உயர் கல்விப் படிப்பு என்பது எட்டாக்கனியாய் இருந்த ஏழை மாணவர்களுக்கு, நல்ல வாய்ப்பாக வங்கிகள் கல்விக்கடன் அளிக்கத் துவங்கின. அப்படி வங்கிகளில் கல்விக்கடன் பெறுவது ஒரு காலத்தில் குதிரைக்கொம்பாக இருந்தது. கல்விக்கடன் பெறவேண்டுமெனில் பெற்றோர் பெயரில் சொத்து இருக்கவேண்டும். ஜாமீன் கையெழுத்து போடவேண்டும் என ஏகப்பட்ட கெடுபிடிகள்.
இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து மாணவர்களுக்கு எந்தவித நிபந்தனையுமன்றி கல்விக்கடன் வழங்கவேண்டும் என உத்தரவிட்டது மன்மோகன் தலைமையிலான மத்திய அரசு. கல்வி பயின்றும் வேலையில்லாச் சூழலில், படித்து முடிப்பதற்குள்ளாகவே கடன் வட்டிகுட்டியைப் போட்டு அதுவே பெறுந்தொகையாகிப்போனதில், வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பி செலுத்த முடியாமல் மாணவர்களும் பெற்றோரும் பரிதவிக்கும் சூழல் ஏற்பட்டது. அதை புரிந்து கொண்ட மத்திய அரசு மாணவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்து ஆறுமாத காலம் வரை கல்விக்கடனுக்கான வட்டியை செலுத்த தேவையில்லை என முடிவெடுத்தது.
கடந்த 2009_-10ஆ-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வாசித்த அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, 2009 ஏப்ரல் முதல் தேதியிலிருந்து கல்விக் கடன் பெறும் மாணவர்களுக்கு அவர்கள் படிப்பை முடித்து 6 மாத காலங்கள் வரைக்கும் செலுத்த வேண்டிய வட்டியை மத்திய அரசே செலுத்தும் என அறிவித்தார்.
மத்திய அரசு, வட்டி மானியம் அறிவித்திருந்தும், சில வங்கிகளில் வட்டியை கட்டச் சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும் ஒரு மாதம் வட்டி செலுத்தாவிட்டால் கூட, அந்த வட்டித் தொகையை அசலுடன் சேர்த்துக் கூட்டு வட்டி போடுவதாகவும் பொதுமக்களிடையே புகார் எழுந்ததைத் தொடர்ந்து, கடந்த 2010 செப்டம்பரில் செங்கல்பட்டில் நடைபெற்ற கல்விக் கடன் மேளாவில், மாணவர்களுக்கு கல்விக் கடன்களை வழங்கிப் பேசிய ப.சிதம்பரம், நமது நாட்டில் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி படிக்க வசதியில்லாமல் பள்ளி படிப்புடன் நிறுத்திக் கொள்ளும் நிலை இருந்தது. இவர்களைக் கருத்தில் கொண்டே கல்வி கடன் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
2009_-10ஆம் கல்வி ஆண்டு மற்றும் அதற்கு பிறகு கல்விக் கடன் பெற்ற மாணவர்கள், படிக்கும் காலத்தில் வட்டி செலுத்த தேவையில்லை. இது தொடர்பான உத்தரவுகள் அனைத்து மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களுக்கு அனுப்பப்பட்டு விட்டன.
எந்த வங்கியேனும் 2009-_10ஆம் கல்வியாண்டு மற்றும் அதற்கு பிறகு வாங்கிய கடனுக்கு மாணவர்களிடம் வட்டி கேட்டால் அவர்கள் அருகில் உள்ள கனரா வங்கியை தொடர்பு கொள்ளலாம். அவர்கள்தான் இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வங்கிகளுக்கு தேவையான விளக்கத்தை கனரா வங்கியைச் சேர்ந்த அதிகாரிகள் அளிப்பர் என்று பேசினார். 2009 மார்ச் 31-க்கு முன்பும் கல்விக் கடன் பெற்ற 9 லட்சம் பேர் செலுத்த வேண்டிய வட்டியான சுமார் ரூ.2,600 கோடியையும் மத்திய அரசே செலுத்தும் என அறிவித்தார்.
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் வங்கிகள், மாணவர்கள் கல்விக் கடன் வாங்கிய நாளிலிருந்தே வட்டியும் செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்ப ஆரம்பித்திருக்கின்றன. 2009-க்கு முன்பும் பின்பும் கல்விக் கடன் பெற்ற யாருக்கும் வட்டி தள்ளுபடி செய்யப்படவில்லை. பல இடங்களில் மாணவர்களுக்கு வங்கி கடன் புத்தகமும் வழங்கப்படுவதில்லை. இதனால் இதுவரை தங்கள் கடன் பற்றிய விபரத்தைக்கூட அவர்கள் முழுமையாக அறிந்து கொள்ள முடியாத நிலையில், தங்கள் கல்விக்கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவே இதுவரை கருதியிருந்தவர்களுக்கு வட்டி தொடர்பான வங்கிகளின் நோட்டீஸ் பேரச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வங்கி அதிகாரி ஒருவரிடம் இது பற்றி விசாரித்தால் வட்டி இல்லை என்று உங்களுக்கு யார் சொன்னது என்று நம்மையே திருப்பி கேட்கிறார். வேறொரு அதிகாரியோ வட்டி தள்ளுபடி தொடர்பாக மத்திய அரசு தருவதாக ஒப்புக்கொண்ட குறைந்த பட்ச தொகையைக்கூட இதுவரை வழங்கவில்லை. அந்த தொகையை கடன் வாங்கியவர்களிடமிருந்து தானே வசூலிக்க முடியும் என்கிறார்.
ஆனால் மாணவர்களின் கல்விக்கடன் குறித்து நாளிதழ்களில் வெளிவந்துள்ள முன்னாள் வங்கியாளர்களின் கருத்தோ இதற்கு முற்றிலும் மாறாக உள்ளது.
கல்விக் கடன் வழங்க வங்கிகளுக்கு எல்லை ஏதும் நிர்ணயிக்கப்பட வில்லை. வங்கிக் கணக்கு இருக்கும் வங்கி, வீட்டின் அருகில் அல்லது கல்வி நிறுவனம் இருக்கும் பகுதியில் உள்ள வங்கிகளில் கல்விக் கடன் கோரலாம் என ஏற்கெனவே அரசால் பல உத்தரவுகள் பிறப்பிக் கப்பட்டுள்ளன. இதை மீறி, வங்கிகள் செயல்படுவது சட்ட விரோதம்.
கல்விக் கடன் பெறுவதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இதற்கு வட்டாட்சியரின் வருமானச் சான்றே போதுமானது. சம்பளச் சான்று உள்ளிட்ட வேறு ஆவணங்களை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது.
ரூ.4 லட்சத்துக்கு உட் பட்ட கடனுக்கு பெற் றோரின் பிணைகையெழுத்து மட்டுமே போது மானது. ரூ.7.5 லட்சம் வரையிலான கடனுக்கு மூன்றாம் நபர் பிணை கையெழுத்து தேவைப்படும். ரூ.7.5 லட்சத்துக்கு மேல், உள்நாட்டில் படிக்க ரூ.10 லட்சமும் வெளிநாட்டில் படிக்க ரூ.20 லட்சமும் அதிகபட்சமாக கடன் பெற லாம். இதற்கு வங்கிகள் கோரும் சொத்துகளை ஈடாக வழங்க வேண்டும்.
கல்விக் கடன் வழங்க குறைந்தபட்ச மதிப்பெண்ணை வங்கிகள் நிர்ணயம் செய்ய முடியாது. மற்ற வங்கிகளில் திருப்பிச் செலுத்தப்படாமல் நிலுவை யில் உள்ள கடனைக் காட்டியும் கல்விக் கடனை மறுக்கக் கூடாது. கல்விக் கடனுக்காக பெற்றோரின் சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கணக்கில் அவர்களது அனுமதி இல்லாமல் பணத்தை பிடித்தம் செய்யக் கூடாது.
முதலாம் ஆண்டு தேர்வில் தோல்வி அடைந் தால் அடுத்த ஆண்டுக்கான கடன் தவணையை தர வங்கிகள் மறுக்க முடியாது. கல்விக் கடன் வழங்க 15-லிருந்து 30 நாட்கள் வரை மட்டுமே வங்கிகளுக்கு கால நிர்ணயம் செய்யப்பட்டுள் ளது. கல்விக் கடன் பெறும் மாணவர்களுக்கு படிப்பு முடிந்து ஒரு வருட காலத் துக்கு அல்லது பணியில் சேர்ந்து ஆறு மாத காலத்துக்கு தவணை விடுப்பு காலமாக கருதப்படும்.
அது வரைக்குமான வட்டி தொகையை மத்திய அரசு மானியமாக வழங்கு கிறது. அதன் பிறகு, ரூ.7.5 லட்சம் வரையிலான கடனை 120 மாதங்களிலும் அதற்கு மேற்பட்ட தொகைக் கான கடனை 180 மாதங் களிலும் வட்டியுடன் திருப் பிச் செலுத்த வேண்டும்.
இவை அனைத்துமே ரிசர்வ் வங்கியின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள். இதை மீறி எந்த வங்கி செயல்பட்டாலும் அவர்களோடு மாணவர்கள் விவாதம் செய்யத் தேவை யில்லை. கடனுக்கான ஆவணங்களை இணைத்து, சம்பந்தப்பட்ட வங்கியின் தலைவர், ரிசர்வ் வங்கியின் சென்னைக் கிளை மற்றும் மும்பை தலைமையகம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆகிய இடங் களுக்கு பதிவு தபாலில் அனுப்பினால் போதும். பதினைந்தே நாளில் உங்களைத் தேடி வங்கி அதிகாரிகள் வந்துவிடுவார்கள் என்று அவர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
வட்டித்தொகையை செலுத்த முடியாத மாணவர்கள் வங்கிகளில் தொடர்ந்து தங்கள் கல்விக்கடனை பெற இயலாத நிலையில் அவர்களின் எதிர்காலமே கேள்விக் குறியாகிவிடும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே கடந்தகால மத்திய அரசு அறிவித்ததற்கு ஏற்ப மாணவர்கள் பயிலும் காலம் வரை வட்டியில்லா கல்விக்கடனை எந்தவித சிரமத்திற்கும் ஆட்படாமல் பெற்று கல்வியைத் தொடர தற்போதைய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவர்கள் மத்தியில் இதுவே பெறும் பிரச்சனையாக உருவெடுத்து தேவையற்ற நிகழ்வுகள் நடைபெறும் முன்பே மத்திய அரசு முந்திக் கொண்டு இந்த விஷயத்தில் அவசரம் காட்டுவது அவசியம்!
மாறாக, ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்ந்தெழ ஒரே வழியான கல்விக்கடனை முடக்குவது, தர மறுப்பது, இழுத்தடிப்பது போன்றவை தொடர்ந்தால், மத்திய அரசின் மீது அய்யத்தை உருவாக்கும் என்பதோடு, ஆர்.எஸ்.எஸ்.இன் மறைமுகத் திட்டம் செயற்படுத்தப்படுகிறதோ என்ற அய்யத்தையும் உண்டாக்கும். விரைந்து தீர்வு காணப்படவில்லை யென்றால் விளைவு கடுமையாய் இருக்கும்! ஒடுக்கப்பட்டோருக்கு எதிராகச் செயல்படும் எந்த அரசும் நிலைக்க முடியாது என்பதை உரியவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.