கண்டுபிடித்தது… கடவுள் அல்ல! – 9

ஆகஸ்ட் 01-15

– மதிமன்னன்

ரோமன் கத்தோலிக மதத்தில் தீவிர நம்பிக்கையுள்ளவரான ஜான்ராக் எனும் மகப்பேறு மருத்துவர் கிரிகோரி பின்கஸ் எனும் உயிரியல் நிபுணருடன் இணைந்து ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்ததுதான் மகளிர்க்கான கருத்தடை மாத்திரைகள். கருத்தடையை எதிர்ப்பது கத்தோலிகம். கருத்தரிப்பதை மேம்படுத்த வேண்டும் என்று ஆய்வுகள் செய்தார் ஜான் ராக். அவர் கண்டுபிடித்த மாத்திரையை உட்கொண்ட பெண்ணுக்கு கருத்தரிப்பதற்கான ஹார்மோன்கள் பாதிப்புக்கு ஆளாகிவிட்டன. கருத்தடைக்கான மாத்திரை கிடைத்துவிட்டது. பிள்ளையார் பிடிக்கக் குரங்காகிவிட்டதோ? கிணறு தோண்ட பூதம் வெளிப்பட்டதோ? எப்படியோ மதத்திற்கு எதிரான விடை கிடைத்துவிட்டது. மகளிர்க்கு _ சிறப்பாக மனித குலத்திற்கு ஒரு கொடை!

ஆண்களின் முகத்தில் தாடி மீசை வளர்வது வித்தியாசமான தோற்றத்தைத் தருகிறது. தாடி, மீசையைச் சிரைக்காமல் அப்படியே விட்டு வளர்ப்பது சிலர்க்கு அழகிய பொலிவைத் தருகிறது. கார்ல் மார்க்ஸ், தந்தை பெரியார் ஆகியோர்க்குத் தாடி அமைந்தது மிக அழகிய தோற்றத்தைத் தருவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். ஆண்தான் அழகு என்பார்கள். சிங்கத்தின் பிடரி, மானின் கொம்பு சேவலின் கொண்டை, மயிலின் தோகை, யானையின் தந்தம் என்று பட்டியலிட்டு நீக்கி முழக்குவார்கள். குயிலின் குரலைச் சொல்லும்போது மறுக்கத் தோன்றாது. எனினும் கூடுதல் உறுப்புகள் இல்லாமலே பெண்ணின் அழகு கவரக்கூடியதுதானே! அப்படிப்பட்ட வகையில் ஆணு    க்கேயுரிய தாடி மீசையை அகற்றுவது சிரமமாக இருந்தது. அதைச் செய்யும் தொழிலாளரை அணுக வேண்டும் அல்லது நெருங்கிய உறவினரின் உதவி வேண்டும். ஏனென்றால், சவரக் கத்தி கழுத்தையும் அறுத்துவிடும் அபாயம் உண்டே! அதற்காகப் பாதுகாப்பான ரேஸர் கண்டுபிடித்தனர்.

மரத்தாலான கைப்பிடியில் பாதுகாப்பாகப் பொருத்தப்பட்ட பிளேடுடன் கூடிய ரேஸரை 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரஞ்ச் நாட்டவரான ஜுன் ஜாக்குவிஸ் பெர்ரெ என்பவர் வடிவமைத்தார். 1875ஆம் ஆண்டில் ஜெர்மன் நாட்டவர்களான ஃபிரெடெரிக், ரிச்சர்டு, ஓட்டோ ஆகிய சகோதரர்கள் வடிவமைத்தது பாதுகாப்பாக இருந்தது. 1901இல் கிங் கில்லட் எனும் அமெரிக்கரும் வில்லியம் நிக்கர்சன் என்பவரும் சேர்ந்து உருவாக்கிய ரேசரில் பயன்படுத்தித் தூக்கி எறியும் பளேடு பயன்படுத்தப்பட்டது. பின்னர் மிகவும் மெல்லியதும் கூரியதுமான பிளேடுகளை கில்லட் கண்டுபிடித்தார். முதல் உலகப் போரில் பணி செய்த ராணுவ வீரர்களின் பயன்பாட்டிற்காகப் பிளேடுகளை வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. நீண்ட நாள்கள் உழைக்கக்கூடிய பிளேடுகளை இங்கிலாந்து நாட்டவரான வில்கின்சன் ஸ்வேர்டு கண்டுபிடித்தார்.

இது துருப்பிடிக்காத இரும்பினால் செய்யப்பட்டது.

முகம் மழிப்பதற்கு முன்பு சோப் அல்லது கிரீம் தடவி ஈரமாக்கிப் பின்னர் சிரைப்பது எளிது. தண்ணீர், சோப் அல்லது கிரீம் இல்லாமல் முகம் மழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் பரவலாக ஏற்பட்டது. மின் மோட்டார் பொருத்தப்பட்ட மின்சார ரேஸர் வடிவமைக்கப்பட்டது. 1931இல் இது பயன்பாட்டுக்கு வந்தது. 1939இல் ஹாலந்து நாட்டு நிறுவனமான ஃபிலிப்ஸ் இம்மாதிரி ரேஸர்களைத் தயாரித்து விற்பனை செய்தது. பேட்டரியால் இயங்கும் ரேஸர் 1940இல் வந்தது. 1947இல் பெண்களுக்கான ரேஸர் வடிவமைக்கப்பட்டது. 1960இல் கிரீம் தடவிப் பயன்படுத்தக்கூடிய மின்ரேஸர்கள் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதுதான் வேடிக்கை.

தீக்குச்சியால் விளக்கேற்றி நூல்களைப் படிக்கலாம். தீக்குச்சியால் வீடுகளைக் கொளுத்தி ஜாதி சண்டைகளை வெளிப்படுத்தலாம். கத்தியைக் கொண்டு காய், கனிகளை வெட்டிச் சமைக்கலாம். கழுத்தை அறுத்துக் கொலையும் செய்யலாம். அறிவியல் அறிவைக் கொண்டு ஆக்கப் பணிகளுக்கான அரியனவற்றையும் கண்டுபிடிக்கலாம். தீய விளைவுகளை ஏற்படுத்தும் கருவிகளையும் கண்டுபிடிக்கலாம். அந்த அடிப்படையில் மனிதன் கண்டுபிடித்த சமுதாயக் கேடான கருவிகளும் நிறைய உண்டு.

வெடிமருந்து அப்படிப்பட்ட ஒன்று. பொதுவாக மருந்து எனும் சொல் நோய்தீர்த்து நன்மை பயக்கும் ஆற்றல் பெற்ற பொருள்களுக்குப் பயன்படும் சொல். வெடிமருந்து அப்படி அல்லவே! ஒரு குழாயில் அதனைத் திணித்துப் பற்ற வைத்தால் நெடுந்தொலைவுக்கு அதன் தீயவிளைவு அழிவை ஏற்படுத்தும். அதனை எப்படி மருந்து எனலாம்? ஆங்கிலத்தில் வெடிப்பொடி என்கின்றனர் (கன் பவுடர்). எனவே, நாமும் அப்படியே அழைக்க வேண்டும், மொழியைக் காப்பாற்றிட!

பொட்டாசியம் நைட்ரேட் 75%, மரக்கரி 15%, கந்தகம் 10% என்ற அளவில் கலந்து தயாரிக்கப்படும் பொடி (கரும்பொடி _ பிளாக் பவுடர்) ஒரு பக்கத்தில் மூடப்பட்ட குழாயில் திணிக்கப்பட்டு எரிக்கப்பட்டால் வெகு தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கி அழித்திடும் ஆற்றல் பெற்றதாகிறது. சீனர்கள் இந்த முறையை ஆதியில் கையாண்டனர். 13ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் இதனைக் கையாண்டார்கள். மூங்கில் குழாயை இரும்புத் தகடால் கெட்டிப்படுத்தி வெடிப்பொடியைத் திணித்துத் துப்பாக்கி தயாரித்தனர். பின்னர் இத்தொழில்நுட்பம் அய்ரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. 19ஆம் நூற்றாண்டில் கரும்பொடி மேம்படுத்தப்பட்டு, நைட்ரோ செல்லுலோஸ் பயன்படுத்தியதால் சிறிதளவே புகைவருவதுபோல் மென்மையாகத் தயாரிக்கப்பட்டது. தற்போதைய தயாரிப்பு வெடிப்பொருள்கள் சிறிதளவுகூடப் புகை வராதவகையில் தயாரிக்கப்படுகின்றன.

14ஆம் நூற்றாண்டில் சீனர்கள், வெடிப்பொடியைப் பயன்படுத்தித் தாக்கும் மஸ்கட் என்ற கருவியைக் கண்டுபிடித்தனர். ஹாக்கி விளையாட்டில் பயன்படுத்தப்படும் மட்டைபோல் ஒரு முனையில் வளைந்தும் மறுமுனை நேராகவும் அமைந்த இரும்புக் குழாயினுள் வெடிப்பொருளைத் திணித்துப் பற்றவைத்துத் தாக்குதலுக்குப் பயன்படுத்தினார்கள். இதனை நிறுத்துவதற்கு ஒரு ஸ்டாண்டு தேவைப்பட்டது. தொலைக்கண்ணாடியைப் பொருத்தும் ஸ்டாண்டு போல! பொடியைத் திணிப்பதற்கு நெடுநேரம் ஆனதால் இது அவ்வளவாகப் பயன்படவில்லை. இருப்பினும் போர்த்துக்கீசியர்கள் இதனைத் தயாரித்து ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர்.

ஸ்பெயின் நாட்டுக்காரர்கள் Arquebus என்றழைக்கப்படும் சிறிய பீரங்கி ஒன்றை வடிவமைத்தனர். 1300ஆம் ஆண்டிலிருந்தே பீரங்கிகள் போரில் பயன்படுத்தப்பட்டு வந்தன. என்றாலும் கைகளில் ஏந்திச் சுடும் வகையில் இருந்தால் தேவலை என்ற எண்ணம் ஏற்பட்டு இது வடிவமைக்கப்பட்டது. இருந்தாலும் குறிபார்த்துச் சுடுவதற்கு இது சரிப்படவில்லையாம்.

சிறிய கைத்துப்பாக்கி (Flintlock) பதின்மூன்றாம் லூயி எனும் பிரான்சு நாட்டு மன்னனின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டுக்கு வந்தது. கிட்டத்தட்ட 1612ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது எனலாம். வெடிப்பொடி கிட்டித்து வைக்கும் குழாய்ப் பகுதியோடு இணைக்கப்பட்டுள்ள விசை (டிரிக்கர்) இழுக்கப்பட்டவுடன் வெடிப்பொடி எரிந்து வெளிப்பட்டு சேதத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது. என்னதான் வேகமாகச் செயல்படும் ஆளாக இருந்தாலும் வெடிப்பொடி கிட்டித்துச் சுடுவதற்கு 15 நொடிகள் தேவைப்படும். இந்த வகைத் துப்பாக்கி செயல்படும் விதத்திலிருந்து உருவான ஆங்கிலச் சொல்லடை (Phrase) தான் லாக், ஸ்டாக் அன்ட் பாரல் (Lock Stock and Barrel) என்பதாகும். அதைப் போலவே மற்றொரு சொல்லடை Going off  Half Cocked என்பதும்.

சாமுவேல் கோல்ட் எனும் அமெரிக்கர் வடிவமைத்து உருவாக்கியதுதான் ரிவால்வர் கைத்துப்பாக்கி. ஒரு குண்டு திணித்துச் சுட்டுக் கொண்டிருந்தபோது, 1835இல் கோல்ட் ரிவால்வரைக் கண்டுபிடித்தார். அய்ந்து அல்லது ஆறுமுறை தொடர்ந்து சுடும் ஆற்றல் இதற்கு உண்டு. தொடக்கத்தில் கோல்ட் துப்பாக்கிகளை வாங்க ஆளில்லை. அவர் தொழிற்சாலையை மூடிவிடலாம் என்று நினைத்திருந்தபோது, அமெரிக்க ராணுவம் ஆயிரம் துப்பாக்கிகளுக்கு ஆர்டர் கொடுத்தது. 1856இல் உலகம் முழுவதும் இருந்து துப்பாக்கிகள் கேட்டு வாங்கினர். கோல்ட் பெரும் பணக்காரர் ஆனார். ஸ்மித் அண்ட் வெஸ்சன் எனும் போட்டி நிறுவனமும் துப்பாக்கித் தயாரிப்பில் இறங்கியது. மனிதர்களை அழிக்கும் கொலைக் கருவிகள் தயாரிப்பில் போட்டி!

ரைஃபிள் என்பது நீண்ட குழல் உடைய பெரிய துப்பாக்கி. இதில் ஒரு குண்டு போட்டுச் சுடுவார்கள். இதனை மேம்படுத்தி பெஞ்சமின் டைலர் ஹென்றி என்பவர் பல தோட்டாக்களைத் திணித்துத் தொடர்ச்சியாகச் சுடக்கூடிய ரிபீட்டிங் ரைஃபிளை வடிவமைத்தார். 1860இல் வந்த இத்துப்பாக்கி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து கிறிஸ்டோபர் ஸ்பென்சர் என்பார் வேறு மாதிரி துப்பாக்கியை வடிவமைத்தார். அமெரிக்க வணிகரான வின்கெஸ்டர் என்பவர் மேலும் மேம்படுத்தப்பட்ட துப்பாக்கியை உருவாக்கினார். வின்கெஸ்டர் மாடல் துப்பாக்கிகள் இன்றளவும் தயாரிக்கப்படுகின்றன என்பதே அதன் சிறப்பைக் கூறும்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *