பிள்ளை இல்லையென்று ஆண் மறுமணம் செய்யக் கூடாது
அக்காலத்தில் அதிகம் காணப்பட்ட இவ்வழக்கம் இன்று அருகிக் காணப்படுகிறது. குழந்தையில்லையென்றால் அதற்குப் பெண்ணே காரணம் என்று தவறாக எண்ணும் அறியாமையே இதற்குக் காரணம். குழந்தையின்மைக்குப் பெண்ணைக் காட்டிலும் ஆணே பெரும்பாலும் காரணம் என்பது ஆய்வில் கிடைத்த உண்மை. பெண்ணுக்குக் கருக்குழாயில் அடைப்பு என்ற எளிய காரணம்தான். ஆனால், ஆணுக்கு விந்தணுவின் எண்ணிக்கை குறைவு, விந்தணு இன்மை போன்ற முதன்மையான காரணங்கள் உண்டு.
ஆனால், இந்த உண்மைகளை அறியாத மக்கள், குழந்தை இல்லையென்றதும் அதற்குப் பெண்ணே முழுக் காரணம் என்று முடிவு கட்டி, மலடி என்று முத்திரை குத்திவிட்டு, ஆணுக்கு மறுமணம் செய்துவிடுவர். அதிலும் குழந்தை பிறக்காது. மூன்றாம் மணம்கூட நடப்பதுண்டு. இவை அறியாமை, தவறு என்பது மட்டுமன்று குற்றமுங்கூட. குழந்தையில்லையென்றால் கணவன் மனைவி இருவரும் உடலாய்வு செய்து யாரிடம் குறையென்று கண்டறிந்து சரி செய்தால் கட்டாயம் குழந்தை பிறக்கும். அறிவியல், மருத்துவம் வளர்ந்துள்ள இக்காலத்தில் இது பெரும்பாலும் சாத்தியம். எனவே, குழந்தையில்லையென்றால் ஆண்மறுமணம் செய்யக்கூடாது. பெண்களையும் குறை சொல்லக் கூடாது.
கடும் வெய்யிலில் தலையில் தொப்பியில்லாமல் செல்லக் கூடாது
கடும் வெய்யில் மூளையைத் தாக்கி, உயிரைப் போக்கிவிடும். குறிப்பாக 30 வயதுக்கும் மேற்பட்டவர்கள் கடும் வெய்யிலில் தொப்பியில்லாமல், குடையில்லாமல் செல்லக் கூடாது. அளவிற்கு அதிக வெப்பம் மூளையைத் தாக்குவதை சூரிய இடி என்பர். இது உயிரைப் பறிக்கக் கூடியது. எனவே, கடும் வெய்யிலில் தலையில் வெய்யில் தாக்காது குடைபோன்ற ஒரு பாதுகாப்புடன் செல்ல வேண்டும்.
மாதவிலக்கை மாத்திரையால் தள்ளக் கூடாது
சில பெண்கள் விரத காலத்தில் அல்லது வேலை அதிகம் உள்ள நேரத்தில் மாதவிலக்கு வருவதாக இருந்தால், அதைத் தள்ளிப் போட மாத்திரை சாப்பிடுவது இன்று பெருகி வருகிறது. இது தவறு. உடல்நலத்தைப் பாதிக்கும். இயற்கையான வெளிப்பாடுகளை எப்போதும் அடக்குவதும், தடுப்பதும் கேடுதரும். எனவே, இது போன்ற செயல்களில் கட்டாயம் ஈடுபடக் கூடாது. எந்தக் கடவுளும் அப்படித் தள்ளிப் போடச் சொல்லவில்லை. எல்லாமே, அறியாமையால் நமக்கு நாமே விதித்துக் கொள்கின்ற தண்டனைகள்தான்.
தும்மல், இருமல், கொட்டாவி, சிறுநீர், மலம், இவற்றை அடக்காமல் வெளிப்படுத்த வேண்டும்.
வீட்டுக்கருகில் சாக்கடை தேக்கக்கூடாது
சாய்கடை என்பதே சாக்கடையானது. கழிவுநீர் தேங்காமல் சாய்வாய் ஓடுவதே சாய்கடை. அப்படித்தான் சாக்கடை அமைக்க வேண்டும்.
சாக்கடைத் தேங்கினால்தான் அது சகதியாகி, கெட்ட நாற்றம் உருவாகி, கொசு உற்பத்தியாகி உடல்நலத்தைக் கெடுக்கிறது. சாக்கடை அதன் பெயருக்கு ஏற்ப சாய்வான வழியில் ஓட வேண்டும். தேங்கக் கூடாது.
செயற்கை பானங்கள் அருந்தக் கூடாது
செயற்கை உணவுகள் எல்லாமே உடல் நலத்திற்குக் கேடு பயப்பவையே. குறிப்பாக, குளிர்பானங்கள் மிகவும் கேடு கொடுப்பவை.
இயற்கைப் பழச்சாறு, வெல்லம் கலந்த நீர், மோர், எலுமிச்சை இஞ்சி கலந்த சாறு, கரும்புச் சாறு, அருகம்புல் சாறு அருந்தலாம். நெல்லிக்காய் சாறு கலந்த நீர் அருந்தலாம்.