விளம்பரம் பெறாத வியக்கத்தக்க பெரியார் தொண்டர்கள்!

செப்டம்பர் 01-15

அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களது சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்படுவதற்கு முன் (1925-_26), நீதிக்கட்சி என்று அழைக்கப் பெற்ற தென்னிந்திய நல உரிமைச் சங்கம் S.I.L.F (South Indian Liberal Federation) என்ற திராவிடர் அரசியல் கட்சியின் தேர்தல் தோல்விகளுக்குப் பின்னர் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான தந்தை பெரியார், சேலத்தில் 1944இல் நீதிக்கட்சி + சுயமரியாதை இயக்கம் என்ற பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கு, வரலாற்று ரீதியான நமது பண்பாட்டு வேர்களை அடையாளப்படுத்தும் திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டக் காரணமானார்கள்.

இத்தகு சிறப்புக்கொண்ட இயக்கங்களில் எவ்வித விளம்பர வெளிச்சத்தையும் நாடாது, இயக்கக் கொள்கைப் பிரச்சாரம் செய்யும் வகையில் பல இயக்க ஏடுகள், இயக்க மலிவு வெளியீடுகள் எல்லாவற்றையும், காங்கிரசில் இருந்தபோது, காந்தி சீடரான ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட நம் தலைவர் தந்தை பெரியார் எப்படி கதர் மூட்டைகளை ஊரெல்லாம், தெருவெல்லாம் சுமந்து பரப்பினார்களோ அதுபோல பரப்பிய பெரியாரின் அணுக்கத் தொண்டர்கள், கைமாறு கருதிடாத தொண்டறச் சுயமரியாதைச் சுடரொளிகள் ஏராளம்! ஏராளம்!!

எனது 70 ஆண்டுக்கு மேற்பட்ட பொது வாழ்க்கை _ இயக்க வாழ்க்கையில் அந்தப்படி பணிபுரிந்த இயக்க மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திடும் வகையில் நினைவில் அசைபோட்டுக் கொண்டிருக்கும் அருமைத் தோழர்களை இன்றைய தலைமுறையினரும் இளைஞர்களும் _ மாணவர்களும்  அறிந்துகொள்ளும் வகையில்  உண்மையில் வெளிவரும் இக்கட்டுரைத் தொடரின் முதல் கட்டுரை இது.

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் குடவாசல் சுப்ரமணியம் அவர்கள்

இவர் தனது வசிக்கும் ஊர் குடந்தை என்றே கூறிக்கொள்வார். அவரது வயதோ, அப்போதே (1944_50 வாக்கில்) 50_60க்கும் மேல் இருக்கும். அழுக்கடைந்த ஒரு வெள்ளைக் கைலி போன்ற ஒரு வேட்டி _ அரைக்கை காலர் இல்லாத சட்டை. தலையில் வெள்ளை முடி _ இரண்டு பைகள் நிறைய கழகப் புத்தகங்கள் _ கழக ஏடுகள் _ விடுதலை, குடிஅரசு, திராவிட நாடு போன்றவை.

அய்யா வெளியிட்ட குடிஅரசு பதிப்பக மலிவு விலை நூல்கள் எல்லாவற்றையும் மூட்டைபோட்டு கட்டித் தூக்கிக் கொண்டு, கழகக் கூட்டங்கள் நடைபெறும் ஊர்களுக்குச் சென்று கடை விரிப்பார்; கொள்ளும்வரை (அதாவது விற்பனை ஆகும் வரை) எழமாட்டார். எவர் எப்படி வசைமாரிப் பேசினாலும் அமைதி காத்து, பொறுமையுடன் விளக்கம் கூறத் தயங்க மாட்டார்.

நான் மாணவப் பருவத்தில் கடலூர் முதுநகரில் இருந்தபோது எங்கள் ஆசிரியர் ஆ.திராவிடமணி அவர்கள் முயற்சியில் கழகக் கூட்டங்களை இடைவிடாமல் நடத்தும் போதெல்லாம் ரயிலில் பயணம் செய்து இங்கே வருவார். எங்களுடன் கலந்து, உணவு சாப்பிட அழைத்தவுடன் மகிழ்ச்சியுடன் வருவார்.

கழிவுத்தொகையின் மூலம் வரும் சொற்ப வருவாயை வைத்து எளிய தொண்டற வாழ்வு _ (கொள்கை வாழ்வு) காத்து, பசிநோக்கார்; கண் துஞ்சார் _ கருமமே கண்ணாயினார் என்று புத்தகம், கொள்கை பரவச் செய்யும் இயக்க ஏடுகளை விற்பனைச் செய்வார்!

இவருக்கோ குடலிறக்க நோய் _ மிகப் பெரிய அளவுக்கு இரண்யா நோய் இருந்தும் -_ உடல் உபாதைகளைப் பொறுத்துக் கொண்டே இப்படி ஊர் ஊராய், 2 நாள், 3 நாள், 4 நான்கு நாள் புத்தக விற்பனையைச் செய்யத் தவறமாட்டார்.

அய்யா, அண்ணா, பேராசிரியர், தவமணிராசன், நாவலர், கலைஞர் போன்றவர்கள் இவரை அறிவார்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழக விடுதிக்கு வெளியேயும் இவர் புத்தகக் கடை போடுவார்.  கடனுக்குக்கூட எங்களுக்குப் புத்தகம் (இயக்க நூல்களைத்) தந்து, பிறகு பணம் வாங்கிக் கொள்வார். நாங்கள் அவரை விடுதிக்கு உணவு சாப்பிட அழைத்துச் சென்று எங்கள் கணக்கில் சாப்பிடவும் வைத்துள்ளோம்.

இப்படி எண்ணற்ற தோழர்களின் வியர்வை, உழைப்பு, தியாகம், குருதி _ இவையே நம் திராவிடர் இயக்கத்தினை வளர்த்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *