– ஒளிமதி
1876 இல் பெட்டோரின் என்பவரால் இது நம்நாட்டில் விதைக்கப்பட்டது என்றாலும் 1960 ற்குப் பிறகே பரவலாக இது வளர்க்கப்பட்டது.
காமராசர் ஆட்சிக் காலத்தில் விறகுக்குப் பயன்படும் என்ற எண்ணத்தில் விரிவாக்கப்பட்டது. இது விரைவில் வளர்ந்து பருக்கும் என்பதால் விறகு விற்போரும் இதைப் பரவச்செய்தனர்.
தமிழகத்தில் இதன் கேடு அறியாது, ஊக்கத்தோடு இதனை வறண்ட நிலப்பகுதியெங்கும் விதைத் துவி வளர்த்தனர். ஆனால், கேரளாவில் தொடக்கத்திலே இதன் கேடு அறிந்து, இச்செடி, மரம் பரவாமல் முளையிலே பறித்தெறிந்தனர். இதைத் தொண்டு அமைப்புகள் மூலம் இயக்கமாகவேச் செய்தனர். இதனால் கேரளாவில் இம்மரம் இல்லை.
ஆனால் தமிழகத்தின் விறகுத் தேவையின் பெரும்பகுதியை இதுவே நிறைவு செய்கிறது. கரி தயாரிக்கவும் இதைக் கொளுத்துகின்றனர். செங்கல் சூளைக்கும் இது பயன்படுத்தப் படுகிறது.
இதன்கேடுகள்
நிலத்தடி நீரை வற்றச் செய்து கெடுத்தல்
இம்மரம் மிக ஆழமாக வேர்விட்டு வளரக்கூடியது என்பதால் இதன் வேர்கள் நிலத்தடி நீரோட்டப் பகுதிவரைச் சென்று நீரை உறிஞ்சி நிலத்தடி நீரை வற்றச் செய்கிறது. மேலும் நச்சுச் செடியான இதன்வேர்கள் நீரோட்டத்தில் நீள்வதால் நீரின் தூய்மையும் கெடுகிறது.
நிலத்தை வறளச் செய்தல்
இம்மரத்தின் அடியில்வேறு எதுவும் வளராது. இதன் இலைகள் விழுந்து மண்ணின் வளம் பாழாகிறது. நிலத்தையும் வறண்ட நிலமாக்குகிறது.
முள்
இதன் முள் விஷத்தன்மையுள்ளது. எனவே, இது தைக்கும்போது, அந்த இடம் சீழ்பிடித்துப் புண்ணாகும்.
புகை
இந்த மரத்தை எரித்தால் வரும் புகை மிகவும் கேடானது. இதன் விறகுப்புகை புற்றுநோயை உண்டாக்கக் கூடியது.
ஒருமுறை இதன் புகையைச் சுவாசித்தால் 14 சிகிரட்டுகள் குடித்ததற்குச் சமமான கேட்டை உருவாக்குகிறது.
யூக்கலிப்டஸ் எனப்படும் தைலமரங்களும் மண்ணை மலடாக்கக்கூடியதே. ஆனால் மனிதர்களுக்குக் கேடுடையது அல்ல. எனவே, இது போன்ற மரங்களுக்கு மாற்றாக வேம்பு, புங்கன், மா, வில்வம், மூங்கில் போன்றவற்றை வளர்ப்பது உலகிற்கும், உயிரினங்களுக்கும் நல்லது.
எனவே, ஊர்தோறும் அமைப்புகளை ஏற்படுத்தி சீமைக்கருவேல் விதை முளைத்தவுடனே அதைப் பிடுங்கி எறிய வேண்டும்.
விறகுக்கு உதவுகிறது என்ற எண்ணத்தில் விஷத்தை வளர்க்கக் கூடாது. அதன் புகை உலகை மாசாக்குவதோடு, நம் உடலையும் நாசமாக்குகிறது. தோல்நோய், கண் பாதிப்பு, நுரையீரல் நோய் என்று பல்வேறு கேடுகளை இதன் புகை உண்டாக்குகிறது. எனவே, இதை ஒழிப்பதை ஓர் இயக்கமாகவே செயல்படுத்த வேண்டும்.