இனி நுகர்வோர் பாதுகாப்பு வளையத்தின் கீழ் பல்கலைக்கழகங்கள்…

அக்டோபர் 01-15

உணவுப் பண்டங்களும், மருந்தும், மருத்துவமும், தொலைக்காட்சியும், செல்பேசியும், நுகர்வோர் சட்டத்தின்கீழ் வந்து நீண்டகாலம் ஆகிவிட்டது. இன்று கல்விக்கூடங்களும், பல்கலைக்கழகங்களும் மாணவர்களுக்கு கல்வி அளிப்பது, Consumer Protection Act– விளக்கப்பட்டது போல், சேவை என்ற சட்டத்திற்குள் வருகிறது. கல்வி நிலையங்கள் மூலம் மாணவர்களுக்குக் கிடைக்கின்ற கல்விச் சேவைகளுக்காக கட்டணங்கள் மாணவர்களால் வழங்கப்படுகின்றன என்ற காரணத்தால், கல்விச் சாலைகள் நுகர்வோர் பாதுக்காப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுகின்றன. ஒரு மாணவன் ஒரு கல்விச்சாலையுடன், பல்கலைக் கழகத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு, வகுப்புக்களில் ஆஜராவதற்காக, தேர்வுகள் எழுதுவதற்காக, கட்டணம் செலுத்தி, அந்த கல்வி கூடத்தின் சேவையை பெறும்போது அந்த மாணவர், நுகர்வோர் ஆகிறார். அவர் செலுத்தும் கட்டணம் அந்தக் கல்லூரியால் ஏற்றுக் கொள்ளப்படும்போது, அவர் கல்விச் சேவைகளின் நுகர்வோர் ஆகிறார் என்று நீதி கூறுகிறது.

Consumer Protection Act 1986-இன் கீழ் கல்விச்சாலையும் நுகர்வோருக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளது. பரீட்சைகள் நடத்துவது, முடிவுகள் தெரிவிப்பது என்பவையெல்லாம் CPA சட்டத்தின் கீழ் சேவைகள் என்ற பிரிவிற்குள் வருகின்றன.

எனவே நுகர்வோர் நீதிமன்றத்தின் ஆளுமைக்குள் கல்விக்கூடங்கள் வருகின்றன. ஒரு கல்லூரியின் செயல்திட்டத்தால் குறைக்கப்பட்டுள்ள விதிகள் சட்டப்பூர்வமானவையா, இல்லையா என்று பரிசீலனை செய்வது அவற்றின் எல்லைக்குள் வராது என்று நுகர்வோர் நீதிமன்றங்கள் கூறுகின்றன.

ஏராளமான 5 நட்சத்திரப்பள்ளிகளும், கல்லூரிகளும் புற்றீசல்போல் பெருகிவரும் இன்றைய நாளில், நுகர்வோர் பாதுகாப்பு என்ற திசையில், இது பாராட்டத்தகுந்த முடிவு. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இருக்கும் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களுடன் இந்தக் கல்விக் கூடங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள். கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். சாதாரண ஜனங்களுக்கு இது முடியாத காரியம். பல கல்லூரிகள் தகுதி பெறத் திறமையற்ற ஆசிரியர்களை பணியில் அமர்த்துகிறார்கள்.

சில கல்லூரிகளில் ஆசிரியர் குழுவே இருப்பதில்லை. பரீட்சைகள் ஒழுங்காக நடத்தப்படுவதில்லை. முடிவுகள் பல மாதங்களாக, வருடங்களாக வெளிவருவதில்லை. சான்றிதழ்களும் வழங்கப்படுவதில்லை. பெரும்பான்மையான மோசடிக்கல்லூரிகளும், பள்ளிகளும் பணம் சம்பாதிக்கும் வர்த்தக சிந்தனையுள்ளவர்களால் நடத்தப்படுகின்றன. கடந்த 10 வருடங்களில், கல்வி என்பது, சேவை என்ற நிலையிலிருந்து, தொழில் என்ற நிலைக்கு இடம் பெயர்ந்துள்ளது. ஏமாறுவது, பணம் இழப்பது இவையெல்லாம் ஒருபுறமிருந்தாலும், பல மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதுதான் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது.

பெரும்பான்மையான வழக்குகளில், கல்வி கற்றுக் கொடுப்பது ஒரு சேவை என்று உச்சநீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கியுள்ளது. பல வழக்குகளில்  Roll Number மாணவர்களுக்கு வழங்காதது, அட்மிஷன் விண்ணப்பம் குறித்து முடிவு எடுப்பதில் ஏற்பட்ட தாமதம், கல்லூரியின் அங்கீகாரம் பற்றி விளம்பரத்திலும், செயல்திட்டத்திலும் தரப்பட்ட தவறான தகவல்கள், மாணவன் முதலில் கொடுத்த கல்லூரிக் கட்டணத்தை திருப்பிக் கொடுக்காதது இவையெல்லாம் சேவையில் உள்ள குறைபாடுகள் என்று கருதப்படுகின்றன.

அண்மையில் வெளிவந்த தகவல்கள்படி, பல்கலைக்கழகங்கள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருகின்றன. “Ram Kumar Aswani (Vs) M / SA.K.Structural Foam Ltd   என்ற வழக்கில் 1993இல் வழங்கப்பட்டத் தீர்ப்பு, தன்னுடைய பரீட்சை முடிவுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மனு செய்யும் ஒரு மாணவர் நுகர்வோர் (Consumer) என்ற விளக்கத்திற்குள் வருகிறார். Registrar H.P University (Vs) Suresh Kumar என்ற வழக்கில் 2007  இல் வழங்கப்பட்ட தீர்ப்புப்படி, பல்கலைக்கழகத்தின் தவறால், புகார் மனுதாரருக்கு M.A. வகுப்பில் சேர முடியவில்லை அவர் பரீட்சையில் வெற்றிபெறவில்லை என்று பல்கலைக்கழகம் தவறான தகவல் தந்தது. பல்கலைக்கழகம் 50,000/- இழப்பீடு தரவேண்டுமென்று நுகர்வோர் நீதிமன்றம் ஆணையிட்டது. Guru Nanak Dev University (Vs) Jagjit Singh என்ற வழக்கில், 2005இல் புகார் மனுதாரரிடமிருந்து அனுமதிக்கட்டணம் வசூலித்தப்பிறகு,  GNDU Amritsar அனுமதி மறுத்தது. பல்கலைக்கழகம், வசூலித்தக் கட்டணத்தையும், வட்டியையும் திருப்பிக்கொடுக்குமாறு நுகர்வோர் அமைப்பு உத்தரவிட்டது.

Director Mahatma Gandhi University (Vs) Gopalkumar   என்ற வழக்கில், 1999  இல் பல்கலைக்கழகம் மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலித்தப்பிறகு, வகுப்புகள் ஆரம்பிக்கப்படவில்லை. குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்ததால், வகுப்புக்கள் நிறுத்தி வைக்கப்பட்டன, ரத்து செய்யப்பட்டன. பல்கலைக்கழகம், கட்டணத்தொகையையும், இதர செலவுகளையும் திருப்பிக் கொடுக்குமாறு, நுகர்வோர் நீதிமன்றம் ஆணையிட்டது.

மேலும் கடந்த காலங்களில், கல்விநிலையங்கள் தரும் தவறான விளம்பரங்கள், நியாயமற்ற வர்த்தக முறைகளுக்கு வழியமைத்துக் கொடுக்குமாறு, நுகர்வோர் நீதிமன்றங்கள் கருத்துத் தெரிவித்தன. அத்தகைய சட்டத்திற்கு புறம்பான விளம்பரங்களை உடனடியாக நிறுத்த வேண்டுமென ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. ஒரு மாணவர் Roll Number கிடைக்காததால் பரீட்சை எழுதவில்லை. இதன் விளைவாக, அவர் கல்வியை ஒரு வருடம் இழந்தார். இது சேவைக்குறைபாடு (Deficiency Of Service) என்று நுகர்வோர் நீதிமன்றங்கள் கருத்துத் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *