த்தனை…?
– அருணா சுந்தரராசன் , மானாமதுரை
மூலையும் மூளையும்
அக்னி மூலை வாயு மூலை ஈசான மூலையென இல்லங்களில் இவைகள் எங்கெங்கோ இடம் பெற்றாலும், இன்னும் சிந்திக்காமலும், செயல்படாமலும் நந்தியாய் உள்ளது நாளும் நமது மூளை!
அ டி
எந்தத் தவறும் செய்யாத எங்கவீட்டு மகாலட்சுமிகள், ஏழுமலையான் சன்னதியில், ஏனோ படுகிறார்கள், இன்னமும் செருப்படி! வரும்படி பெருக்கிட வழிதேடும் வகைவிட்டு, உருப்படி ஆவதற்கும் உரியநூல் படிப்பதுவிட்டு, துருப்பிடித்த மூளையை தோழனாய்த் தொட்டு செருப்படி படுவதோ சிறப்பினை இழப்பதோ!
– தமிழ்ப்பித்தன் – புனல்வேலி
சிறுத்தைப் பயணம் நிறுத்து
பச்சை எழுதிய உச்சி மலைகளின் பாதை தடவிப் பாதம் பதித்து நாமக் கடவுளைக் காணப் போகிறார் நம்பிக்கை உந்திய பற்றுப் பயணியர்
லட்டுப் பெருமான் கொட்டிக் கொடுப்பான் என்றெதிர் பார்ப்பில் உண்டியல் நிரப்புவர் செழித்தது கோயில், உயர்ந்தன மாடம் போக்கு வரத்து வசதி மிகுந்தது தங்கி உறங்கத் தாராள இடங்கள்
லட்டு கிடைத்தது, வேறென்ன கிடைத்தது? மொட்டைப் பக்தர்கள் மொழிந்தால் அறியலாம் தினமும் மணக்கும் திருவேங்கடத்தான் குபேரக் கடன் இன்னும் தீர்ந்தபாடில்லை அவரும் தொலைக்காட்சி நடத்துகின்றாரே பிள்ளைவர மருத்துவர் விளம்பரம் தாங்கி! காக்கும் கடவுள் காட்டில் சிறுத்தைகள் தாக்கும் நிகழ்வுகள் மிகுகின்றனவே! நடந்து மலையேறி வரம்பெற முனைவோர் குடும்பக் குழந்தைகள் குதறப்பட்டன! கீறிக் கிழித்தல் சிறுத்தை இயல்பு கோடிகள் வாங்கும் கோயில் ஆழ்வார்கள் வேடிக்கை பார்த்து விளக்கம் சொல்லாமல் ஆடிப்போனவரை அணைக்க வருவரா? நாடி தக்க நடவடிக்கை எடுப்பரா?
வாணலி யிலிருந்து அடுப்பில் விழுதல்போல் பிரச்சினைக்குத் தப்பிச் சிறுத்தைபால் சிக்கவா? ஆபத் பாந்தவன் உறங்கட்டும் அவனைத் தேடும் பயணங்கள் தேவையா? நிறுத்துவோம்!
– நீலமணி
|