மயிலம் பொறியியல் கல்லூரி மாணவர் ஜம்புலிங்கம் இந்தப் பயனுள்ள கண்டுபிடிப்பைச் செய்துள்ளார். அவர் கூறியதாவது:
ஹெல்மெட் என்பதை ஏதோ போலீசுக்காக போடுவதைப்போல சிலர் நினைக்கிறாங்க. நீதிமன்றம் உத்தரவு போட்டாலும் அதை எப்படி ஏமாற்றலாம் என்றுதான் பலரும் திட்டம் போடுறாங்க. எனவே, இதற்கு கட்டாய வழி காணவேண்டி நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தபோது, உருவானதுதான் இந்தச் சிந்தனை.
ஹெல்மெட் போடவில்லையென்றால் பைக் ஸ்டார்ட் ஆகாது. அதனால் ஹெல்மெட் கட்டாயம் போட்டே ஆக வேண்டும். அப்படிப்பட்ட ஒரு தொழில்நுட்பத்தை ஒன்பது மாத முயற்சிக்குப் பின் கண்டுபிடித்திருக்கிறோம்.
ஹெல்மெட்டில் ஒரு கருவி, வண்டியில் ஒரு கருவி என இரண்டே கருவிதான். தலையில் ஹெல்மெட்டைப் போட்டதும் ஹெல்மெட்டில் உள்ள சர்க்யூட் ஆன் ஆகி வண்டியில் உள்ள கருவிக்கு சிக்னல் கொடுக்கும். அந்த சிக்னல் வந்தபிறகுதான் இன்ஜினுக்குத் தேவையான பவர் கிடைக்கும். அதன்பின் வண்டியை இயக்கினால் இயங்கும். ஹெல்மெட் போடாமல் இஞ்சினை எப்படி இயக்கினாலும் இயங்காது என்று விளக்கினார்.
அவரது நண்பர் சிவா, எல்லா ஹெல்மெட் போலவேதான் இதுவும் இருக்கும். இதைப் பயன்படுத்தினால் எந்த இடையூறும் இருக்காது. இதை உருவாக்க மொத்தச் செலவு ரூ.300தான். அதிக அளவில் உற்பத்தி செய்யும்போது 200 ரூபாய் செலவில் செய்ய பைக் தயாரிக்கும் நிறுவனமும், ஹெல்மெட் கம்பெனிகளும் இணைந்து இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் ஹெல்மெட் இல்லாமல் யாரும் பைக் எடுக்கவோ, ஓட்டவோ முடியாது என்றார்.
இதைச் செயல்படுத்த அரசு ஆணைப் பிறப்பித்து ஹெல்மட்டை எளிதில் கட்டாயமாக்க வேண்டும். தமிழக மாணவர்களின் ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புக்கு பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள்.