”அர்த்தமுள்ள” ஹிந்து மதத்தின் இலட்சணம் பாரீர்!

செப்டம்பர் 16-30

ஸ்ரீரங்கத்தில் உள்ள கோயிலுக்கு கும்பாபிஷேகம் என்ற பெயரில் பார்ப்பனர் கொழுத்து வளர்வதற்கான திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டு, கோடிக்கணக்கான ரூபாய்கள் – எழுந்திருக்காமல் படுத்தே இருக்கும் ரெங்கநாதர் பெயரில் செலவழிக்கப்படுகிறது. இம்மாதம் 9 நாட்கள் அங்கு விழா நடைபெறுவதைப் பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேடு தந்துள்ள முக்கிய செய்தியில்,

ஸ்ரீரங்கத்தில் உள்ள (அய்யங்கார்) பார்ப்பனர்களிடையே வைஷ்ணவ முதல் பிரிவினர்களான வடகலை, தென்கலை _ அதாவது  ‘U’ மார்க், ‘Y’ மார்க் இரண்டு நாமதாரிகளிடையே சண்டை மும்முரமாக முற்றியதால், ஹிந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை உங்களுக்குள் நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள்; நாங்கள் தலையிட முடியாது என்று கைவிரித்து விட்டனர் இந்த பொய் விரித்த கூட்டத்தினரிடம்!

வடகலையினரும், தென்கலையினரும் கும்பாபிஷேகம் செய்ய யாருக்கு உரிமை, யாருடைய மந்திரங்கள், சடங்குகளுக்கு முன்னுரிமை என்பது போன்ற பிரச்சினைக்காக சண்டை போடுவது முடிந்தபாடில்லை என்பதால் தென்கலைக்காரர்கள் நீதிமன்றத்தை நோக்கிப் படையெடுக்க முடிவு செய்து ஆயத்தமாகி, விட்டனராம்!

1941ஆம் ஆண்டுடைய, துறையூர் நீதிமன்ற வழக்குத் தீர்ப்பின்படி, சிறீரங்கம் கோயிலில் முன்னுரிமை தென்கலைக்காரர்களுக்கே என்று வந்துள்ளது என்றும் கூறி, வழக்குத் தொடர்கின்றனர். இதுபற்றி வெளிவந்துள்ள பெரிய செய்தியில் காணப்படும் வார்த்தைகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை: (10.9.2015 டைம்ஸ் ஆப் இந்தியா பக்கம்_7)

“Originally based on doctrinal differences, members of the two sects have more recently tangled with each other publicly on practical issues:

Which sect gets to do what in the temple, whether the temple elephant should be marked on the forehead with the Thenkalai mark in the shape of a “Y” or that of the Vadakalai in the shape of a “U”.

வைணவத்தின் எந்தப் பிரிவு கோயிலில் எந்தெந்த உரிமைகளைப் பெற்றுள்ளது. என்னென்ன செய்வது என்ற மதக் கொள்கை சம்பந்தமான கோயில் யானையின் நெற்றியில் தென்கலைக்கான நாமமான “Y” மார்க்கைப் போடுவதா? அல்லது வடகலைக்கான “U”  மார்க்கைப் போடுவதா? என்பதுபோன்ற அளவில் சண்டைகளைப் போட்டுக் கொண்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது!

இதைவிட வெட்கக் கேடான விஷயம் வேறு உண்டா? ஹிந்துக்களே ஒன்று சேருங்கள் என்று ஓங்கிக் கூவிடும் ஆர்.எஸ்.எஸ். ஹிந்து முன்னணி வகையறாக்கள் முதலில் சைவம் வைணவம் சண்டை, வைணவத்திலே வடகலை _ தென்கலை நாமச்சண்டை, சடங்குச் சண்டை இவைகள் மனிதர்களைப் பிரிக்கிறதா? இல்லையா? ஒருபோதும் மதங்கள் மனிதர்களை ஒன்றுபடுத்தாது. பழைய வரலாற்றில் தொடங்கி இன்றுவரை இரத்த ஆறு ஓடுகிறதே! மனிதன் காட்டுமிராண்டியாய் மாறி மதச் சண்டை, ஜாதிச் சண்டை போடுகிறானே, அதைப் பன்மடங்கு கூடுதலாக்குமளவிற்குத்தான் மதம் பயன்படக் கூடும் என்பது புரிகிறதல்லவா?

ஓர் ஊரில் உள்ள ஒரு கோயிலுக்குள் நிலவாத, ஒரு ஜாதிக்குள் (அய்யங்கார்) நிலவ முடியாத ஒற்றுமையை, இவர்கள் உலகத்திற்கே கொண்டுவரப் போகிறார்களாம்! எத்தகைய அண்டப்புளுகு ஆகாசப் புளுகு பார்த்தீர்களா?

– கி.வீரமணி,
ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *