அய்யாவின் அடிச்சுவட்டில் -139 –

அக்டோபர் 01-15

கழகப் பிரச்சாரத்தில் புதியமுறை! சென்னையில் நடமாடும் “நூல் விற்பனை அகம்” துவக்கம்!

– கி.வீரமணி

நடமாடும் நூல் விற்பனை அகத்தின் துவக்க விழா 26.11.1978 அன்று சென்னை பெரியார் திடலில் சிறப்புடன் நடைபெற்றது. சென்னை பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் எஸ்.சத்தியேந்திரன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

 

விழாவில் நான் உரையாற்றும்போது, தந்தை பெரியார் அவர்கள் இதுபோன்று ஒரு நடமாடும் விற்பனை அகம் ஏற்படுத்த வேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தார்கள் என்றும், அய்யாவின் அந்த எண்ணம் இன்று செயல்வடிவம் பெறுகிறது என்றும் குறிப்பிட்டேன். தலைநகரில் இந்த விற்பனை அகம் இப்போதுதான் முதன்முதலாகத் துவங்குகிறது. விரைவில் மாவட்டத் தலைநகரங்களிலும் இதுபோன்ற நடமாடும் விற்பனை அகங்கள் துவக்கப்படும் என்ற மகிழ்ச்சியான தகவலை அன்றே பதிவு செய்தேன்.

மேலும், இதைத் துவக்கி வைக்க இருக்கும் பழம்பெரும் சுயமரியாதைத் தோழர் முருகேசன் அவர்கள், பொதுவுடமை இயக்கத்திலே இருந்தாலும், அந்த இயக்கத்திலே அய்யாவின் கொள்கைகளை மிகத் தீவிரமாகப் பரப்பி வருபவராவார். சிங்காரவேலனார் அவர்களோடு இறுதிவரை இருந்து பணியாற்றியவராவார். தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கை-களைத் தனது இதயத்திலே என்றென்றும் பதிய வைத்துக்கொண்டு பணியாற்றி வருபவராவார் என்று குறிப்பிட்டேன்.

விற்பனை அகத்தை தோழர் முருகேசன் தொடங்கி வைத்து தந்தை பெரியாரின் நூல்கள் ஏராளமான அளவுக்கு பரப்பப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மூன்று சக்கர சைக்கிள் வண்டியில், அழகிய கண்ணாடி பீரோ ஒன்று பொருத்தப்பட்டு, அதில் நான்கு புறங்களிலும் நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. சைக்கிளின் முன்புறத்தில் கழகக் கொடி ஒன்று கம்பீரமாகப் பறந்து கொண்டிருக்கிறது. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன நூல்கள்; நடமாடும் விற்பனை அகம் என்று அதில் எழுதப்பட்டுள்ளது. விற்பனை அகம் துவக்கப்பட்ட முதல் நாளிலேயே ஏராளமான கழகப் பிரச்சார நூல்கள் விற்பனையாயிற்று.

பொதுமக்கள் கூடும் இடங்கள், பொதுக் கூட்டங்கள் நடக்கும் இடங்கள் ஆகியவற்றுக்கு இதன் மூலம் விரைவாக நூல்களை உடனுக்குடன் கொண்டு சென்று விற்பனை செய்ய முடியும் என்ற நம்பிக்கையை அன்றே எங்களுக்கு ஏற்படுத்தித் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பெரியார் நூலக விற்பனை வண்டி (Mobile Van) தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பரப்புரை செய்து வருகின்றன.

3.12.1978 அன்று ஒரத்தநாட்டில் ராமதாஸ்_நிர்மலா ஆகியோரின் திருமணம் என்னுடைய தலைமையில் நடைபெற்றது திரு.சண்முகம் வரவேற்புரையாற்றினார்.

எனது உரையில், சுயமரியாதைத் திருமண முறையினை பல ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகப்படுத்தி பலத்த எதிர்ப்புக்களுக்கிடையே ஒரு சந்ததியினரே கடைப்பிடிக்குமளவு செய்து வெற்றி கண்டார்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த உடனே தந்தை பெரியாரின் இந்த சுயமரியாதைத் திருமண முறையினை சட்டப்பூர்வமாக்கி யாரும் பயமின்றி கடைப்பிடிக்குமளவு செய்துள்ளார்.

திருமணங்களே கிரிமினல் குற்றமாக்கப்படலாம் என்று அய்யா அவர்கள் கூறினார்கள். அது உச்சக்கட்டம்; அந்த நிலை விரைவில் ஏற்படத்தான் போகிறது.

தற்போது ஒரு ஆணும் பெண்ணும் மனம் ஒத்தவர்களாகி விட்டோம் என்று கூறினாலே இச்சமுதாயம் அவர்களை தம்பதியர்களாக ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலை உருவாகிவிட்டது. இம்மாதிரி சுயமரியாதைத் திருமணங்களை, கலப்புத் திருமணங்களை, தாலி இல்லாத, நேரம் காலம் பார்க்காத, இராகுகாலத் திருமணங்களை நமது இயக்கத்தவர்களே நடத்திக் காட்டி முன்மாதிரியாக்க வேண்டும்; கொள்கைகளை மற்றோருக்கு எடுத்துச் சொல்பவர்களாக மட்டும் இல்லாமல் செய்துகாட்டி எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும்.

இத்திருமணங்களுக்கு பெண்கள்தான் பேராதரவு கொடுக்க வேண்டும். காரணம் அவர்கள்தான் இம்முறையில் பெரும் பயனடைபவர்கள்  என்று கூறி மணமக்களை உறுதிமொழிகளை கூறவைத்து வாழ்க்கை ஒப்பந்தத்தினை நடத்தி வைத்தேன். விழாவில் கழகத் தோழர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சேலம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பொத்தனூர் க. சண்முகம் அவர்களது அருமைச் செல்வி மலர்க்கொடிக்கும், திருவாரூர் சோமசுந்தரம் அவர்களது அருமைச் செல்வன் எஸ்.இரவீந்திரனுக்கும் வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்னுடைய தலைமையில் 10.-12.19-78 அன்று திருச்சி பெரியார் மாளிகையில் உள்ள பெரியார்  மணியம்மை மன்றத்தில் சிறப்புடன் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஏராளமான கழகத் தோழர்களும், முக்கியஸ்தர்களும், நண்பர்களும், உறவினர்களும் வருகை தந்திருந்தனர்.

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்திருந்த நான் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

தலைவர் தந்தை பெரியார் அவர்கள் நமக்கெல்லாம் அறிவு ஆசான். மனிதச் சமுதாயத்தில் நிலவும் பாகுபாடுகளை ஒழிக்கும் சுயமரியாதை நிலையத்தைத் தந்து சென்றவர்களாவார்கள்.

இவ்வாண்டு தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டாகும். இந்நூற்றாண்டிலே திருமணம் செய்து கொள்வோர்களும் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டிலே திருமணம் செய்து கொண்ட பெருமைக்குரியவர்கள் ஆவார்கள்.

சுயமரியாதைத் திருமணம் என்பது, தமிழ் நாட்டில் தந்தை பெரியார் அவர்களால் உண்டாக்கப்பட்ட மாபெரும் கலாச்சாரப் புரட்சியின் சின்னமாகும்.

இந்தத் திருமணத்திற்குச் சட்ட சம்மதம் இல்லாத நிலையிலும் பல்லாயிரக்கணக்கில் நாட்டில் நடை பெற்றுக்கொண்டு இருந்தன.

அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்டதும் முதன்முதலாக அவர்கள் செய்த சாதனை, சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டப்படி செல்லுபடியாக்கியதாகும்.

எனவே அய்யா, அண்ணா இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும் நடைபெறுகின்ற சுயமரியாதைத் திருமணங்கள் அனைத்திற்கும் தந்தை பெரியார் அவர்கள் தலைமை வகிக்கிறார், அறிஞர் அண்ணா முன்னிலை வகிக்கிறார் என்று பொருள். தந்தை பெரியார் அவர்கள் இருந்திருந்தால் இந்தத் திருமணம் நிச்சயம் தந்தை பெரியார் அவர்கள் தலைமையில்தான் நடந்திருக்கும். அய்யா அவர்களைக் கட்டிக் காத்த அம்மா அவர்கள் இருந்திருந்தால், அவர்கள் தலைமையிலே நடந்திருக்கும். இருவரும் இல்லாத நிலையிலே எனது தலைமையிலே நடைபெறுகிறது.

அருமை நண்பர் சேலம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அவர்களே எத்தனையோ திருமணங்களை நடத்தி வைத்திருப்பார்கள். அவர்கள் வீட்டிற்கு இம்முறை புதியதும் அன்று.

மணமகன் வீட்டார் வைதீக நம்பிக்கை உள்ளவர்கள். அவர்கள் வீட்டில் இதுதான் முதல் திருமணம் ஆகும். முதல் என்று இருந்தால் வட்டி என்று ஒன்று இருக்கும். இனி அவர்கள் வீட்டில் நடைபெறும் திருமணங்கள் எல்லாம் சுயமரியாதை முறையிலேயே நடைபெறும் என்று நாம் உறுதியாக நம்பலாம். நமது முறையை ஏற்றுக்கொண்டு முன்வந்துள்ள அவர்களை நாம் பாராட்ட வேண்டும்.

மணமக்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கைத்துணை ஒப்பந்தம் கூறிக்கொண்டார்கள். ஒருவருக்கொருவர் நண்பர்களாக, யாருக்கு யாரும் எஜமானர்களல்ல என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே தான் அவ்வொப்பந்தம் அமைந்தது. தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய உறுதி மொழி அது.

ஆண் எஜமானன் பெண் அடிமை என்ற நிலைகூடாது என்ற கருத்து உணரப்பட்டு சமத்துவநிலை உருவாகிவிட்டால் திருமணத்திலே பேச்சிக்கே வேலை இருக்க முடியாது.

நம் நாட்டுத் தாய்மார்கள் போகக்கூடிய இடம் இரண்டு. ஒன்று கோயில்; மற்றொன்று சினிமா. இந்த இரண்டு இடங்களும் அறிவை வளர்க்கக்கூடிய இடங்களா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

நம் நாட்டுப் பெண்கள் தங்களைச் சிங்காரித்துக் கொள்வதில் கவலை எடுத்துக் கொள்கிறார்களே தவிர தங்களுக்கு உரிமை வேண்டும் என்று நினைப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் நம் நாட்டுப் பெண்கள் அடிமைகளாக இருப்பதில் இன்பம் அடைபவர்கள். பெண் விடுதலைக்காகப் பாடுபடுபவர்களை பெண்களே எதிர்க்கும் விசித்திரமான நிலை எல்லாம் இங்கு உண்டு.

திருமணம் என்று பேச்சு ஆரம்பித்துவிட்டால் மணமகன் வீட்டார் முதலில் கேட்கும் கேள்வி என்ன? பெண் வீட்டார் என்ன செய்வார்கள்? எவ்வளவு பவுனுக்கு நகை போடுவார்கள்? என்றுதான் கேட்கிறார்கள்.

திருமணம் என்பது ஆணும் பெண்ணும் நண்பர்களாகச் சேர்ந்து வாழும் ஒரு அமைப்பு என்று கருதாமல் ஏதோ ஒரு வியாபாரக் காரியமாக நினைக்கிறார்கள். வீட்டுக்கு ஒரு அடிமையை வரவழைத்துக் கொள்ளும் ஏற்பாடாகக் கருதுகிறார்கள்.

பெண்கள் தங்கள் நிலைகளை எண்ணிப் பார்க்க வேண்டும், தங்களுக்கு வேண்டியது அலங்காரமா? சமத்துவமா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
பெண்களைத் திருப்திப்படுத்த நகைகளையும், புடவைகளையும் வாங்கிக் கொடுத்தால் போதும் என்ற தந்திரத்தை ஆண்கள் கையாளுகிறார்கள். இதில் பெண்கள் ஏமாந்துவிடக்கூடாது. பெண்கள் நகைப் பைத்தியத்தை விடுகின்ற காலம்வரை, உண்மையான விடுதலை அவர்களுக்கு இல்லவே இல்லை.

அண்மையிலே ஒரு செய்தி _  உண்மையி-லேயே நடைபெற்ற செய்தி. ஒரு மணமகனுக்கும் மணமகளுக்கும் கோயிலிலே திருமணம் நடைபெற உறுதியாயிற்று. மணமகள் வீட்டார் பத்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் பேசப்பட்டது. மணமகள் வீட்டாரும் ஒப்புக்கொண்டு விட்டனர்.

மணமக்கள் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டார்கள். திருமண நேரம் நெருங்கியது மணமகன் தந்தையார் மணமகள் தந்தையாரிடம் வந்து, எங்கே பத்தாயிரம் ரூபாய் என்று கேட்டார்.

அப்பொழுதுதான் மணமகள் தந்தைக்கு நினைவுக்கு வந்தது. பணம் கொண்டுவந்த பெட்டியை டாக்சியிலேயே வைத்துவிட்டு அவர் இறங்கிவிட்டார். அப்பொழுது சொன்னார், டாக்சியிலேயே பெட்டியை வைத்து விட்டு இறங்கி விட்டோம். எப்படியும் அந்த டாக்சியைக் கண்டுபிடித்து பணத்தைப் பெற்று வந்து  தந்து விடுகிறோம்.

திருமணத்தை முதலில் முடித்துவிடுவோம். ஏனெனில் முகூர்த்த நேரம் தவறிவிடக் கூடாது என்று சொன்னார்.

மணமகன் தந்தையார் ஏற்றுக்கொள்ள-வில்லை. முதலில் பணம் அதற்குப் பின்தான் திருமணம் என்றார்.

இப்படி பேசிக்கொண்டிருந்தபொழுது அந்த டாக்சி டிரைவரே அங்கு வந்து விட்டார்.

டாக்சியிலே வைத்துவிட்டீர்கள், இதோ பெட்டி என்று கொண்டுவந்து கொடுத்தார். அதற்குப்பின் மணமகனின் தந்தையார் திருமணத்தை இப்பொழுது நடத்தலாம் என்றார்.

ஆனால், மணமகளோ அதற்கு உடன்பட-வில்லை இந்த மணமகனை நான் திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன் இவருக்கு வேண்டியது பணம்தானே தவிர நானல்ல;  நான் இந்த டாக்சி டிரைவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்றுகூறி அவரையே திருமணம் செய்து கொண்டார்.

இது நடைபெற்ற செய்தி. பெண்கள் இந்த அளவு மனப்பக்குவமும் உரிமை உணர்ச்சியும் பெற வேண்டும் என்று குறிப்பிட்டேன்.

(நினைவுகள் நீளூம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *