– நேயன்
நீராகாரம், பழஞ்சோறு, பழைய சாதம், பழையது என்று பலவிதமாய் அழைக்கப்படும் பழைய சோற்றுக்கு இணையான எளிய உணவு ஒன்றை இவ்வுலகில் எவராலும் காட்ட இயலாது. அத்தகு பெருமை வாய்ந்தது இப்பழைய சோறு!
பழைய உணவென்றாலே நலக்கேடுதானே தரும், அப்படியிருக்க இது மட்டும் எப்படி அருமருந்தாகிறது; அரிய உணவாகிறது? என்று நீங்கள் கேட்கலாம்.
பழைய சோற்றைக் குளிர்பதனப் பெட்டியில் வைத்து மறுநாள் சாப்பிடுவதுதான் கேடு பயக்கும். மாறாக, மீதியுள்ள சோற்றில் நல்ல நீரை ஊற்றி அதில் சின்ன வெங்காயத்தைத் தேவையான அளவு நறுக்கிப் போட்டு மூடிவைத்துவிட வேண்டும். மறுநாள் காலை அச்சோற்றை நீருடன் சேர்த்து சாப்பிட்டு வெங்காயத்தையும் இடையிடையே மென்று உண்டால் அதுதான் அற்புத உணவாகிறது. இன்றைக்கு மருத்துவர்கள் கூறும் எல்லா ஊட்டச் சத்துக்களும் இதில் உண்டு!
அதற்கு என்ன காரணம்?
இரவு முழுக்க நீருடன் சோறு ஊறும்போது, அதில் நுண் உயிரிகள் (லாக்டிக் ஆசிட் பாக்டீரியா) கோடிக்கணக்கில் பெருகுகிறது. அதனோடு வைட்டமின் பி6, பி12 போன்றவையும் இதில் அதிகம் உள்ளன. பழைய சாதம் புளித்து நொதிக்கும்போது இந்த விளைவுகள் உண்டாகின்றன.
சாதாரண தானியங்கள், பருப்புகளைவிட முளைகட்டிய பின் அவை பலமடங்கு சக்தியும், சத்தும் மிக்கனவாய் மாறுவது போலவே, பழைய சோறு நீரில் நொதிக்கும்போது அதன் பயன் பன்மடங்கு உயருகிறது.
சோற்று நீருடன் வெங்காயமும் சேர்ந்து ஊறுவதால் அச்சோறு மேலும் மருத்துவச் சிறப்பைப் பெறுகிறது. உடல் சூடு தணிக்கப்படுகிறது. குடல் புண் (அல்சர்) ஆற்றப்படுகிறது. வாதம் பித்தம் அகற்றப்படுகிறது.
ஆற்றுநீர் வாதம் போக்கும்
அருவிநீர் பித்தம் போக்கும்
சோற்றுநீர் இரண்டையும் போக்கும்
என்ற சித்தர் பாடல் இதை உறுதி செய்கிறது. ஆற்றுநீர், அருவிநீர் மூலிகைகள் கலந்து, தாதுப் பொருட்கள் கலந்து வருவதால் அவை மருத்துவத் தன்மை பெறுகின்றன. அவ்வகையில் ஆற்றுநீர் வாத நோயைக் குணப்படுத்துகிறது. அருவிநீர் பித்தத்தை குணப்படுத்துகிறது, பழைய சோற்றின் நீர் இந்த இரண்டையும் போக்குகிறது.
மேலும் இரத்த மூலம், தோல் நோய்கள், வயிற்றுவலி, உடல்சூடு, வேனல் கட்டி போன்றவற்றையும் அகற்றுகிறது.
அதிக விலை கொடுத்து குளிர் பானங்களை நாகரிகமாக, நாக்குச் சுவைக்கு குடிப்பது ஒட்டுமொத்த உடற்கேடு உண்டாக்கும். அதற்குப் பதில் பழையச் சோற்றுத் தண்ணீர் வெங்காயத்தோடு சேர்த்துப் பருகினால், உடல் நலம், வளம் வலுபெறும்.