– மஞ்சை வசந்தன்
மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்ற புரட்சிக்கவிஞரின் புகழ்பெற்ற வரி நூற்றுக்கு நூறு மெய்யாகி வருகிறது! பெரியார் சொல்லாததில்லை என்ற அளவிற்கு குவிந்து கிடக்கும் அவரது பல்துறைச் சிந்தனைகள் உலகெங்கும் இன்று பரவி வருகின்றன. பெரியார் உலகமயமாகிறார் என்ற தமிழர் தலைவரின் கணிப்பு கண்முன்னே மெய்யாகிறது.
கனடா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து என்று பல நாடுகளில் பரவி வருகிறது, பின்பற்றப்படுகிறது.
1929ஆம் ஆண்டே மலேயா, சிங்கப்பூர் நாடுகளுக்கும், 1953_54இல் பர்மா, மலேயா, சிங்கப்பூருக்கும் தந்தை பெரியார் பயணம் மேற்கொண்டு தம் சிந்தனைகளைப் பரப்பியதோடு பதியம் போட்டுவிட்டும் வந்தார். அவை இன்று துளிர்விட்டு வளர்ந்து கிளைபரப்பி பலன்தந்து நிற்கின்றன.
தந்தை பெரியாரின் சிந்தனை பற்றிய ஆய்வுகள் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்திலும், லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும், மலேயா பல்கலைக்கழகத்திலும் நடத்தப்படுகின்றன.
சிங்கப்பூரில் திரு.இராஜேஷ்ராய் அவர்களும், பாலையன் கிருபானந்தகுமார் அவர்களும், கேம்பிரிட்ஜில் லட்சுமி அவர்களும் ஆய்வு செய்துள்ளனர்.
பெரியாரின் சிந்தனைகளை பரப்பும் விழாக்கள், ஆய்வு செய்யும் மாநாடுகள் சிகாகோ, வாஷிங்டன், வர்ஜினியா, கலிபோர்னியா, ஃபிரிமாண்ட், சான்லூஸ் போன்ற உலகின் பல பகுதிகளிலும் நடைபெற்றவண்ணம் உள்ளன.
சிங்கப்பூரில் தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம்:
தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அரசு ஆணை மூலம் நடைமுறைப்படுத்தினார். அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் அரசும் தன்னாட்டில் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தியது.
2014 சிங்கப்பூர் அரசு தமிழர் தலைவர் அவர்களுக்கு அழைப்புக் கொடுத்து, பெரியார் சிந்தனைத் தாக்கங்கள் பற்றி ஆய்வுரை நிகழ்த்தச் செய்தது.
அமெரிக்கா, ஸ்வீடன் மற்றும் ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா தேசிய பல்கலைக்கழகம் பெரியார் பற்றிய ஆய்வுரைகள், அமெரிக்காவில் விசுவநாதன் பெர்க்லியஸ், ஸ்வீடனில் அனிதா படேல் என்ற அம்மையார் என்று பல நாட்டிலும் தந்தை பெரியாரைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வாஷிங்டனில் பெரியாருக்கு விழா!
பெரியார் பண்பாட்டு மய்யம் சார்பில் ஆண்டுதோறும் பெரியார் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு, பெரியாரின் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. இங்கர்சாலின் கருத்தோடு தந்தை பெரியாரின் கருத்து ஒத்துப் போவது பற்றி பெரிதும் வியந்தனர்.
மார்கெரட் டவ்லி என்ற அமெரிக்கப் பெண்மணி தன் முழுநேரப் பணியாகத் தந்தை பெரியார் கொள்கைகளைப் பரப்பும் பணியை மேற்கொண்டுள்ளார்.
ஆப்பிரிக்காவில் பெரியார்
பெரியார் ஆப்பிரிக்க அமைப்பு என்ற பெயரில் அக்காராவில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பெண்களின் மேம்பாட்டை முதன்மை இலக்காகக் கொண்டு இது செயல்படுகிறது. உலகிலே பெண்களைப் பற்றி அதிகம் சிந்தித்து அவர்களுக்காக தொண்டாற்றியவர் பெரியார் என்பதாலும், பெரியார் பட்டத்தையே பெண்கள்தான் தந்தார்கள் என்பதாலும் அவர் பெயரால் பெண்ணுரிமைக்கு அமைப்பு என்பது பொருத்தம்தானே! பெரியாரின் பிறந்த நாளின்போது சிறப்பாக விழா கொண்டாடப்பட்டு, பெண்களின் சொத்துரிமைக்கு பெரிதும் பிரச்சாரம் செய்யப்பட்டது.
கானா நாட்டில் பெரியார் ஆப்பிரிக்க அமைப்பு (திஷீஸீபீணீவீஷீஸீ) தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் செயலர் சாலை மாணிக்கம் அம்மையார்.
மும்பையில் பெரியார் விழா:
மும்பைத் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்-படுகிறது. பொதுக் கூட்டங்களும், சுவரொட்டி-களும் பெரியார் சிந்தனைகளைப் பெரிதும் பரப்பப் பயன்படுகின்றன.
டில்லியில் பெரியார் விழா
தலைநகர் டில்லியிலும் பெரியார் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டில்லி தமிழ்ச் சங்கமும் பெரியார் விழா-கொண்டாடி வருகிறது.
விசாகப்பட்டினத்தில் வெண்தாடி வேந்தர்க்கு விழா!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பெரியார் விழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு பெரியார் கொள்கைகள் மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றன.
தெலுங்கானாவில் தந்தை பெரியார் விழா! தெலுங்கானாவில் தந்தை பெரியாரின் கருத்துக்களால் கவரப்பட்ட ஏராளமானவர்கள், பெரியாரின் தொண்டைப் பெரிதும் பாராட்டிப் பேசியும், பெரியார் கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்பியும் வருகின்றனர்.
கருநாடகத்தில் பெரியார் முழக்கம்!
பெரியார் பிறந்த நாள் விழா கருநாடகாவிலும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு அவர்தம் கொள்கைகள் மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றன.
அய்தராபாத்தில் அய்யா குரல்
அண்மையில் அய்தராபாத்தில் தமிழர் தலைவர் பங்குகொண்ட பிற்படுத்தப்பட்டோர் அதிகாரத்துவ மய்ய ஆண்டு விழா அய்யாவின் உயிர் கொள்கையாம் இடஒதுக்கீட்டை ஏந்தி, அதன் அடுத்த கட்ட நுகர்வாக தனியார் துறையில் இடஒதுக்கீடு பற்றி பேசியதோடு, அதற்கான மாபெரும் சமூகநீதி மாநாட்டிற்கும் அடித்தளம் அமைத்தது.
அதேபோல் உலகின் வேறு மொழிகளிலும் தந்தை பெரியாரின் கொள்கை பரப்பப்படுகிறது. இந்தியாவிலும் பல்வேறு மொழிகளில் பரப்பப்படுகிறது.
Leave a Reply