நூல்: வள்ளுவர் கொள்கையும் வடவர் கொள்கையும்
ஆசிரியர்: இறையனார்
வெளியீடு: தமிழகம், இலிங்காயத்தார் தெரு,
உறையூர் -_ திருச்சிராப்பள்ளி.
பதிப்புரிமை: 1949
விலை: ரூ. 1_0_0
ஆராய்ச்சிக் கண்ணாடி கொண்டு பார்க்கும்போது வேதங்கள் தோன்றியகாலம் இன்னதென்ற உண்மை வெளியாகும். அஃதாவது வடவர்கள் தமிழ்நாட்டில் (இந்தியாவில்) நுழைந்த காலத்தில் தமிழர்களால் வெறுக்கப்பட்டும் பழிக்கப்பட்டும் அடிக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் பலவகைகளில் அழிவும் துன்பமும் அடைந்த காலத்தில்தான் தோன்றின; பல காலங்களில் பலபேர்களால் பலவகைகளில் கூறப்பட்டவைகளைச் சேர்த்து வகுத்து வேதங்கள் என்ற பெயர்களில் ஓதப்பட்டன. இதுவே உண்மையாகும். இவற்றிற்குச் சில எடுத்துக்காட்டுகளை ஈண்டு தருகிறோம்.
இந்திரனே! துன்பம் செய்பவர்களிடமிருந்து பயப்படும் எங்களுக்கு அபயத்தை அளிக்கவும்; எங்கள் துவேஷிகளையும் எங்களைத் துன்பம் செய்பவர்களையும் துரத்தவும் சாமவேதம், கண்டம் 29, கானம் 2.
உலகத் தோற்றம்
உலகத் தோற்றத்தைப் பற்றியும் உயிர்களின் தோற்றத்தைப் பற்றியும் வேதங்கள் புராணங்கள் ஆகிய வடநூல்கள் கூறுவதைக் கவனிப்போம். பிரமமே (பிரமனே) முதல் புருஷன். அவன் சிரசிலிருந்து சோதியுலகமாகிய சொர்க்கமும் பாதத்திலிருந்து பூமியும் உண்டாயிற்று. அவன் மனத்திலிருந்து சந்திரனும், கண்ணீலிருந்து சூரியனும், செவிகளிலிருந்து வாயுவும் பிராணனும், வாயினின்று அக்கினியும் உண்டாயிற்று. அவன் முகத்திலிருந்து பிராமணர்களும், புஜங்களிலிருந்து க்ஷத்திரியர்களும், தொடைகளிலிருந்து வைசியர்களும், பாதங்களிலிருந்து சூத்திரர்களும் பிறந்தார்கள் யஜுர் வேதம் புருஷ சூக்தம், சுலோகங்கள் 11, 12, 13.
அப்பிரமன் உப பிர்மாக்களாகிய ஒன்பது பிரஜா பதிகளை உண்டாக்கி அவர்களால் உலகத்திலுள்ள எல்லா உயிர்களையும் உண்டாக்கினான். மரிசி மகனான கசியபன் ஒரு பிரஜாபதியாவான் இவனுக்கு தக்ஷன் பெண்கள் பதின்மூவரும், வைசவாநரன் பெண்கள் இருவரும் ஆகப் பதினைந்து மனைவிமார்கள்.
கசியபன் மனைவிமார்களில் அதிதி என்பவள் வயிற்றில் பன்னிரு ஆதித்தர்களும் தேவர்களும் பிறந்தார்கள். திதி என்பவள் வயிற்றில் தைத்தியர்கள் அசுரர்கள் பிறந்தார்கள். தனு என்பவள் வயிற்றில் தானவர்கள் பிறந்தார்கள். மதி என்பவள் வயிற்றில் மனிதர்கள் பிறந்தார்கள். சுரபி என்பவள் வயிற்றில் காமதேனுவும், கந்தருவர்களும் பிறந்தார்கள். சுதை என்பவள் வயிற்றில் ஒரு தலையையுடைய நாகங்களும் பலவகைப் பாம்புகளும், தேள், பூரான், சுரமண்டலி முதலான எல்லா விஷமுள்ள பிறவிகளும் பிறந்தன.
கத்துரு என்பவள் வயிற்றில் ஆயிரம் தலைகளையுடைய ஆதிசேடனும், தட்சன், வாசுகி, கார்க்கோடகன் முதலான எண்ணற்ற நாகங்களும் பிறந்தார்கள். தாம்பரை என்பவள் வயிற்றில் ஊர்க்குருவி, உள்ளான், கோழி, கொக்கு முதலிய பறவை இனங்கள் பிறந்தன. விநுதை என்பவள் வயிற்றில் அருணன், கருடன், பருந்து, கூகை முதலியவைகளும் வான்இடி, மின்னல் முதலானவைகளும் பிறந்தன. குரோதவசை என்பவள் வயிற்றில் கழுதை, ஒட்டகம், மறை, மான், புலி, சிறுத்தை முதலிய கொடிய மிருகங்கள் பிறந்தன. இளை என்பவள் வயிற்றில் மீன்கள், ஆமைகள், தவளைகள், முதலைகள், சுரா, திமிங்கலம் முதலான நீர் வாழ்வன எல்லாம் பிறந்தன.
கதை என்பவள் வயிற்றில் மரம், செடி, கொடி, புல், பூண்டு, பல வகையான பயிர்கள் ஆகிய தாவர இனங்கள் எல்லாம் பிறந்தன. இங்ஙனம் தாவரங்கள் நீர்வாழ்வன, ஊர்வன, நடப்பன _ விலங்குகள், பறப்பன _ பறவைகள், மனிதர்கள், நாகர்கள், கந்தருவர்கள், அசுரர்கள் தேவர்கள் ஆதித்தர்கள் இன்னும் பூவுலகில் உள்ள எல்லா உயிர்களின் வகைகளும், தேவலோகத்தில் உள்ளதாகக் கூறப்படும் எல்லாத் தேவசாதிகளும், பாதாள உலகில் உள்ளதாகக் கூறப்படும் பாம்புகள் முதலான நாகலோகத்தவர்களும் எல்லாரும் கசியபனுடைய மனைவிமார்களிடம் பிறந்தவர்களேயாவார்கள்.
கசியபனும் அவன் மனைவிகளும் என்ன பிறவிகள், இவ்வளவு பிறவிகளையும் எப்படிப் பெற்றார்கள் என்று அய்யம் தோன்றுமல்லவா? அய்யம் தோன்றினால் கேள்வி கேட்டால் ஆத்திகர்கள் ஆக முடியாது; நாத்திகர்களாய் நரகத்திற்குப் போக வேண்டும். வேதம் புராணம் கூறுவதை அப்படியே ஒப்புக்கொள்ள வேண்டும், நம்ப வேண்டும். அதுதான் ஆத்திகர்க்கழகு. இப்படித்தான் உலகமும் பலவகை உயிர் இனங்களும் உண்டாயினவென்பது வடவர்களின் கொள்கையாகும். இதை நம்பிக் கொண்டிருக்க வேண்டியதும் ஆத்திகர் கடமையாகும்.
திருவள்ளுவர் ஆதி பகவன் முதற்றே வுலகு என்று கூறுகின்றார். உலகம் ஆதியுடன் கூடிய பகவனை முதலாக வுடையது என்பது இதன் பொருள். ஆதி, பகவன் என்ற சொற்கள் எங்கும் நிறைந்த இறைமைத்தன்மையும், இயற்கையுமாய் அமைந்துள்ள இருபெருஞ் சக்திகளின் (இரு பேராற்றலின்) கூறுகளைக் குறிப்பிடுவனவாம். திருவள்ளுவர் இறைமைத் தன்மை இயற்கையோடியைந்தது; எல்லாவற்றையும் இயக்குவது; உயிராற்றலும், அறிவாற்றலும் உடையது; விருப்பும் வெறுப்பும், ஒப்பும் உயர்வும் இல்லாதது; அன்பினால் வழிபடத்தக்கது; அறவடிவம் அருட்குணமுடையது என்றுதான் கூறுகின்றார். அன்பு நிறைந்து, அருட்குணம் சார்ந்து நிற்பதே வழிபாடென்கிறார். இதனால்தான் துன்பம் நீங்கிய இன்பம் பெறலாமென்று சொல்கின்றார்.
பிறப்பினால் சாதிகள் தொழில்கள்
பிர்ம ஷத்திரிய வைசிய சூத்ரர் என சாதிப் பிரிவுகள் நான்கு. இவர்கள் முறையே பிர்மாவின் முகம், தோள், தொடை, பாதம் இவற்றிலிருந்து பிறந்தபடியால் அப்படியே உயர்வும் தாழ்வும் உடையவர்கள் ஆவார்கள். ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனியான தொழில்கள் உண்டு. இவற்றின் உட்பிரிவுள் 196 சாதிகள் உண்டு. நான்காம் வருணத்தவன் _ சூத்திரன். எல்லார்க்கும் தொண்டு செய்ய வேண்டும். பிராமணன் எந்த இழிந்த தொழிலைச் செய்தாலும் இழிந்தவனாக மாட்டான். சூத்திரன் உயர்ந்த சாதியான் தொழிலைச் செய்யக்கூடாது என்பவைகளே வடவர்களின் கொள்கைகளாம். இவைகளுக்குரிய சான்றுகள் பல காட்டுவோம்.
மனு வேதங்களை உணர்ந்தவர். அவரால் எந்தச் சாதியார்க்கு எந்தத் தொழில் விதிக்கப்பட்டதோ அது வேத சம்மதமேயாகும். மனு. அத்தியாயம் 2, சுலோகம் 7.
பிராமணன் முதல் வருணத்தான், பிர்மாவின் முகத்தில் பிறந்தவன். மனு. அத்_1, சு_100.
பிராமணனுக்கு வேதம் ஓதுதலும் யாகம் செய்தலும், க்ஷத்திரியனுக்கு மனு நூலில் சொன்னபடி அரசு செய்தலும், வைசியனுக்கு பயிர் வர்த்தகம் செய்தலும், சூத்திரனுக்கு உழைத்து மேல் வருணத்தார்க்கு உதவி செய்து பிராமணப் பணிவிடை செய்தலும் தொழிலும் தவமும் ஆகும்.
மனு. அத் _11, சு_235.
பிராமணன் அறிவாளி (ஞானி) ஆயினும், மூடனாயினும் அவனே மேலானவன். தெய்வமாவான். மனு.அத்_9, சு_317.
பிராமணர்கள் எத்தகைய கெட்ட காரியங்களைச் செய்தாலும் பூஜிக்கத் தக்கவர்களாவார்கள்; ஏனென்றால் அவர்கள் மேலானவர்களன்றோ. மனு.அத்_9, சு_138.
பிராமணன் சூத்திரனுக்குரிய இழிந்த தொழிலைச் செய்தாலும் இழிந்தவனாக மாட்டான்; அவன் உயர்ந்த ஜாதியல்லவா? சூத்திரன் பிராமணனுடைய தொழிலைச் செய்தாலும் பிராமணனாக மாட்டான். இப்படியே பிர்மதேவர் நிச்சயம் செய்திருக்கிறார். மனு.அத்_10, சு_75.
பிறப்பினால் மக்கள் அனைவரும் ஒத்ததவர்களே ஆவார்கள். உயர்வு தாழ்வு இல்லை. ஆனால் அவரவர்கள் அறிவுக்கும் முயற்சிக்கும் ஏற்பச் செய்கின்ற நல் தொழில் தீய தொழில்களால் அவரவர்கள் அடையும் சிறப்புக்கள் ஒவ்வாமல் வேறுபட்டிருக்கும். நல்ல தொழிலால் உயர்வும், தீய தொழிலால் இழிவும் உண்டாகும். ஒருவருடைய பெருமைக்கும் சிறுமைக்கும் அவர்கள் செய்யும் நல்ல காரியங்கள் கெட்ட காரியங்களே காரணமாகும். நல்லொழுக்கம் உயர்வையும் தீயொழுக்கம் இழிவையும் உண்டாக்கும் என்பதே வள்ளுவர் கொள்கையாகும்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம்
கருமமே கட்டளைக் கல்
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி
ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்
என்ற குறள்களால் வள்ளுவர் கொள்கையைத் தெள்ளிதின் அறியலாம்.