– மருத்துவர்கள் சோம&சரொ இளங்கோவன்
உலகில் இன்று பலரால் விரும்பப்படுவது உல்லாசக் கப்பல் பயணம். பல ஆண்டுகட்கு முன்னர் நாங்கள் எங்கள் பத்தாவது மணவிழாவைக் கொண்டாடச் சென்றிருந்தோம். குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஒரு நல்ல இத்தாலியப் பாட்டி இருந்தார்.
இப்பொழுது அந்தக் கவலையில்லாமல் திடீரென்று மிகவும் குறைந்த விலையில் புத்தாண்டைக் கொண்டாடச் சென்று வந்தோம்.
டிசம்பர் மாதம் மிகவும் குளிராக பனித் தொந்தரவு வெளியே செல்ல விருப்பமில்லாமல் இருந்த மாதம். அமெரிக்காவின் தெற்கே ஃப்ளோரிடா மாநிலம் நமது ஊர் போல இருக்கும்.
அங்கே எங்கள் மகன் குமார், மருமகள் வினையா வாழ்கின்றனர். அங்கே சூரியனைப் பார்த்துக் கொஞ்சம் வெயிலில் மகிழச் சென்றோம்.
ஒரு கெட்ட பழக்கமாக எப்போதும் கணினியில் உலாவிக் கொண்டிருக்கும் மருத்துவர் இளங்கோவன் மகிழ்ச்சிக் குரலெழுப்பினார். என்னவென்று பார்த்தால் உல்லாசக் கப்பல் பயணம் கடைசி நாட்கள் மிகவும் விலை குறைப்பு போகலாமா என்றார். மயாமியில் அவர்கள் தங்கியிருக்கும் கட்டிடத்தின் 48ஆவது மாடியிலிருந்து பார்த்தால் அந்தக் கப்பல்கள் தெரியும்.
சரியென்று ஒரு வாரம் கிளம்பினோம். கூட மகன் சந்துருவும் வந்தார்.
உல்லாசக் கப்பல் ஒரு மிதக்கும் பெரிய அய்ந்து நட்சத்திர விடுதி போலத்தான். 10 மாடிகள். மேலே மொட்டை மாடியில் இரண்டு நீச்சல் குளங்கள். தண்ணீரில் சறுக்கி விளையாடலாம். அங்கேயே கூடைப்பந்து, மற்ற விளையாட்டிற்கும் இடம் ஒதுக்கப் பட்டிருக்கும். சுற்றிலும் நடப்பதற்குப் பாதை. அதை விட மிகவும் அற்புதம் அங்கேயுள்ள உடற் பயிற்சிக் கூடம். பலவிதமான உடற்பயிற்சி எந்திரங்கள். நடக்க, ஓட, எடை தூக்க பலவிதமானவை.
பெரிய மகிழ்ச்சி கடலைப் பார்த்தவண்ணமே செய்யுமாறு பெரிய கண்ணாடி சன்னல்கள். உடலை அமுக்கி விடவும் வித விதமான உடற் கூட்டு நிபுணர்கள். எல்லாம் காசுக்குத் தகுந்த தோசை தான். கை கால் நகங்கள், முக அழகு என்று அழகு படுத்தும் நிபுணர்கள். எல்லாம் நேரங்குறித்துக் கொண்டு பணம் கட்டிச் செல்ல வேண்டும்.ஒவ்வொருவருக்கும் ஒரு முறை அரை விலையில் செய்து கொள்ளலாம் என்பதால் கும்பல் நிறைந்து வழியும்.
மூன்று நான்கு சாப்பாட்டுக் கூடங்கள். மூன்று பெரிய ஆடல் பாடல் போன்ற திரையரங்கங்கள். ஒரு அடுக்கில் 24 மணி நேரமும் கிடைக்கும் பிட்சா, ஹேம்பர்கர், அய்சுகிரீம் போன்றவை. ஆடல் பாடல் காட்சிகள், நகைச்சுவை அரங்கங்கள் என்று ஏதாவது நடந்து கொண்டே இருக்கும்.
முதல் இரண்டு நாட்கள் அனைவரும் கையில் பேப்பர்களை வைத்துக் கொண்டு எது எங்கே எப்பொழுது நடக்கின்றது, எந்த அரங்கம் எங்கே இருக்கின்றது என்பதைப் பற்றிக் குழம்பிப் போய் அலைவார்கள். நாங்களுந்தான். கப்பலின் முன் பக்கம், பின் பக்கம் என்று எல்லாம் போட்டிருந்தாலும் எல்லாம் நன்கு புரிவதற்கும் நாம் பயணம் முடிந்து வெளியே வருவதற்கும் சரியாக இருக்கும்.
தினம் தினம் என்ன நிகழ்ச்சிகள் எங்கே என்பதை முதல் நாள் இரவே கொடுத்து விடுவார்கள். அதைக் கரைத்துக் குடித்துத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். இதில் நான்கு நாட்கள் நான்கு நாடுகள் அங்கே கரையில் நிற்கும். அங்கே சுற்றிப் பார்க்கப் பல இடங்கள், பங்கேற்கும் பல நிகழ்ச்சிகள் இருக்கும். அதில் எதற்குப் போவது என்பதைக் கிளம்புவதற்கு முன்னேயோ அல்லது அவை நிரம்புவதற்கு முன்னரோ தேர்ந்தெடுத்து விட வேண்டும். அதற்குத் தனிக் கட்டணம் கட்டி சீட்டுகள் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆக உல்லாசப் பயணம் பெரிய தேர்வு எழுதுவது போலத் தயார் செய்து படித்துக் கரைத்துக் குடித்து தேர்வு செய்து பின்னர்தான் அனுபவிக்க முடியும்.
ஆனால் அனுபவிப்பது என்றால் உண்மையிலேயே அதற்கு ஈடு எதுவுமே இல்லை !
பயணம் முடிந்து செல்லும் போது அங்குள்ளோருக்கு பணம் கொடுப்பது வழக்கம். அந்தப் பணம் நிறைய இருக்க வேண்டுமானால் மக்கள் மகிழ்ச்சியாக இருந்திருக்க வேண்டுமல்லவா? அதனால் விழுந்து விழுந்து கவனிப்பார்கள். அங்கு வேலை செய்பவர்களைத் தேர்ந்தெடுப்பதும் மலர்ந்த முகத்துடன் மகிழ்ச்சியாக உற்சாகமாக வேலை செய்பவர்களைத்தான். ஆகவே கவனிப்பு என்றால் குறை சொல்ல முடியாத ராஜ மரியாதை தான். உணவும் விதம் விதமாக அவ்வளவு இருக்கும். நிகழ்ச்சிகளும் மிகவும் நன்றாக இருக்கும். ஆக ஒரு வாரம் மகிழ்ச்சிக் கடலில் _ உண்மையான கடலில் மிதந்து அனுபவிப்போம், வாருங்கள் !
நீச்சல் தெரிந்திருந்தால் மிகவும் நல்லது!