தமிழர்கள் இலக்கியவழி கலை, பண்பாடு, நாகரிகம், மருத்துவம், வாழ்வியல் என்று எத்தனையோ செய்திகளைக் கூறியுள்ளனர். அதன் உச்சமாக படிப்பறிவில்லா, எளிய பெண்கள் தாலாட்டுப் பாடும்போதே அதில் மருத்துவக் குறிப்பையும் சொல்லியுள்ள சிறப்பு ஈடு இணையில்லாததாகும்.
வயிற்றளைச்சல் மிஞ்சிப்போய் – கண்ணே உனக்கு
வயிற்று வலி வந்திருச்சா!
வெற்றிலையும் உப்பும் வைச்சு – கண்மணியே
வெறும் வயிற்றில் தின்னிடம்மா
என்று தாலாட்டுப் பாடுகிறார்.
உடல் சூட்டில் வயிற்றில் அளைச்சல் ஏற்பட்டு வயிற்றைப் புரட்டி வலிக்கும். அப்படிப்பட்ட நிலையில் வெற்றிலையில் உப்பை வைத்து மென்று தின்றால் நோய்நீங்கி, நலம் கிடைக்கும் என்று தாலாட்டுப் பாடல் வழி ஒரு மருத்துவத்தைச் சொல்லும் திறன், பாங்கு உலகில் தமிழர்க்கன்றி வேறு எவர்க்கும் இல்லை.
***
சாகும்போதுகூட தமிழ் சான்றோர் நயம்பட இலக்கியம் பேசியவர்கள்
வயதான தமிழ்ப்புலவன் சாகும் தருவாயில் இருக்கிறார். திடீரென விக்கிக் கொள்கிறது. அப்போது அவரது மகள் அங்கு ஓடிவந்து, தந்தைக்கு உயிர்போகப் போகிறது என்று எண்ணி ஒரு துணியில் பாலை நனைத்து வாயில் பிழிகிறாள். புலவர் அப்படியே அப்பாலை துப்பிவிட, மகள் அழுதபடி, பால் கசக்கிறதா? என்றாள்.
அதற்கு சாகும் நிலையில் உள்ள அப்புலவன்,
பாலும் கசக்கவில்லை! நீ பிழிந்த துணியும் கசக்கவில்லை! என்றார்.
கசக்காத அழுக்குத் துணியில் பாலை நனைத்துப் பிழிந்துவிட்டாள் என்பதை எவ்வளவு நயமாக, சிலேடையாக, இலக்கியச் சுவைச் சொட்ட சொல்லியுள்ளார் பாருங்கள் _அதுவும் சாகும் நிலையில்!
***
இன்னொரு தமிழ்ப்புலவன் தன் மனைவி திவசத்திற்கு மளிகைப் பொருட்களை, காய்கறிகளைச் சாக்கில் மூட்டைக் கட்டி தலையில் சுமந்து வருகிறார். அப்போது, எதிரில் குதிரையில் வந்த மன்னன், புலவரே என்ன தலையில்? ஏன் இப்படி சிரமப்படுகிறீர்? என்றான். அதற்குப் புலவர், என் தலைவி திவசம்! என்றார்.
இப்படியெல்லாம் தூக்கிச் சுமக்க வேண்டும் என்று என் தலைவிதிவசம் என்பது ஒரு பொருள். என் தலைவி திவசம். அதற்கு மளிகைப் பொருட்கள் தூக்கிச் செல்கிறேன் என்பது இன்னொரு பொருள்.
புலவரின் புலமைகண்ட மன்னன், ஒரு ஆளை அனுப்பி மூட்டையை புலவர் வீட்டில் சேர்க்கச் சொல்லி, புலவரை குதிரை மீதேற்றி வீட்டில் கொண்டுபோய் விட்டான்.
வறுமையில் வாடினாலும் அருமையான இலக்கிய வளம் தமிழர்களிடம் தழைத்தோங்கியது!