ஒரு மரத்தில் காய் பயன்படும்; இன்னொன்றில் கனி ருசிக்கும்; சில மரங்களில் பூ அழகு; சிலவற்றில் தண்டு உணவு. ஆனால், வாழைமரத்தில்தான் அதன் அத்தனை பாகங்களும் பயன் தருகின்றன. வாழை இலையும் நாரும்கூட பயன்தரக்கூடியவையே. வேறு பழங்கள் வாங்க வழியற்ற கடைசி மனிதனும் கையில் இருக்கும் இரண்டு ரூபாயைக்கொண்டு, இப்போதும் ஒரு வாழைப்பழம் வாங்க முடியும். வாழைப்பழங்களில் பூவன், ரஸ்தாளி, செவ்வாழை, மலைவாழை, கற்பூரவள்ளி என ஏகப்பட்ட வகைகள் இருக்கின்றன.
இதில் எதை, யார் சாப்பிடலாம், எந்த வயதினர் எந்த வகை வாழைப்பழத்தைச் சாப்பிட வேண்டும், ஒரு நாளின் எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது இவையெல்லாம் நாம் பொதுவாகத் தெரிந்துகொள்ள வேண்டியவை. ஆனால், வாழைப்பழத்தில் இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. ஆறு மாதக் குழந்தை முதல் முதியவர்கள் வரை எவரும் வாழைப்பழத்தை விரும்பிச் சாப்பிடலாம். இது ஜீரணத்துக்கு மிகவும் உகந்தது. மாவுச்சத்து, புரதம், பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து, விட்டமின்கள் என, அத்தியாவசியமான பல சத்துக்களை உள்ளடக்கியது. அதனால்தான் இயற்கை உணவில் வாழைப்பழத்துக்கு அதிக முக்கியத்துவம்.
அளவில் சற்று சிறுத்து இருந்தாலும் சுவையிலும் மருத்துவக் குணத்திலும் சிறந்தது மலைவாழை. சிறுமலை மற்றும் விருப்பாச்சி மலைவாழைகள், அந்தந்தப் பகுதிகளில் மட்டுமே விளையக்கூடியவை. இது நாடியைச் சமநிலைப்படுத்தும் குணமும், கபத்தைக் கூட்டும் குணமும் உடையது. சுவாசக்கோளாறு உள்ளவர்கள் இந்த வகைப் பழத்தைத் தவிர்ப்பது நலம். நாட்டுப்பழம், உடலுக்கு உறுதியையும் குளிர்ச்சியையும் தரக்கூடியது; சிறந்த மலம் இளக்கியாகப் பயன்படக்கூடியது; பித்தத்தைக் குறைக்கும். பச்சை நாடான் பழம் உடல் உறுதிக்கும் சூட்டைக் குறைக்கவும் உதவும். பழத்தின் தோல் பகுதிக்கும் பழத்துக்கும் இடையில் உள்ள சதைப்பற்றை, தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால் நாள்பட்ட குடல்புண்கூட குணமாகும்; குடல் வலுப்பெறும். லால்குடி, தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் பரவலாகக் கிடைக்கும் பேயன் ரக வாழை, கிருமித்தொற்றைத் தடுக்கும். அதனால் உண்டாகும் காய்ச்சலைக்கூடக் குறைக்கும். அம்மையைக் குணமாக்கும். வாழைப்பழங்களை குழந்தைகளுக்குத் தரும்போது, அதன் நடுவில் இருக்கும் கறுப்பு விதைகளை நீக்கிவிட்டு கையால் மசித்துக் கொடுக்கலாம்; ஆவியில் வேகவைத்தும் கொடுக்கலாம். வாழைப்பழம் என்றதும் நன்கு கனிந்த, தொட்டால் மென்மையாக இருக்கும் பழமே சிறந்தது என எண்ணுகிறோம். ஆனால், தொட்டால் சற்று கெட்டியாகவும், உரித்தால் தோல் வரக்கூடியதாகவும், கடித்து மென்று சாப்பிடும் அளவுக்கும் இருப்பதே நல்ல வாழைப்பழம். சாப்பிடும்போது இனிப்பும் துவர்ப்புச் சுவையும் தெரிய வேண்டும். இதுதான் வாழைப்பழம் சாப்பிட சரியான பருவம். இந்தப் பருவத்தில் சாப்பிட்டால்தான் பழத்தின் முழுப் பலனையும் பெற முடியும். பழம் கனிந்துவிட்டால், மாவுச்சத்தும் இனிப்பும் அதிகரித்துவிடும்.
வாழைத்தண்டில் இருக்கும் சத்து அபரிமிதமானது. பொதுவாக இதைச் சமைத்துச் சாப்பிடுகிறோம் என்றாலும், பச்சையாகவும் சாப்பிடலாம். வாழைத்தண்டை சிறிது சிறிதாக நறுக்கி, அது கருக்காமல் இருக்க மோர் கலந்த நீரில் போட்டு, பிறகு தயிரில் கலந்து பச்சடியாகச் சாப்பிடும்போது துவர்ப்புச் சுவை சமமாகி உடலுக்கு வலு சேர்க்கும்; ரத்தத்தைச் சுத்தப்படுத்தி ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். இதில் இருக்கும் பொட்டாசியம், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. இதை மாதத்துக்கு இரண்டு முறைக்கு மேல் உண்பதைத் தவிர்க்கவும்.
வாழைப்பூ, நல்ல துவர்ப்புச் சுவையுடைய குளிர்ச்சி தரும் உணவு. மாதவிடாய்க் காலங்களில் வரும் கடுமையான உடல் வலி, சீரற்ற தன்மைக்கு மிளகும் சின்ன வெங்காயமும் சேர்த்து செய்த வாழைப்பூ பொரியல் நல்ல நிவாரணம் தரும். குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் வாழைப்பூ ஊறுகாய் சாப்பிடலாம். வாழைப்பூ, குடலை வலுவாக்கி குடல் புண்ணைக் குணமாக்கும். சப்பாத்தி ரோல், வடை, உசிலி, தோசை என குழந்தைகளுக்குப் பிடித்த உணவுகளாகவும் செய்துகொடுக்கலாம். இது குடல் புழுக்களை நீக்கும்.
வாழைப்பிஞ்சை கச்சைக் காய் என்பார்கள். இதைத் தோலுடன் சமைத்து உண்டால், வாயுத்தொல்லை இருக்காது; பித்தத்தைக் குறைத்து உடல் சூட்டைக் குறைக்கும். நரம்பு தொடர்பான பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும். உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்.