கம்பியிலே தொங்கலாம்! கண்டுகளிக்கலாம்!
இரவு விரைவில் சென்று விட்டது. கப்பல் பெலீசிலிருந்து 230 கி மீ. தொலைவே உள்ள ரோவடான் தீவில் மிகவும் அழகான இடமான மகாகணி வளைகுடாவில் நின்றது.
வட அமெரிக்காவிற்கும் தென் அமெரிக்காவிற்கும் நடுவே கவுடமாலா, ஈகுவடேர், நிக்கராகுவா, எல்சால்வடார், கோசுடாரிகா, பெலீசு, ஹன்டுராசு, பானமா போன்ற நடு அமெரிக்க நாடுகள் உள்ளன.
ரோவடான் தீவு ஹான்டுராசு நாட்டைச் சேர்ந்தது. ஹான்டுராசு பழைய மாயன் நாகரீக நாடாக இருந்தது. 1502இல் கொலம்பசு வந்த பின் 300 ஆண்டுகள் ஸ்பேனிசு ஆட்சியிலிருந்து 1821இல் விடுதலை பெற்றது. நடு அமெரிக்க நாடுகளை இணைக்கும் பல முயற்சிகள், பல அரசியல் மாற்றங்கள் என்று எவ்வளவோ நடந்துள்ளது. தற்போது அமெரிக்க அய்க்கிய நாட்டுடன் வணிக, படை உறவுகளுடன் உள்ள நாடு. ஏழை நாடு தான்.
மகாகணி வளைகுடா (Mahogany Bay) அமைந்துள்ள இடம் ஒரு வளைகுடா. அமைதியான பெரிய ஏரி போன்ற கடல். உல்லாசப் பயணிகளின் மகிழ்விடம். அங்கு உள்ள பல சுற்றுலாவில் நாங்கள் இரண்டைத் தேர்ந்தெடுத்தோம்.
முதலில் அந்தத் தீவைச் சுற்றிக் காட்டினார். மாறு பட்ட மிருகங்கள் அழகான குரங்கு வகைகள், பறவைகள் பார்த்தோம். பின்னர் அந்த வேங்கை மரக் (Mahogany) காட்டின் மலைப் பகுதிக்குச் சென்றோம்! எதற்காகவென்றால் ஆம்! கம்பியில் தொங்குவதற்காக!
அங்கே அழகிய வேங்கை மரங்களும், மற்ற மரங்களும் நிறைந்த ஆழமான பள்ளத் தாக்கு. ஒரு மலையிலிருந்து அடுத்த மலைக்குச் செல்லும் நீண்ட கம்பிகள். அதில் தொங்கிச் செல்ல வேண்டும். ஏன் இந்த வம்பு? முதலில் அச்சமாக இருந்தாலும் குரங்கிலிருந்து பிறந்தவர்கள் தாமே நாம் என்று துணிந்து சென்றோம். மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் எல்லாம் செய்து மகிழ்ச்சியில் திளைக்க வைத்தார்கள். முதலில் கம்பிகள் நன்றாக மரங்களில் அடிக்கப்பட்டுள்ளன. மிகவும் வலுவானவை. இரண்டு கம்பிகள் செல்லும். அவற்றில் தொங்குவதற்கான கொக்கிகள் நல்ல வலுவானவை. நாம் தொட்டிலில் அமரும் படியான தோல் பட்டைகள். அதை அந்த கொக்கிகளில் மாட்டி விடுவார்கள். அந்தக் கம்பிகள் முதலில் இறங்கு முகமாகவும், பின்னர் ஏறு முகமாகவும் இருக்கும். ஆகவே முதலில் விரைவாகச் செல்லும் பின்னர் அடுத்த மேடைக்கு வரும் போது வேகம் குறைந்து அங்கு நிற்பவர்கள் நம்மை இறக்கி விடுவார்கள். பின்னர் அடுத்த தொங்கும் படலம். இது மாதிரி நீண்டு கொண்டே போகும் பள்ளத் தாக்குகள்.
போகும் வேகமும் தூரமும் மிகுந்து கொண்டே இருக்கும். இது மாதிரி 7 முறை மொத்தம் மூன்று மைல் தொலைவு! ஆனால் போனதே தெரியவில்லை. வெற்றிச் சாதனை புரிந்த பெரு மகிழ்ச்சி (இன்னும் வயதாகவில்லை என்ற நினைப்பை உண்டாக்கியது!) கீழே 500 அடியாவது இருக்கும். இது சிப் லைன் (Zip Line) என்று பல நாடுகளில் வந்து விட்டது. நாங்கள் முதன் முதலில் 2008 இல் கோசுடாரீகாவிலும், பின் ஒரு முறை 2013இல் ஹவாயிலும் சென்றிருந்ததால் மற்றவர்களைப் போல அவ்வளவு அச்சமில்லை. மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.
பின்னர் அங்கிருந்து தீவின் மறு பகுதியைப் பார்த்துக் கொண்டே ஒரு அழகிய கடற்கரைக்கு வந்தோம்.
அங்கு சென்றதுமே மருத்துவர் இளங்கோவனுக்கு முதலில் கண்ணில் பட்டது அங்கே கடற்கரை ஓரத்திலே மசாஜ் செய்யப் போடப்பட்டிருந்த மேசைகள் உள்ள இடந்தான்! சிறு வயதிலிருந்தே பாட்டிகள் ஞாயிறு தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி, பெரிய குடும்பமாகக் கறி விருந்து உண்ட நினைவைப் பல முறை சொல்லி-யிருக்கின்றார்! அமெரிக்கா வந்த புதிதில் இங்கேயும் ஞாயிற்றுக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளியலறையை அழுக்குப் படுத்தியதும் உண்டு! இப்போது அந்த எண்ணெய் குற்றாலத்தில் மட்டுந்தான் உள்ளது போலும்!
அங்கு கடற்கரையிலேயே எண்ணெய் தடவி ஒரு மணி நேரம் உடல் அமுக்கப்பட்டுப் பின்னர் கடலில் மகிழ்வுடன் விழுந்தார். அங்கிருந்த சிறிய படகோட்டியிடம் பேசி விட்டு மிக்க மகிழ்வுடன் வந்தார்!
அந்தப் படகோட்டி அவரது சிறிய படகில் கயிறு கட்டி அந்தக் கயிற்றை நாங்கள் பிடித்துக் கொள்ள அவர் அங்கிருக்கும் மிகவும் அழகான பவளப் பாறைகளைக் காண்பிப்பார் என்றார். எவ்வளவு பவளப் பாறைகளையும் மீன்களையுந்தான் பார்ப்பது என்றதற்கு, இங்குள்ளது போல உலகத்தில் வேறு எங்குமே கிடையாது என்று தான் கூகுள் மாமா சொல்கின்றது என்று ஆவலை உண்டாகினார்.
சரியென்று அங்கே வாடகைக்கு முகக் கண்ணாடி, முக்குக் குழாய் குறைந்த விலையில் தந்ததை மாட்டிக் கொண்டுச் சென்றோம்.
உண்மையிலேயே மிகவும் ஆழமான பவளப் பாறைகள். நூறடிக்கும் மேலேயாவது இருக்கும். அவ்வளவு உயரமானப் பவளப் பாறையை நாங்கள் வேறு எங்கும் பார்த்ததில்லை. அவை பாறைகள் அல்ல. வாழும் மிகவும் மென்மையான உயிரினம். தயை செய்து அதைத் தொடாதீர்கள், அதன் மேல் நிற்காதீர்கள் என்று அறிவுறுத்தப் பட்டிருந்தோம்.
அந்த இடத்தை மிகவும் நன்கு அறிந்தவர் ஆதலால் எங்களுக்கு அழகு அழகான இடங்களையும், மீன் வகைகள், ஆமைகள் என்று காண்பித்தார். நாங்களும் நீச்சல் அடிக்காமல் மிகவும் எளிதாகக் கயிற்றைப் பிடித்துக் கொண்டே சென்று புது மாதிரியான கடல் அனுபவம் பெற்றோம்.
செல்வம் மிகுந்த படகுகளில் சென்றதை விட இந்த எளிய படகோட்டியின் சிறிய படகிலே சென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவரிடம் பேசியதற்கு மேலேயே பணங்-கொடுத்து எங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தோம்.
எந்த மகிழ்ச்சியும் நீண்டதல்லவே! கப்பலுக்குச் செல்லும் நேரம் வந்து விட்டது, வண்டியில் ஏறுங்கள் அனைவரும் என்ற அழைப்பு எனும் பேரில் ஆணை வந்து மகிழ்ச்சியைக் குறைத்தது! வாருங்கள் போவோம்!