”அகண்ட ஹிந்துஸ்தானமும்” அகன்ற ‘ஹிந்து நாடும்’

அக்டோபர் 01-15

நேப்பாளம் நமது அண்டை நாடு. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகின் ஒரே ஹிந்து நாடு என்று தன்னைப் பிரகடனப்படுத்திய மதச்சார்பு நாடாகத் திகழ்ந்த நாடு.

அங்கே ஏற்பட்ட மக்கள் புரட்சியினால் ஹிந்து மன்னராட்சி முடிவுக்கு வந்தது. மக்களாட்சி மலர்ந்தது.

தனி அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 20.9.2015 அன்று முதல் இந்தப் புதிய அரசியல் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.

இதில் சில திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று சொல்லி சில பகுதியினர் கிளர்ச்சிகள் கூடச் செய்தனர்.

இந்தியாவுக்கு 1751 கி.மீ. தூரத்துக்கு எல்லை கொண்டுள்ளது.

நேபாள நாடு இதுவரை இருந்த ஹிந்து நாடு என்ற மத அடையாளத்தை மாற்றிவிட்டது. இந்தப் புதிய அந்நாட்டு அரசியல் சட்டத்தில், மதச்சார்பற்ற ஜனநாயகக் குடிஅரசாகத் தன்னை பிரகடனப்படுத்தி உயர்ந்துள்ளது! அரசியல் சட்டத்தில் மத மற்றும் கலாச்சார சுதந்திரம் அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2 கோடியே 80 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட நாடு நேப்பாளம். 7 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

தகு இன மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளை உள்ளடக்கி தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று அந்த இன மக்கள் போராடி வருகின்றனர். மாதேஷிகள் மக்களின் இத்தகைய போராட்டங்கள் நீடித்தாலும் உலக அரங்கில் மதச்சார்பற்ற, ஜனநாயக நாடு என்று தலைநிமிர்ந்து நிற்கிறது. மக்களாட்சியின் மாண்பு காக்கும் நேப்பாளம்.

நேப்பாளத்திற்கும் இந்தியாவிற்கும் கலாச்சார உறவுகள் உண்டு. புத்தர் என்ற ஆதி பகுத்தறிவாளர் பிறந்த மண். (கபிலவஸ்து நேப்பாளத்தில் உள்ளது).

நேபாள நாட்டின் எல்லையை ஒட்டி பீகார் மாநிலம் உள்ளது.

சில ஆண்டுகளுக்குமுன் கொலைக் குற்றத்தில் தேடப்பட்ட மடாதிபதிகள் இருவர், பீகார் வழியாக நேப்பாளம் சென்று கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிவிட முயற்சித்ததும்; அதில் தோல்வியடைந்து ஆந்திர பகுதியில் கைது செய்யப்பட்டதும் சில ஆண்டுகளுக்கு முன்னே நடந்தவை!

இந்து நாடாகவே _ மனுமுறைப்படி ஆண்ட நாடாக நேப்பாளம் இருந்த காரணத்தால், அங்கே ஜாதி _ வர்ணதர்மம் _ சட்டப்படி பாதுகாக்கப்பட்டே வந்தது. புத்தபிக்கு ஒருவர் ஜாதி ஒழிப்புப் பற்றி பேசியது சட்டப்படி கிரிமினல் குற்றமாகும் என்று கைது செய்யய்பட்டார்.

நேப்பாளத்தின் அரசியல் சட்டத்தில் வந்த மாற்றத்தை இந்திய அரசு பெரிதும் விரும்பவில்லை. இவர்களுக்கு அதிர்ச்சியே,  மற்ற செய்திகளைப் பொறுத்து அல்ல; வெளியில் அப்படிக் காட்டிக் கொண்டாலும், ஹிந்து நாடு அடையாளம் போய்விட்டதே என்ற ஆத்திரம்தான் அடி நீரோட்டம் ஆகும்!

அங்கே உள்ளவர்கள், எங்கள் நாடு சுதந்திர நாடு. இதன் அரசியல் சட்டத்தில் என்ன மாற்றம் – அது எப்படி அமைய வேண்டும் என்பது, தேர்ந்து எடுக்கப்பட்ட எங்களது விருப்பமும் உரிமையும் ஆகும்; இதில் இந்தியா தலையிடுவது (உள்நாட்டு விவகாரம்) கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளது அந்நாடு!

அண்டை நாடுகளை நட்புறவுடன் வைத்துக்கொண்டால் அதிகமாக ராணுவத்திற்குச் செலவு செய்து, எல்லையில் தொல்லை _ சண்டை _ ஊடுருவல், கண்காணிப்பு ஆகியவற்றிற்கு நம் நிதி ஆதாரத்தை ஒதுக்க வேண்டியிருக்காது என்பது மூத்த அரசியல் ஞானிகளது கருத்தாகும்!

அகண்ட ஹிந்துஸ்தானம் என்று பா.ஜ.க. அரசின் மூக்கணாங்கயிற்றைப் பிடித்துள்ள ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரங்களின் தீர்மானம் அண்மையில்கூட அவர்களது அதிகாரபூர்வ ஏட்டில் வெளிவந்துள்ளது!

இதைவிட ஆபத்தான _ இக்கட்டான நிலை மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு வேறு இருக்க முடியுமா?

அண்டை நாடுகளின் சுமுக நல்லிணக்கம் _ உறவுக்கு உலை வைக்கும் பேச்சு, இதைவிட வேறு எதுவாக இருக்க முடியும்?

இந்தியாவை ஹிந்துராஷ்டிரமாக மாற்றுவது மட்டும் நம் வேலை அல்ல; அகண்ட ஹிந்துஸ்தானம் ஏனைய பிரிந்த நாடுகளையும், இணைத்த பெரிய நாடாக ஆக்குவோம் என்பது நாமே நம் தலையைக் கொள்ளிக் கட்டையால் சொறிந்துகொள்வது ஆகாதா?

நேப்பாளம் சென்ற ஆண்டு மிகப் பெரிய பூகம்பத்திற்கு ஆளாகிய நேரத்தில், பல நாடுகளும் உதவிட முன்வந்தன; இந்திய அரசு பெருந்தொகையை உதவியாக அளித்தது. ஆனால், அதை விளம்பரம் செய்த முறையை நேப்பாள அரசு விரும்பாமல், வேறு யாருடைய வெளி உதவியும் தேவையில்லை என்று கூறியதே, அதற்குப் பிறகும் இந்தியா   பெரிய அண்ணனாக ஆக ஆசைப்பட்டு தேவையில்லாமல் மூக்கை நுழைத்து அவமானத்தைச் சுமக்கலாமா?

இது ஒரு எச்சரிக்கை மணி _ எனவே, நம் உயரம் நமக்குத் தெரிந்து அத்துடன் உதவிக்குக் கைமாறு கேட்பது போல அவர்களது சுதந்திர சுயமரியாதைச் சிந்தனையில் _ உரிமையில் நாம் ஏன் தலையிட வேண்டும்! ஆசை வெட்கமறியாது போலும்!

– கி.வீரமணி,
ஆசிரியர்.-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *