தங்க நகை இல்லாத குடும்பங்களே இருக்க முடியாது. குண்டுமணி அளவு தொடங்கி கிலோ கணக்கு வரை, அவரவர் வசதிக்கேற்ப எல்லோரும் நகை வாங்கி வைத்திருக்கிறோம்.
போட்டு அழகு பார்க்க மட்டுமல்லாமல், முதலீடாகவும் கருதி வாங்குகிறோம். விலை குறையும்போது, அட்சய திருதியை அன்று, பண்டிகை போனஸ், இன்னும் பல ஆண்டுகள் கழித்து வரப்போகிற மகள் திருமணம் எனச் சிலர் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தவற விடுவதில்லை. ஆனால், இப்படி வாங்கும் தங்கத்தை எந்தளவு பாதுகாப்பாக வைத்திருக்கிறோம்? தினமும் நகைத் திருட்டுச் செய்திகள் வெளியாகின்றன. பெரும்பாலான திருட்டுகளில் நகையுடன் வீட்டிலிருப்பவர்கள் உயிரும் போவதுதான் பெரும் சோகம். எனவே, நகையை மட்டுமல்ல, நம்மையும் பாதுகாக்க வங்கி லாக்கர்களைப் பயன்படுத்துவது சிறந்த வழி!
யார் லாக்கர் ஓபன் செய்யலாம்?
லாக்கர் ஓபன் செய்வதற்குக் குறிப்பிட்ட வங்கியில் கணக்கு வைத்திருக்கவேண்டும். எனவே, கணக்கு இருக்கும் வங்கியில் லாக்கர் இருக்கிறதா எனப் பார்க்கவும். இல்லையென்றால், லாக்கர் வசதியிருக்கும் ஒரு வங்கியில் கணக்கு தொடங்கவேண்டும். ஒருவர் தனியாகவும் இரண்டு பேர் அல்லது மூன்று பேர் சேர்ந்தும் லாக்கர் ஓபன் செய்யலாம். ஆனால், அனைவருக்கும் வங்கியில் கணக்கு இருக்கவேண்டும். லாக்கருக்கும் நாமினி வசதி உண்டு. அடிக்கடி லாக்கரைத் திறக்கும் அவசியம் இருந்தால், நமது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வங்கியில் லாக்கர் ஓபன் செய்வது சிறந்தது. ஆனால், ஓர் ஆண்டுக்கு அதிகபட்சமாக 24 முறை மட்டுமே லாக்கரை இலவசமாகத் திறந்து பார்க்க முடியும். இதற்குமேல் லாக்கரை திறந்து பார்க்க ஒவ்வொரு முறையும் கட்டணம் செலுத்தவேண்டும்.
லாக்கர் கட்டணம் எவ்வளவு?
ஒவ்வொரு வங்கியிலும் குறைவான அளவே லாக்கர் வசதிகள் இருக்கும் என்பதால், லாக்கருக்கு டிமாண்ட் அதிகம். எனவே, லாக்கர் ஓபன் செய்ய, முதலில் ஒரு குறிப்பிட்ட தொகையைக் குறிப்பிட்ட காலத்திற்கு வங்கியில் வைப்புத் தொகையாக வைக்கச் சொல்லுவார்கள். இந்தத் தொகை வங்கிக்கு வங்கி மாறுபடும். ஆனால், இந்த வைப்புத் தொகைக்கு வட்டி உண்டு என்பதால், இது ஒரு வகையில் முதலீடு மாதிரிதான். வாடகை போல், லாக்கருக்கு என ஆண்டிற்கு ஒருமுறை குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாகச் செலுத்தவேண்டும். நமது கணக்கில் இருப்பு இருந்தால், வங்கியே அத்தொகையை எடுத்துக்கொள்ளும். லாக்கர் கட்டணமும் வங்கிக்கு வங்கி மாறுபடும். நகரம், புறநகர், கிராமம் என வங்கி அமைந்துள்ள பகுதியைப் பொறுத்தும், வங்கி லாக்கரின் அளவைப் பொறுத்தும் இந்தக் கட்டணம் வேறுபடும்.
லாக்கரைத் திறப்பது எப்படி?
ஒவ்வொரு லாக்கருக்கும் இரண்டு சாவிகள் இருக்கும். ஒரே நேரத்தில் இரண்டு சாவிகளையும் பயன்படுத்தினால்தான் லாக்கரைத் திறக்க முடியும். ஒரு சாவி வாடிக்கையாளரிடமும், இன்னொரு சாவி வங்கியிலும் இருக்கும். மேலும், தேவைப்பட்டால் தனியாகவும் நாம் ஒரு பூட்டை போட்டுக்கொள்ளலாம். இதன் சாவியை வங்கிக்குக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை. லாக்கரை ஓபன் செய்ய, முதலில் வங்கியில் உள்ள ஒரு லெட்ஜரில் கையொப்பமிட வேண்டும். பிறகு லாக்கர் பொறுப்புப் பணியில் இருப்பவர், வங்கியில் உள்ள சாவியைக் கொண்டு வந்து திறக்க உதவுவார்.
நம்மிடம் உள்ள லாக்கர் சாவி தொலைந்தால்?
லாக்கருக்கு மாற்றுச் சாவி தயாரிப்பதற்கு அல்லது லாக்கரை உடைத்துத் திறப்பதற்கு மற்றும் இதனுடன் சார்ந்த நடவடிக்கைகளுக்கான செலவுகள் அனைத்தும் வாடிக்கையாளரிடமிருந்தே வசூலிக்கப்படும். இச்செயல் முழுக்க, வாடிக்கையாளர் முன்னிலையிலேயே நடைபெறும்.
லாக்கரில் என்னென்ன வைக்கலாம்?
நகைகள் மட்டுமல்லாமல், பத்திரம், சான்றிதழ்கள் உள்பட எதனையும் நமக்கு வழங்கப்பட்ட இடத்துக்குள் வைத்துக் கொள்ளலாம். லாக்கரில் என்ன வைத்திருக்கிறோம் என்பதை வங்கிக்குத் தெரிவிக்கவேண்டிய அவசியம் இல்லை. அதேபோல், ஒவ்வொரு முறையும் நாம் திறக்கும்போது என்ன எடுத்தோம், என்ன வைத்தோம் என்பதை வங்கி கேட்காது.