புரட்சித் திருமணங்கள்!

ஆகஸ்ட் 01-15

கர்வக் கொலைகள் நடக்கின்ற காலத்தில் பல்வேறு எதிர்ப்புகளை, சோதனைகளை வென்று, சாஸ்திர சம்பிரதாயங்களை ஒதுக்கி, ஜாதி, மதத்தை ஒதுக்கி, புதுமைத் திருமணமும், புரட்சித் திருமணமும் செய்துகொண்ட தம்பதிகள் :

ஜான்சன் – சமந்தா (சென்னை)

நான் பிராமணப் பெண். அவர் கிறிஸ்தவர். இருவரும் காதலித்தோம். இரு வீட்டிலும் பயங்கர எதிர்ப்பு. இருந்தாலும் நாங்கள் மண வாழ்வில் இணைவதில் உறுதியாக இருந்தோம். நான் ஆசாரக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், என் அப்பா இறந்ததிலிருந்து கடவுள் மேல் இருந்த நம்பிக்கை வற்றியது.

எங்கள் திருமணத்தில் எந்த சடங்குகளும் தேவையில்லை என்று இருவருமே முடிவு செய்தோம். தாலியும் இல்லை, மோதிரமும் இல்லை. மாலை மாற்றிக்கொண்டு, உறுதிமொழி ஏற்க, இனிதே முடிந்தது திருமணம். செய்யும் சடங்குகள் மூலமாகத்தான் திருமண பந்தம் நிலைக்கும் என்பதில்லை. அதற்குத் தேவை, பரஸ்பர புரிதல்; அதில்தான் இருக்கிறது ஒரு திருமணத்தின் வெற்றி!

ஜார்ஜ் – ஜெயா (சென்னை)

நான் கிறிஸ்தவன், ஜெயா இந்து. கல்லூரிக் காலக் காதல். இரு வீட்டிலும் எதிர்ப்பு. வேலையில் சேர்ந்த பின்தான் திருமணம் என்று நாங்கள் உறுதியேற்று, பின்னர் நான் சென்னையில் ஒரு வேலையிலும், ஜெயா சொந்த ஊரில் பள்ளி ஆசிரியராகவும் பணியில் சேர்ந்தோம். பகுத்தறிவு திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த நாங்கள், வேண்டுமென்றே ஆடி மாதத்தில் மணநாள் குறித்தோம்.

மகள் யாழினியுடன், அய்ந்தாவது மண ஆண்டில் ஆனந்தமாக இருக்கிறோம்!

இனியன் – கோமதி, (கடலூர்)

ஜாதிய ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டதால், ஜாதியை ஒழிக்க வேண்டும் என்ற வெறி என்னுள் இருந்துகொண்டே இருந்தது. என் தோழர் சிற்றரசு, ஜாதியை மறுத்து காதல் திருமணம் செய்துகொண்டதால், அடுத்த வருடமே படுகொலை செய்யப்பட்டார். அவரின் முதலாமாண்டு நினைவஞ்சலிக் கூட்டத்தில் ஆதரவற்று நின்றிருந்த சிற்றரசுவின் மனைவியை, நான் மறுமணம் செய்துகொண்டேன். எங்கள் வரவேற்பு நிகழ்ச்சிக்கு, ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட சிற்றரசு படுகொலை செய்யப்பட, அவர் மனைவிக்கு மறுவாழ்வு கொடுத்த தோழர் இனியன் அவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி என்றுதான் பேனர் வைத்திருந்தோம். இந்தச் சமூகத்தில் கடவுளை மறுத்திருக்கிறோம், மதத்தை மறுத்திருக்கிறோம், ஜாதியை மறுத்திருக்கிறோம், ஏற்றத்தாழ்வுகளை மறுத்திருக்கிறோம். தமிழ்ச்செல்வி, செந்தனன், செங்கதிர் என்று மூன்று குழந்தைகளோடு சந்தோஷமாக இருக்கிறோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *