தலைநிமிரச் செய்த தலைவர்கள்
இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் ஆர்.கே.சண்முகம் பற்றி….
சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் பெருமையும் தகுதியும் ஒரு தமிழரான ஆர்.கே.சண்முகத்துக்கு வாய்த்தது. அவரைத்தான் நிதி அமைச்சர் ஆக்க வேண்டும் என்று பிரதமர் நேருவிடம் வலியுறுத்திச் சொன்னவர் மகாத்மா காந்தி. சித்தரஞ்சன் தாஸ், பெரியார் போன்றவர்களின் நண்பராக அரசியலில் வளர்ந்த இவர், கோவை வட்டாரத்தைச் சேர்ந்தவர். சென்னை கிறித்தவக் கல்லூரியிலும் சட்டக் கல்லூரியிலும் படித்தார். சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில் நடந்த இரண்டாவது பொதுத்தேர்தலில் மத்திய சட்டசபை உறுப்பினராக (இதுதான் பின்னர் நாடாளுமன்றமாகியது.) டெல்லிக்குப் போனவர், அங்கேயே நாடாளுமன்ற சபாநாயகராகவும் இருந்தார். நிதியையும் தொழிலையும் கையாள்வதில் தேர்ந்தவர். அவர் எழுதிய பல ஆயிரம் கடிதங்கள் (40 ஆயிரம் என்று சொல்வார்கள்!) திரட்டப்பட்டு டெல்லி தேசிய ஆய்வுக்கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அரசியல், நிதித் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் மீது மாறாப் பற்றுக் கொண்டவராக இருந்தார். சிலப்பதிகாரத்துக்கும் குற்றாலக் குறவஞ்சிக்கும் உரை எழுதியவர் இவர்.
தமிழில் வெளியான கலைக்களஞ்சியம் இவரது முயற்சியால் தொகுக்கப்பட்டது. இவை அனைத்தையும்விட ஆர்.கே.எஸ். நினைக்கப்பட வேண்டியதற்கு மிக முக்கியமான காரணம் ஒன்று உண்டு. அவர் அமைச்சராக இருந்தபோது அவரது துறையைச் சேர்ந்த அதிகாரி ஒரு விதி மீறலைச் செய்துவிட்டார். இதனை அறிந்தவுடன் அதற்கு தார்மீகப் பொறுப்பேற்று தன்னுடைய அமைச்சர் பதவியைவிட்டு விலகினார் ஆர்.கே.எஸ்.
1922ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் கோவை வந்த இரவீந்திர நாத் தாகூர் ஆர்.கே.எஸ்.இன் இல்லத்தில் தங்கிச் சென்றபின் கொழும்பு சென்றவர் அங்கிருந்து ஆர்.கே.எஸ். அவர்களுக்கு நன்றி தெரிவித்துப் பாராட்டுக் கடிதம் எழுதினார்.
My dear Shri Shanmugham என விளித்து,
“I wish to write and thank you for all your kindness to me at Coimbatore, and for all you did for our institution. I trust that the interest in Visvabharathi in Coimbatore will not lie down again.
with my kind regards yours very sincerely
Rabindranath Tagore
தம் 28ஆம் வயதில் மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தத்தின்படி நடைபெற்ற பொதுத் தேர்தலில் நீலகிரி சட்டசபைத் தொகுதியில் செல்வாக்கு மிக்கவராக விளங்கிய பெல்லி கவுடரை எதிர்த்து நின்று வென்றார். சட்டசபையில் முதன்மையான விவாதங்களில் பங்கு கொண்டவர் வெள்ளையர்களின் ஆட்சிப் போக்கைக் கடுமையாகச் சாடியிருக்கிறார்.
1923இல் மூன்றாண்டுகளுக்குப் பின் சத்தியமூர்த்தி, சி.ஆர்.தாஸ் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க கோவை, சேலம் வட ஆர்க்காடு மாவட்டங்களைக் கொண்டுள்ள மத்திய சட்டசபைத் தொகுதிக்குச் சுயேச்சை யாகப் போட்டியிட்டு வென்றார் 1924ஆம் ஆண்டு முதல் டில்லி மத்திய சட்டசபை உறுப்பினராகப் பணியாற்றியபோது 1924இல் இங்கிலாந்து சென்றார்.
1933ஆம் ஆண்டு மார்ச்சில் டில்லி மத்திய சட்டசபைப் பேரவைத் தேர்தலில் பேரவைத் தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது ஒரு குறிப்பிடத்தகுந்த நிகழ்வு. டில்லி நாடாளுமன்ற அவைதான் அந்நாளைய மத்திய சட்டசபை. அதில் தலைவர் பதவியில் அமர்ந்த முதல் தமிழர் இவரே. தமிழர்கள் குடியரசுத் தலைவராக ஆகியிருக்கின்றனர்.
மாநிலங்களவைத் துணைத் தலை வராகவும் ஆகியிருக்கின்றனர். ஆனால், நாடாளுமன்ற, மக்களவையில் சபாநாயகர் எனும் தலைவர் பதவியில் எவரும் அமர்ந்ததில்லை. அத்தகு பதவியை 1933ஆம் ஆண்டிலேயே வகித்ததும் அவையைத் திறம்பட நடத்தி அனைவரின் பாராட்டையும், அன்றைய ஆங்கிலேய அரசின் சர் பட்டமும் பெற்று சர்.ஆர்.கே. சண்முகம் ஆனார்.
மத்திய சட்டசபை உறுப்பினராக விளங்கிய காலத்தில் 1924இல் அன்னி பெசண்டுடன் இங்கிலாந்து சென்று வந்த பின்னர் 1926இல் ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் மாநாட்டிற்கு இந்தியப் பிரதிநிதியாகச் சென்றார். 1932இல் கனடா நாட்டின் ஒட்டாவாவில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் பொருளாதார மாநாட்டிற்கு இந்தியப் பிரதிநிதியாகச் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1926, 1929, 1930 ஆகிய ஆண்டுகளில் இந்தியப் பிரதிநிதியாக ஜெனீவாவில் நடைபெற்ற பன்னாட்டுத் தொழிலாளர் மாநாடுகளில் சிறப்புரையாற்றிய பெருமையும் உண்டு. 1944ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வேண்டும் பொருட்கள் வாங்கும் குழுவிற்குத் தலைவராக அமெரிக்கா சென்று, ரூஸ்வெல்ட்டை வாஷிங்டனில் சந்தித்துப் பேசியதும் குறிப்பிடத்தகு நினைவுகள்.
கொச்சி திவான்
1935இல் இந்திய அரசுப் பிரதிநிதி (வைஸ்ராய்) வெலிங்டன் பெருமகன் கொச்சி சமஸ்தானம் திவானாக ஆர்.கே.எஸ்.அய் நியமித்தார். ஆறு ஆண்டுகள் திவானாக இருந்து பல நல்ல பணிகளை, இன்றும் பேர் சொல்லும் பணிகளை ஆற்றினார்.
இவருடைய நல்ல பல திட்டங்களுக்குக் கொச்சி அரசர் ராம வர்மா கொச்சி துறைமுக உடன்பாடு குறித்து அக்டோபர் 21, 1935இல் கடிதம் எழுதிப் பாராட்டியிருப்பது சான்றாகும்.
இவருடைய பெயரில் இன்று கேரள மாநிலத்தில் சண்முகம் கால்வாய் எனும் கால்வாய், துறைமுகத்தை இணைக்கும் கால்வாயாக இன்றும் விளங்கி வருவது இவருடைய சிறந்த பணிக்குச் சான்றாகும். இங்கிலாந்து சென்று அந்நாட்டு நாடாளுமன்ற நடைமுறைகளை நேரில் கண்டறிந்து வந்தார். இவருடைய திறமை கண்ட நேருவின் தந்தை மோதிலால் நேரு கட்சிக் கொறடாவாக நியமித்தார். 1926, 1930 ஆகிய இரு மத்திய சட்டசபைத் தேர்தலில் வெற்றிகண்டார்.