துணிவு மற்றும் சாகச செயலுக்கான தமிழக அரசின் உயரிய விருதான கல்பனா சாவ்லா விருது பெற்றிருக்கிறார், லாரி ஒட்டுநர் ஜோதிமணி. ஆறாவது வரை மட்டுமே படித்த இந்த கிராமத்துப் பெண்ணுக்கு, கடந்த சுதந்திர தினத்தன்று, விருதுடன் தங்கப் பதக்கம் மற்றும் ரூபாய் ஐந்து லட்சம் ரொக்கப் பரிசையும் அளித்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. விருதுக்காகவெல்லாம் இல்லைங்க… வாழ்க்கைக்காக செஞ்சது எல்லாம்! –
பிறந்து வளர்ந்தது எல்லாம், ஈரோடு மாவட்டம், சென்னிமலை பக்கத்துல பசுவப்பட்டி கிராமம். குடும்பக் கஷ்டத்தால ஆறாவதோட படிப்பை நிறுத்திட்டு சாயத் தொழிற்சாலை வேலைக்குப் போனேன். வீட்டுல அப்பாவும், அண்ணனும் லாரி டிரைவர். 12 வருஷத்துக்கு முன்ன கள்ளிப்பட்டிக்கு வாக்கப்பட்டு வந்தேன். வீட்டுக்காரரும் லாரி டிரைவர்தான். சொந்த லாரி வெச்சு, லோடுக்குப் போயிட்டு இருந்தாரு. வேலைக்கு ஒரு ஆளப்போட்டு, நாம ஒய்வெடுக்கலாம்னு பார்த்தா, சம்பளம் கொடுத்து கட்டுப்படியாகாதேனு தனியாளா தொடர்ந்து லோடுக்குப் போனதால, அடிக்கடி உடம்பு சரியில்லாமப் போச்சு. இன்னொரு பக்கம், லாரி வாங்கினதுக்கு தவணை கட்ட சிரமமாச்சு. அப்போதான் கஷ்டத்தைக் குறைக்கலாமேனு, நானும் லாரி ஒட்டக் கத்துக்கறேன்னு சொன்னேன். முதல்ல அவரும், வீட்டுப் பெரியவங்களும் அதிர்ச்சியாகி, வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அப்போ முதல் பையனுக்கு ரெண்டு வயசு பொண்ணு பிறந்து ஏழு மாசம். ஆனாலும், குடும்பச் சூழ்நிலையை எடுத்துச் சொல்லி, சம்மதிக்க வெச்சேன். லாரி ஒட்டக்கத்துக் கொடுத்தது, லைசென்ஸ் வாங்குறதுக்காக தொலைதூரக் கல்வியில எட்டாவது முடிக்க வெச்சது, குஜராத், ஹைதராபாத்னு அவர் லோடுக்குப் போகும் போது என்னையும் கூட்டிட்டுப் போய் டிரைவிங் நுணுக்கங்களில் இருந்து லோடு வேலைகள் வரை எடுத்துச் சொல்றதுனு. எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்தார் என் வீட்டுக்காரர் கவுதம். மூணே மாசத்துல சூப்பரா கத்துக்கிட்டதோட, லோடுக்கும் போக ஆரம்பிச்சுட்டேன்!
முதல் முறையா, 800 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஹைதராபாத்துக்கு லோடு ஏத்திட்டுப் போனப்போ, என் வீட்டுக்காரரும் கூட வந்தாரு. அப்புறம் நானா தனியா போகப் பழகிக்கிட்டேன். ரெண்டு பேரும் உழைச்சு, லாரி டியூவை எல்லாம் அடைச்சிட்டு, இன்னொரு லாரியும் வாங்கினோம். சேர்ந்தே ரெண்டு லாரியில லோடுக்குப் போக ஆரம்பிச்சோம். இப்போ தனியா குஜராத் வரைக்கும், அப் அண்ட் டவுன் 4,500 கிலோமீட்டர் வரை லோடு ஏத்திட்டு டிரைவரா போறேன். துணிகள், இரும்புப் பொருட்கள்னு 16 டன் லோடை கட்டிடுவாங்க. அப்படியே குஜராத்துக்கு கியரைப் போட்டுடுவேன். இப்படி வீட்டுல இருந்து கிளம்பினா, 15 _ 25 நாள் கழிச்சித்தான் திரும்பி வருவேன்! என்றவர், தன் பணியின் சிரமங்களைப் பகிர்ந்தார். அதிகபட்சமா 80 கிலோமீட்டர் வேகத்துல லாரியை ஒட்டியிருக்கேன். இப்போ பவர் ஸ்டீரிங் இருக்கறதால, கொஞ்சம் ஈஸியா இருக்கு போற வழியிலயே சமைச்சி சாப்பிட்டுக்குவேன். இரவு நேரங்கள்ல, லாரியிலயே தூங்கிட்டு, காலையில எழுந்து ஒட்டுவேன்.
ஒருமுறை மஹாராஷ்டிரா மாநிலம், அஹமத் நகர்ல லாரி ஒட்டிட்டுப் போனப்போ, இரவு ரெண்டு மணிக்கு பஞ்சராகிருச்சு. ஸ்டெப்னியை மாத்த, ஜாக்கி இல்ல. ஒரு லாரியை நிறுத்தி, ஜாக்கி வாங்கி, நானே ஸ்டெப்னியை மாத்திட்டு, மறுபடியும் லாரியை எடுக்கும்போது, விடிஞ்சே போச்சி. இப்படி டயரை மாத்துறது, பஞ்சர் ஒட்டுறதுனு எல்லா வேலையையும் நான்தான் செய்வேன். தமிழ்நாட்டுல இருந்து ஆயிரக்கணக்கான டிரைவர்கள் லோடு ஏத்திட்டு வந்தாலும், அதுல நான் மட்டும்தான் பெண்ணுங்கிறது பெருமையா இருக்கும்! என்ன ஒண்ணு… பிள்ளைங்கள விட்டுப் பிரிஞ்சிருக்கிறதுதான் ரொம்ப வருத்தமா இருக்கும். பசங்களை என் பாட்டி சரஸ்வதி பார்த்துக்குவாங்க. தினமும் போன்ல குழந்தைங்ககிட்ட பேசினாலும், அவங்க நினைப்பாவேதான் இருக்கும்! எனும் ஜோதிமணிக்கு வயது 30. குடும்பச் சூழ்நிலையால் ஒரு லாரியை விற்றுவிட்டு, மற்றொரு லாரியில் அவரும், கணவருமாக மாறி மாறி டிரைவராகப் பணியாற்றுகிறார்கள்.
இப்போ டிரைவரா மட்டுமே மாதம் முப்பதாயிரம் வரை சம்பாதிக்கிறேன். சொந்த லாரிங்கிறதால, கிடைக்கும் கூடுதல் லாபம் தனி. கஷ்டம்னு நினைச்சா, வீட்டை விட்டு வெளியே வரமுடியாது. ஆனா, முடியும்னு நினைச்சா எந்தச் சுமையும் சுகமா மாறிடும்!
என்று கூறும் ஜோதிமணி, பெண்ணால் எல்லாம் முடியும் என்பதை ஆண்களுக்கு உணர்த்தியுள்ளார்!