நெசந்தானுங்க… பவானந்தி

ஜூன் 01-15

அப்ப ராஜராஜன்?

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்ல தி.மு.க. நிறைய இடத்தில தோத்துப் போனதுக்குக் காரணம் என்னா? என்னான்னு ஆளாளுக்கு மண்டையப் போட்டுப் பிச்சுக்குறாங்க… மக்களுக்கு இதைவிட யாரும் நல்லது பண்ணமுடியாதுங்குற அளவுக்குச் செஞ்ச கலைஞரையே நம்ம ஆளுங்க இப்படிப் பண்ணிட்டாங்களே அப்படின்னு பொலம்புறாங்க பலபேரு, மின்வெட்டுதான் காரணம்னு சிலபேரு… இல்லை விலைவாசின்னு சிலபேரு… காங்கிரஸ் கூட்டணிதான் பலபேரு… இன்னும் ஏதேதோ…

விலைவாசி நாடு முழுக்க ஒண்ணாதான் இருக்கு.  அதுக்குக் காரணம் மாநில அரசு இல்லை; மத்திய அரசுதான்.  மின் திட்டம்லாம் ஏற்கெனவே இருந்த அ.தி.மு.க ஆட்சியில கொண்டுவரலை.  அதனால தி.மு.க. ஆட்சியில புதுசா தொழிற்சாலைகள் வந்ததும் கரண்ட் பத்தலை.  அதான் கட் பண்ண வேண்டியதாயிடுச்சுன்னு சொல்லியும் யாரும் கேக்கல.

இதுல என்ன கொடுமைன்னா?  அ.தி.மு.க. ஓட்டுப் போட்ட மக்கள்லயே பலபேரு  ஆகா, நம்ம கையாலேயே நமக்கு ஆப்புவச்சுக்கிட்டோமே ன்னு புலம்புறாங்க.

ஒரு நாட்டுராஜா, வீட்டுக்கொரு சொம்பு பாலைக் கொண்டு வந்து இந்த அண்டாவில ஊத்திட்டுப் போகணும்னு உத்தரவு போட்டாராம்.  எல்லோரும் பால்தான் ஊத்துவாங்க.  நம்ம ஒரு சொம்பு தண்ணி ஊத்துனா என்ன தெரியவா போகுதுன்னு நெனச்சு ஆளாளுக்கு தண்ணிய மட்டும் கொண்டு வந்து ஊத்தி, அண்டா முழுக்க தண்ணியா இருந்ததாம்.  அதுமாதிரி, எப்படியும் கலைஞர் வந்துடுவாரு.  இவ்ளோ நல்லது செஞ்சதுக்கு மக்கள் ஓட்டுப்போட்டுடுவாங்க, அதுனால நம்ம மாத்தி ஓட்டுப்போடுவோம்னு நினைச்சு ஓட்டுப்போட்டவன் எல்லாம் இப்போ நனைச்சு சுமக்கிற மாதிரி ஆயிடுச்சேன்னு வாய்விட்டுச் சொல்ல முடியாமத் தவிக்கிறானுக.

இப்படி எவ்வளவோ காரணம் இருந்தும், புதுச்சா ஒரு காரணம் கண்டுபிடிச்சுச் சொன்னுச்சுபாரு  தென மலரு!. அப்படியே மெர்சலாஇடுச்சுப்பா.  ஆமா.. அதுவா?  இதுவா? ன்னல்லயாம் யோசிக்காதீங்க.. தி.மு.க தோக்கிறதுக்கு ஒரே காரணம்தான்.  அது தஞ்சாவூர் பெரியகோயில்தான், இதென்னடா இது புதுக்கரடின்னா.. ரொம்ப காலமா இப்படிதான் இருக்குதாம்.  அதுக்கு ஒரு பெரிய பட்டியலே போட்டிருக்கான்.  இந்திராகாந்திக்கு ஆபத்து வந்துச்சாம்.  எம்.ஜி.ஆருக்கு மயக்கம் வந்துச்சாம்.  கலைஞருக்கு ஆட்சி போச்சாம்….

ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்பிட்டாக … அமெரிக்காவுல மைக்கெல் ஜாக்சன் கூப்பிட்டாகனு கதையா அளந்துவுடுறான்.

1971-_ல ஆட்சிக்கு வந்த கலைஞரு ராஜராஜன் சிலையை கோயிலுக்குள்ள வைக்கணும்னப்போ மத்திய அரசு புதுசா எதுவும் செய்து தொன்மையைக் குலைக்க முடியாதுன்னு சொன்னுச்சாம்.  அப்போது புதுசா வராஹி மண்டபம் கட்டுறீங்களே… அதுமட்டும் என்னான்னு கேட்டு இடிக்க வச்சதாலதான் கலைஞருக்கு ஆட்சிபோச்சாம்.  இடிக்கச் சொன்ன மத்திய அரசில இந்திராகாந்தி ஆட்சி போச்சாம்…. கோவிலைக் கட்டின ராஜராஜன் மாமான்னனாவே இருந்தாலும் கோவிலுக்கு வெளியேதான் நிக்கணும்னு சொல்ற பார்ப்பனியத்தை எதிர்த்ததால ஆட்சிபோச்சாம்.

அதே மாதிரி, பெரியகோவில் கட்டி 1000 ஆண்டு ஆச்சுன்னு கலைஞரு, போனவருடம் நடத்தின விழாவில இது கணக்குத் தீர்க்கும் நாள். ராஜராஜன் சதுர்வேதி மங்கலங்களை உருவாக்கினான்.  கலைஞர் சமத்துவபுரங்களை உருவாக்கினார் அப்படின்னு ஆ.ராசா பேசினாறாம்.  அதாவது, ராஜராஜன் பார்ப்பானுக மட்டும் நல்லா வாழ சதுர்வேதி மங்கலங்களை உருவாக்கியதற்கு மாற்றா சமத்துவபுரத்தைக் கலைஞர் உருவாக்கினா ருன்னு பார்ப்பானுகள எதிர்த்துப் பேசினதுனாலதான் ராசாவுக்கு ஜெயிலாம்.  கலைஞருக்கு ஆட்சிபோச்சாம்.  இது பெரியகோவில் ராசியாம்.

சுத்தி வளைச்சு என்ன சொல்ல வர்றாங்க தெரியுதா? பெரிய கோவிலுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ராசி இல்லைன்னா?  அப்ப ராஜராஜன்?  நம்ம கேட்கமாட்டோமா?

அதுகிடையாது.  பார்ப்பானை எதிர்த்துப் பேசினா, வேலைசெஞ்சா பார்ப்பனியத்துக்கு ஆப்புவச்சா, உங்களுக்கு அதிகாரம் கிடைக்காதுங்கறாங்க.
பார்ப்பனக் கும்பலுக்கு அள்ளிக்கொடுத்து பக்கத்திலேயே வச்சுக்கிட்டதாலதான் அவன் மாமன்னன்.  பார்ப்பனியத்தை எதிர்த்தா தொலைச்சுடுவோம்; அதிகாரத்தைப் புடுங்கிடுவோம்னு மெரட்டுகிற வேலைதான் இது.  எங்களுக்குத் தெரியும் பூ… என்னாத்துக்கு எல்லாப் பார்ப்பானும் கூட்டு சேர்ந்து கலைஞரை எதிர்க்கிறீங்க… உங்க பரம்பரை ஆளனும்னு நெனக்கிறீங்கன்னு!  எங்க மக்களுக்குத்தான் இன்னும் புரியல… அவங்களுக்குப் புரிஞ்சிடுச்சுன்னா அதிகாரம் என்ன? அக்கிரகாரம்கூட உங்களுக்குக் கிடையாது.


அது…. ஆணவச் சிரிப்பு

ஜெயிச்சுட்டாங்க… என்ன பண்ணப் போறீங்க?  அப்படின்னு கேட்டாரு அவங்க செய்தியாளரு.  ஆங்… அதுக்குள்ள சொல்லிடுவோமா?  பதவியேற்பு வைபவம் முடிஞ்ச பிறகு பார்த்துக்கலாம்ன்னாங்க, நல்லா கவனிச்சுக்குங்க. விழா இல்ல வைபவம்.

சரின்னு பதவியேற்கிறதுக்கு முன்னாடியே பழைய கோட்டையைத் தயார்பண்ண ஆரம்பிச்சிட்டாங்க அதிகாரிங்க… ஏற்கெனவே மோடியைக் கூப்பிட்டு விருந்துவச்ச அம்மால்ல இவுங்க… அதுவுமில்லாம மோடி பதவியேற்புக்கு தனி விமானத்தில போய்ட்டு வந்த ஆள் ஆச்சே… அதனால மோடி முதல் வரிசையில ஆஜராயிட்டாரு பதவியேற்பு வைபவத்துக்கு!  234 தொகுதியிலயும் டெபாசிட் தொகையை அரசுக்கே கொடுத்திட்ட தியாகி கட்சியான பிஜெபி தலைவரு பொன். ராதாகிருஷ்ணன் ஜபர்தஸ்தா முதல் வரிசையில இருக்கிறாரு.  அப்படியே மோடிக்குப் பக்கத்தில கம்யூனிஸ்ட் ஆளுங்க… அடடா… என்ன கூட்டணி!

சரி, எங்க முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தைக் காணோம்னு நெனக்குறீங்களா?  மோடி முக்கியமா? ம.ம.க. வும் த.மு.மு.க.வும் முக்கியமா?  யாரு முக்கியம்னு அந்தம்மா காட்டிடுச்சு.  1_ ஆம் நம்பர் போட்ட சீட்டு தோழிக்கு 3_ஆம் நம்பர் போட்ட சீட்டு யாருக்குத் தெரியுமில்ல… அடடா… அவர் அடிச்ச கூத்து.  கூத்தில ராஜா வேஷம் கட்டுறவனைவிட நான்தான் இங்க எல்லாம்கிற மாதிரி கோமாளிதான் ரொம்பத் துள்ளுவானாம்.  அப்படியொரு கோமாளிதான் 3_ஆவது சீட்டுல.

எல்லோரும் பதவியேற்க, பதவியேற்க புன்சிரிப்போட இருந்த இந்த குரூப்பு, சங்கரன்கோவில் தனித்தொகுதியில ஜெயிச்ச கருப்பசாமி அமைச்சரா பதவியேற்க வந்தாரு.  வேகவேகமா கொஞ்சம் பதட்டத்தோட பேசிட்டாராம்.  என்னா… சிரிப்பு, கிண்டல் செஞ்சு, பழிப்பு காட்டி, நடிச்சுக் காட்டி சிரிக்கிறாரு கோமாளி நடிகரு.  மேடையில இருக்கிற அம்மாவும் வாய்விட்டு சிரிக்கிறாங்க.  சூத்திரன், பஞ்சமன்னா அவ்வளவு இளக்காரமா?  அந்தப் பார்ப்பன ஜாதித் திமிரைவிட உங்களைச் சிரிக்க வைச்சது வேறென்ன இருக்கமுடியும்?  உங்க மேடையில ஓடுற பாட்டையே திருப்பிக் கேளுங்க… வாத்தியாரு பாடுறாரு…

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு.


ஆட்டோ வரும் என்பதாலா?

இப்போதே சங்கிலிப் பறிப்புக் கொள்ளையர்கள் ஆந்திரா நோக்கி ஓடிவிட்டதாக செய்திகள் வருகின்றன  என்று முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் முன்பேயே அதாவது அ.தி.மு.க.வின் வெற்றிச் செய்தி வந்த உடனேயே அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேட்டி கொடுத்தார். சொல்லி வாய் மூடவில்லை மறுநாளே….. தாம்பரத்தை அடுத்த பீர்க்கங்கரணை தொல்காப்பியர் தெருவில் வீட்டுக் காவலாளியைத் தாக்கிவிட்டு நகை கொள்ளையடிக்கப்பட்டது; சென்னையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ பழ. கருப்பையாவின் மனைவியிடம் சங்கிலி பறிக்கப்பட்டது;

சென்னை கபாலி கோவில் அர்ச்சகரின் நகை பறிபோனது; சென்னையில் விருகம்பாக்கம் கிருஷ்ணா நகர் 4ஆவது தெருவில் வசிக்கும் தேவதாஸ் (52) என்பவர் வீட்டில் 35 சவரன் நகை, 3 கிலோ வெள்ளி, ரூ. 55,000 ரொக்கம் ஆகியன மர்ம நபர்களால் பூட்டை உடைத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.  சென்னை நேரு நகரைச் சேர்ந்த சாந்தி வங்கியில் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பும்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் 8 சவரன் நகையைப் பறித்துச் சென்றுள்ளனர். சென்னை கொடுங்கையூர், கண்ணதாசன் நகரைச் சேர்ந்த சுப்ரமணி(45), அவரது மனைவி ஜெயலட்சுமியுடன் (40) பைக்கில் சென்றபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் ஜெயலட்சுமியின் கழுத்திலிருந்த 8 சவரன் நகையைப் பறித்துச் சென்றுள்ளனர். சென்னை, ராமபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(45) பைக்கில் சென்றபோது அவரது கையில் அணிந்திருந்த 4 சவரன் பிரேஸ்லெட்டைத் திருடிச் சென்றுள்ளனர். மே 17 அன்று பண்ருட்டி ராஜாஜி சாலையில் வசித்த சண்முகம்(75) என்பவரைக் கொலை செய்துவிட்டு அவரது அடகுக் கடையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது. மேலும், மே 22 அன்று சேலத்திலிருந்து சென்னை வந்த தனியார் பேருந்தில் பயணம் செய்த பயணிகளிடம் 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான 100 சவரன் நகை, 85 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

ஒரு வேளை ஆந்திரா போன திருடர்கள் திரும்ப வந்துவிட்டார்களோ? இல்லை, ஆந்திராவிற்கு டிக்கட் கிடைக்காமல் இங்கேயே தங்கிவிட்டார்களோ? சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும்  அ.தி.மு.க. அரசிடம்தான் கேட்கவேண்டும்.

எதுக்கெடுத்தாலும் கார்ட்டூன் போடும் தினமலமும்,மதி கெட்ட தினமணியும் இதற்கெல்லாம் கார்ட்டூன் போடுவதில் லையே ஏன்?அவாள் ஆட்சி என்பதாலா? இல்லை ஆட்டோ வரும் என்பதாலா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *