பெண்களுக்கான தொழில் பயிற்சிகள், குறிப்புகள், பெண் சாதனையாளர்களின் நேர்முகங்கள் இவையெல்லாம் கொஞ்சம் ஆறுதல் தந்தாலும், பெரும்பாலும் வீட்டிலிருந்தே பெண்கள் வருமானம் பெறுவது பற்றியே பேசுகின்றன. குழந்தைகளை உடல்நலம் உள்ளவர்களாகவும், நல்ல குணம் கொண்டவர்களாகவும், புத்திசாலிகளாகவும் வளர்த்தெடுப்பது குறித்த பெண்களுக்கான நிகழ்ச்சிகள், பெண்கள் முழுமையடைவது தாய்மை அடையும்போதுதான் என்று உணர்ச்சி வசப்படும் குழந்தைப் பேறின்மைக்கான மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சிகள்… இவை எல்லாம் மீண்டும் மீண்டும் பெண்ணை மகப்பேறு இயந்திரமாகவும், சம்பளமில்லாத வேலைக்காரிகளாகவும் இருக்க ஊக்கப்படுத்துவதை நாம் உணர முடியவில்லையா?
சிறு வயதிலிருந்தே பெண் குழந்தைகளுக்குத் தன்னைக் காப்பாற்றிக் கொள்வது என்றால் தன் உடலை ஆண்களிடமிருந்து காப்பாற்றுவது எப்படி என்று சொல்லிக் கொடுப்பதோடு, அது தன் சுதந்திரத்தையும், தன் விருப்பு வெறுப்புகளையும் காப்பாற்றிக் கொள்வதும்தான் என்றும், ஆணாதிக்க சமூகம் வரையறை செய்யும் பெண் என்ற பிம்பத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதும்தான் என்றும் சொல்லிக் கொடுப்பதை ஊடகங்கள் தொடங்க வேண்டும்.
– செல்வகுமாரி கலியபெருமாள்