சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

ஆகஸ்ட் 01-15

மேக் இன் இந்தியாத் திட்டத்திற்கான முன் தயாரிப்பு

ஆசிரியர் : அருண் நெடுஞ்செழியன்
வெளியீடு : பூவுலகின் நண்பர்கள்
எண் : 106/1, முதல் தளம்,
கனகதுர்கா வணிக வளாகம்,
கங்கையம்மன் கோயில் தெரு, வடபழனி,
சென்னை – 600 026.
தொலைபேசி : 044-4380 9132
பக்கங்கள் : 136
விலை ரூ 100

மோடி ஆட்சிக்கு வந்த கடந்த சொற்ப நாட்களில் மட்டும் பல ஏக்கர் காடுகளையும், உழைக்கும் மக்களையும் அழிக்கிற பல அழிவு வளர்ச்சித் திட்டங்களுக்கு சூழல் அனுமதியளித்தது அனைவருக்கும் நினைவிருக்கும். குறிப்பாக குசராத்தில் அதானி குழுமத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதியால் மட்டும் கிட்டத்தட்ட நானூறு ஏக்கர் பரப்பளவிலான காடுகள் அழிக்கப்படவிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதேபோல அம்பானி குழுமத்திற்கு மத்திய பிரதேசத்தில், காடு வனாந்திரங்களை அழித்து கட்டப்படவிருக்கிற ஓர் பெருந்திட்டத்திற்கு சூழல் அனுமதி அளிக்கப்பட்டது. இவ்வாறு ஒவ்வொரு திட்டமாக இதுவரை சுமார் 240 தொழில் நிறுவனங்களுக்கு மோடி அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக மட்டும் கிட்டத்தட்ட பதினெட்டாயிரம் ஏக்கர் பரப்புள்ள வனப்பகுதிகள் அளிக்கப்படவுள்ளன.

இந்நிலையில் ஒவ்வொரு திட்டமாக அனுமதியளிப்பதில் சலிப்படைந்த மோடி அரசுக்கு அற்புதமான யோசனை ஒன்று தோன்றியது. அதாவது நடப்பிலுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் வகையிலான நடவடிக்கையில் இறங்கிய மோடி அரசானது, பெருமுதலாளிகளுக்கு எடுபிடி வேலை செய்வதில் தனக்கு நிகரில்லை என்பதை உறுதிசெய்யும் விதமாக, நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக சூழல் பாதுகாப்பு நடைமுறைகள் இருப்பதாக நியாயவாதம் கற்பித்து வேகவேகமாக சூழல் சட்டங்களை மறுசீராய்வு செய்வதற்கான உயர்மட்டக் குழுவைக் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமைத்தது. அதன்படி சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986, வனம் (பாதுகாப்பு) சட்டம் 1980, வன உயிரினங்கள் (பாதுகாப்பு) சட்டம் 1972, தண்ணீர் (பாதுகாப்பு மற்றும் மாசுக் கட்டுப்பாடு) சட்டம் 1974 மற்றும் காற்று (பாதுகாப்பு மற்றும் மாசுக் கட்டுப்பாடு) சட்டம் 1981 ஆகிய சட்டங்களை காலாவதியாக்க செய்யும் முயற்சியில் மோடி அரசு இறங்கியுள்ளது. இக்குழுவில் உள்ள ஒருவர் அயோத்தி ராமர் கோவில் வழக்கிற்கு ஆதரவாக வாதாடியவர், மற்றவர்கள் சூழல் பாதுகாப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்கள். இவர்களின் பரிசீலனைகள் எந்த லட்சணத்தில் இருக்குமென்று சொல்லத் தேவையில்லை. மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள் காங்கிரஸ் கடைபிடித்த கொள்கைகளின்றி அணுவளவிலும் பிசகுவதில்லை. மாறாக முதலாளியத்துடனான கூட்டுக் களவாணி உறவில், யார் நாட்டைத் தாரை வார்ப்பதில் முன்னணியில் இருக்கின்றனர், அதற்கு எவ்வாறு நியாயவாதம் கற்பிக்கின்றனர் என்பதிலேயே காங்கிரசும் பா.ச.க.வும் வேறுபடுகின்றனர்.

நமது அழிவு வளர்ச்சியின் நாயகரான மோடியின் சூழல் சட்ட சீர்திருத்த நடவடிக்கைகளானது ஏக காலத்தில் உள்நாட்டு பெரு முதலாளிகளுக்கு சொரிந்து கொடுத்துக்கொண்டே அந்நிய நிறுவன முதலீடுகளுக்கான பாதுகாப்பான சூழலை அமைத்துத் தருகிற தரகு வேலை முயற்சியே அன்றி வேறொன்றுமில்லை. ஆனால், நமது வலதுசாரி அறிவு ஜீவிகளுக்கோ சூழல் அழிவு மட்டும் கண்ணுக்கு புலப்படாமல் போனது ஆச்சரியம்தான். இல்லையென்றால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மேக் இன் இந்தியா கோஷத்தை பக்கம் பக்கமாக சிலாகிக்க என்ன காரணம் இருக்க முடியும்!

மேக் இன் இந்தியா சூழலியல் மீதானப் போர்

கடந்த கால் நூற்றாண்டுகாலமாக மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகள் உலக வங்கி, பன்னாட்டு நிதியம், உலக வர்த்தக நிறுவனம் போன்ற அதிகார அடுக்குகளால் தீர்மானிக்கப்படுவது அனைவரும் அறிந்த செய்திதான். நடப்பிலுள்ள நவதாராளவாத பொருளாதாரப் பாணியானது ஏற்றுமதி சார்ந்த வர்த்தகத்தை மைய நீரோட்டமாகக் கொண்டவை. எனவே, உலக உற்பத்தி சந்தையில் தன்னை இணைத்துக்கொள்ள அனைத்து வகையிலும் மூன்றாம் உலக நாடுகள் போராட வேண்டியுள்ளது.

ஆகவே, வெளிநாட்டின் தொழில்நுட்பங்கள், கச்சாப் பொருட்கள், மூலதனங்கள் தங்கு தடையின்றி உள்நாட்டில் நுழைவதற்கான அனைத்து அம்சங்களையும் மூன்றாம் உலக நாடுகள் தளர்த்துகிறது. மலிவான உற்பத்தி மையமாக தன்னை நிறுவிக் கொள்வதில் மூன்றாம் உலக நாடுகளிடம் போட்டா போட்டி நிலவுகிறது. எனவே, அந்நிய நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையிலான அனைத்து சலுகைகளையும் வாரி வழங்குகிறது. நடைமுறையில் உள்ள கொஞ்சநஞ்ச சூழல் பாதுகாப்புச் சட்டங்களும் தொழிலாளர் சட்டங்களும் பெரியளவில் நீர்த்துப் போகச் செய்யப்படுகிறது.

அவ்வகையில், இந்தியாவில், தொண்ணூறுகளின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக அரசு பல சீர்திருத்தங்களை மேற்கொண்டது. இந்தியாவில் முதலீடு செய்யவிருக்கும் நிறுவனங்களைக் கவர்ந்து இழுப்பதற்காகவே அப்போது நாடாளுமன்றத்தில் சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக தொழிலாளர் நலன் குறித்த சட்டங்களில் நிறுவன சார்பாகவும் தொழிலாளருக்கு எதிரான சரத்துக்கள் அச்சட்டத் திருத்தத்தின் மையமாகவே அமைந்தன. உலக நாடுகளில் உள்ள பெரு உற்பத்தியாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்காக சொந்த நாட்டு மக்களின் தொழிலாளர் நலனை, சூழல் பாதுகாப்பையும் காவு கொடுத்தது இந்திய அரசு. ஆனாலும் பல மூன்றாம் உலக நாடுகள் போல இந்தியாவாலும் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்யுமளவுக்கு வெற்றிகரமாக உலகச் சந்தையில் ஊடுருவ இயலவில்லை. பாதுகாப்பான சூழலை உலக முதலாளித்துவ சமூகத்திற்கு வழங்கினாலும் உற்பத்திப் பொருட்களை விற்கவேண்டும் அல்லவா?! ஆனால் சீனாவால் இப்பொருளாதாரப் பாணியில் வெற்றி பெற முடிந்தது. சீனாவின் பட்டாசு முதல் பட்டு வரைக்கும் நாம் இங்கு இறக்குமதி செய்வதிலேயே இது தெரிகிறது. அதிகளவில் அந்நிய முதலீடுகளை ஈர்த்து பெரியளவில் இந்திய சந்தையில் அந்நிறுவனங்கள் உற்பத்தி செய்த பொருட்களை ஏற்றுமதி செய்து காட்டியது சீனா. ஆனால் இதற்காக மிகப் பெரிய விலையை சீனா கொடுக்க நேரிட்டது. உலகின் மோசமான அளவில் தொழிலாளர் ஒடுக்குமுறையும் சூழல் சீர்கேடுகளும் இயற்கை வள அழிப்புகளும் சீனாவில் நடந்தேறுகிறது.

இந்நிலையில் குசராத்தில் தனது அழிவு வளர்ச்சித் திட்டத்தின் ஊடாக அதிகாரத்தில் அமர்ந்த மோடி தனது பங்கிற்கு இவ்வழிவுப் பொருளாதாரப் பாணியை முன்னெடுக்கும் விதமாக உலக நாட்டு உற்பத்தியாளர்களே இந்தியாவில் வந்து உற்பத்தி செய்யுங்கள் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது பல அழிவுகளுக்கு வித்திடும் என்றால் அது மிகையல்ல. மலிவான விலையில் உற்பத்தியை மேற்கொள்ள உலக நிதி மூலதனக்காரர்களுக்கு அறிவிப்பு விடுத்த அடுத்த மாதத்திலேயே தொழிலாளர் நலச்சட்டங்களில் பல சீர்திருத்தங்களை மோடி அரசு அறிவித்ததையும் நாம் மேக் இந்தியா திட்டத்தோடு இணைத்து பார்க்க வேண்டியுள்ளது.

இந்நிலையில் அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஏதுவாக  மின்சார வசதி, சாலை வசதி, துறைமுகங்கள், தொலைத்தொடர்புகள் போன்ற உள்கட்டமைப்பு அம்சங்களில் இந்திய அரசு கவனம் செலுத்தியாக வேண்டும். இதில் அதிகளவில் இந்திய அரசு தனது நிதியை செலவிட வேண்டும். இத்திட்டங்களுக்கு நிதியை ஒதுக்குவதற்காகவே நடைமுறையில் உள்ள கல்வி, மருத்துவ, வேலைவாய்ப்பு நலத் திட்டங்களில் அரசு கைவைத்தாக வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சித் திட்டத்தை மோடி அரசு கைகழுவ முனைவதை இப்பின்புலத்திலேயே நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்நிலையில், அந்நிய நாடுகளின் தொழில்துறை முதலீடுகளுக்காக நில கையகப்படுத்தும் சட்டம், சூழல் பாதுகாப்புச் சட்டம், தொழிலாளர் நலச் சட்டம் என அனைத்து சட்டங்களையும் பெரு முதலாளிகளின் லாபத்திற்காக வளைக்கிற இவ்வரசின் வர்க்க சார்பு எடுபிடி ஆட்சியை இடதுசாரி அமைப்புகள், தலித் அமைப்புகள், தமிழ் தேசிய அமைப்புகள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும். வளர்ச்சியின் பெயரால் மக்கள் விரோத, சூழல் விரோத போக்கை முன்னெடுத்து செல்லுகிற மோடி அரசின் முகமூடியை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவதே நமது முதன்மைப் பணியாக உள்ளது. இதை செய்யத் தவறும் பட்சத்தில் போபால் சம்பவங்களும், நோக்கியா தொழிலாளர்கள் நிலையும் இயல்பான நிகழ்வுகளாக எதிர்காலத்தில் அமையக்கூடும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *