சென்னை இராவணன் – தாராசுரம் என்.எஸ்.வாசன் – மதுரை பி.எஸ்.செல்வா, கலைத்தூதன் – மதுரை பொன்னம்மாள் சேதுராமன்
– கி.வீரமணி
கழகக் கொள்கைப் பிரச்சாரப் பணிகளில் இசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சி செய்து இயக்கத் தொண்டாற்றிய செம்மல்களின் பட்டியல் ஒரு நீண்ட பட்டியல் ஆகும்.
திராவிடர் கழகப் பிரச்சாரத்தில் முதலில் இசைக் கச்சேரி என்று இல்லாமல், நல்ல குரல் வளம் உள்ளவர்கள் பாடுவாகள். கூட்டம் சேருவதற்கே இந்த இசை இன்பம் மக்களை ஈர்க்கும். அது தற்போது பெரிதும் குறைந்து விட்டது! சென்னையில் துறைமுகம் கழகத் தலைவராக இருந்தவர் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.வி.சண்முகம். அவரது அன்பு மகன் இராவணன். அருமையான குரல்வளம் உள்ளவர். ஹார்மோனியம் அவருடைய விரல்கள் மூலம் பாடிப் பரவசத்தை ஏற்படுத்தும்.
கூட்டத்தில் சென்று இராவணன் குழு கலை நிகழ்ச்சி (நாகம்மையார் இன கலை மன்றம் என்று பெயர் என்று நினைவு) பாடத் துவங்குவர்.
வாழ்விக்க வந்தவரே
வைக்கம் தந்த மாவீரா
வானோங்கும் ஞானவடிவே
வணக்கம் அய்யா பெரியாரே!
பொன்னுருவாகிய பொன்னகர் தங்களர்
அண்ணல் எங்கள் அய்யா பெரியாரே…
தண்மதி பொங்கும் தமிழர்கள் வாழ்ந்திட
தன்னைத் தந்த பெரியாரே…
(எங்கள் அய்யா பெரியாரே…)
ராமன் குடிகாரன் சீதை விபச்சாரி
என்று சொன்னவரும் யாரு
இல்லை கடவுளென பிள்ளையார் சிலையைப்
போட்டுடைத்தவரும் யாரு…
(எங்கள் அய்யா பெரியாரே…)
சூத்திரன் என்ற இழிச்சொல் அகற்றிய
ஜோதி எங்கள் பெரியாரே
சுயநலம் இல்லாது பதவியும் கொள்ளாது
தொண்டு செய்த பெரியாரே
(எங்கள் அய்யா பெரியாரே…)
ஆயிரம் சாமியும், ஆயிரம் ஜாதியும்
ஆகாது என்றவர் யாரு
ஆண்டான் அடிமை ஆரியர் பறையர்
கூடாது என்றவர் யாரு
(எங்கள் அய்யா பெரியாரே…)
இந்தப் பாடலை தோழர் இராவணர் பாடும்பொழுது கூட்டமே உணர்ச்சி வயப்பட்டு பெரும் கரஒலி எழுப்பும். ஆர்மோனியம் அவரிடம் செல்லமாகப் பேசும்.
தாராசுரம் என்.எஸ்.வாசன் அவர்களும் மிக அருமையான இசை நிகழ்ச்சியை தனது வெண்கல நாதக் குரலில் பாடி நடத்துவார்!
வெண்ணிற தாடி
பொன்னிற மேனி
எங்கள் தங்கம் தந்தை பெரியார்!
ஆரியத்தைக் குலைநடுங்கச் செய்யும் எங்கள் அய்யா பெரியார்
என்றெல்லாம் பாடுவார்.
தோள்தட்டி, தொடைதட்டி வாருங்களே!
எங்கள் தோழர்களே! என்ற வரிகள் எல்லாம் இன்னும் நம் காதுகளிலே ஒலித்துக் கொண்டே இருக்கிறது!
குடந்தை என்.ஜி. ராசன் வாசுகி கலைக் குழுவினர் அய்யாவின் தேர்தல் சுற்றுப் பயணத்தின்முன் பாடி நாட்டுக்கு அறிமுகமானர்கள். அதுபோலவே மதுரை பி.எஸ்.செல்வா, கலைத்தூதன் ஆகிய வாழ்வினையரின் கலை நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது! நாடக நடிகையாக இருக்கும்போதே செல்வா நல்ல குரல்வளம் கொண்ட பெண். கலைத்தூதன் நல்ல பாட்டு, வசனம் எழுதும் ஆற்றலாளர். இருவரும் இணையர்களாகி நடத்திய கலைக்குழுவினரின் பாட்டு,
ஆணும் பெண்ணும் சேர்ந்தாங்க –
அழகான பிள்ளை பிறக்குது – அதிலே எதுக்கு பிரம்மா நுழையறாறு!
என்று பாடுவார்கள். அனைவரது கைத்தட்டல்களையும் பெற்று கலகலப்பை உண்டாக்கும்!
மதுரை பொன்னம்மாள் சேதுராமன் இசைக்குழுவும் மிகவும் பிரபலமாகும்!
பலகாலம் கழக மேடைகளில் பாடி பிரபலமானார்; பிறகு ஏதோ சிற்சில காரணங்களால் அவரே, தன் புகழுக்குக் களங்கம் தேடிக்கொண்டார்!
இப்படி மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்தவர்கள் பல தோழர்கள். அவர்களது இறுதி நிலைப்பாடு சிலரைப் பொறுத்தவரை சரியில்லாது போயினும், அவற்றைப் பொருட்படுத்தாது, செய்த தொண்டுக்கு நாம் நமது பாராட்டைத் தெரிவித்து, வீரவணக்கம் செலுத்துவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்க முடியும் இல்லையா?