பணிக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தீர்வுகள்

ஆகஸ்ட் 01-15

மன இறுக்கம்:

இது பொதுவாக எல்லோருக்கும் இக்காலத்தில் பொதுவாகிப் போனாலும், பெண்களுக்கு இது சற்று கூடுதலாகவுள்ளது. காரணம், அவர்களின் சூழல், பாலினம், உடலமைப்பு, மாதவிலக்கு போன்றவை. குடும்பப் பொறுப்பு, குழந்தைகள் பராமரிப்பு, கணவன் குடும்பப் பொரியோர்களை கவனித்தல் என்று பலவற்றிற்கு இடையே பணிக்குச் செல்லும் நிலை. பாலியல் சீண்டல், வக்கிரம், வதந்தி, அவதூறு என்று பல்வேறு தாக்குதல்கள். இவற்றிற்கெல்லாம் ஈடுகொடுத்து, சமாளித்து தன் பணியை வெளியிடங்களுக்குச் சென்று செய்ய வேண்டியுள்ளது. இதனால் பெண்களுக்கு மன இறுக்கம், மன உளைச்சல் போன்றவை தவிர்க்க இயலாததாகிறது.

வேலையைச் சரியாகச் செய்ய வேண்டும்; குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும், குறையில்லாமல், குற்றம் சொல்லாமல் முடிக்க வேண்டும் என்பன போன்ற எண்ணங்கள் அவளை மேலும் இறுக்கம் கொள்ளச் செய்கின்றன. இதனால் பணி செய்யும்போது பதட்டம், கூட்டங்களில் பேசும்போது நடுக்கம், உடல் வியர்த்தல், இதய நோய், வயிற்றுப் புண் உருவாகுதல் போன்று சில உடல் ரீதியான பாதிப்புகளையும் பெண்கள் ஏற்க வேண்டியுள்ளது.

இதைத் தவிர்க்க, திட்டமிட்டு, முன்கூட்டியே பணிகளைச் செய்ய வேண்டும். கடைசி நேரத்தில் செய்ய முனைவதை மாற்றிக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணுவதைத் தவிர்க்க வேண்டும். நம் மனதுக்கு நாம் சரியாக இருக்கிறோம் என்று நிறைவுகொள்வது தேவையற்ற உளைச்சலைப் போக்கும்.

யாரிடமும் அளவோடு பழகுவது; ஆண்களிடம் எல்லையோடு பழகுவது; பிறர் பற்றிக் குறை கூறாதிருத்தல்; குறையைப் பிறர் சொன்னால், அதுகுறித்து கருத்துக் கூறாதிருத்தல் போன்ற செயல்பாடுகள் மூலம் இறுக்கத்தைத் தவிர்க்கலாம்.

மாற்றாக, நகைச்சுவை படிப்பது, இசை கேட்பது; மனம்விட்டுப் பேசிச் சிரிப்பது, 10 நிமிடம் தேவையானபோது அமைதியாய் இருப்பது, ஏதாவது இரண்டு மூன்று யோகாசனங்களை நாள்தோறும் காலையில் செய்வது போன்றவை இப்பிரச்சினைகளுக்குத் தீர்வாகும்.

மாதுளை, கொத்தமல்லி கீரை, கறிவேப்பிலை துவையல், வெள்ளறிப் பிஞ்சு, கீரை, பழங்கள் ஒவ்வொன்று எடுத்துக் கொள்வது, உடல் நலம் கெடாமல் காக்கவும், மன இறுக்கம், குருதிக் கொதிப்பு போன்றவற்றைக் குறைக்கவும் பயன்படும்.

பணிசார்ந்த பாதிப்புகள்

கணினியில் அதிகம் ஈடுபடுவதால் கண் பாதிக்கப்படுதல்; விரல் மூட்டுகள் பாதிக்கப்படுதல், பருத்தி, அச்சுக் கூடங்கள், இரசாயனக் கூடங்களில் பணியாற்றுவதால் நுரையீரல் பாதிக்கப்படுதல் போன்று பல தொழில்சார் பிரச்சினைகள் வர வாய்ப்புண்டு.

இவற்றின் பாதிப்பு அதிகமாவதைத் தடுக்க (தவிர்க்க), தொடர்ந்து அப்பணியில் ஈடுபடுவதைத் தவிர்த்து, ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை பத்து நிமிடங்கள் ஓய்வு கொடுத்து மீண்டும் செய்வது வேண்டும். தொலைக்காட்சியோ, மின்மோட்டாரோ தொடர்ந்து பயன்படுத்தாமல் 15 நிமிடம் நிறுத்தி மீண்டும் இயக்கினால் அவை நீண்ட காலம் உழைக்கும் என்பது போலத்தான் இதுவும்.

உடல்பருமன் மற்றும் மூலம்

உட்கார்ந்து, உடலுழைப்பின்றியே பல வேலைகளும் செய்யப்படுவதால் உடல் பருமன் ஏற்படும். இதன்மூலம் சர்க்கரை, இதயநோய்கள், மூலநோய் வாய்ப்புண்டு.

இப்பாதிப்புகளைக் குறைக்க அல்லது தடுக்க ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து சற்று நடந்துவிட்டு வந்து மீண்டும் உட்கார வேண்டும்.

சோற்றுக்கற்றாழை, மாதுளை, வெங்காயம், கீரைகள், பழங்கள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். காரம், உப்பு அதிகம் சேர்க்காத உணவை உண்ண வேண்டும். பொறித்த உணவு, பொட்டல உணவுகள் அறவே கூடாது.

முதுகுவலி, கழுத்துவலி:  உட்கார்ந்து வேலை செய்வதால் இவை வர வாய்ப்புண்டு. அதைத் தவிர்க்க மேற்சொன்ன முறைப்படி நடந்து கொள்வதோடு, யோகாசனங்கள் ஒன்றிரண்டு செய்வதும், முடக்கற்றான் கீரை கடைந்தோ, தோசையில் கலந்தோ சாப்பிடுதல் நல்லது.

குளிர்ந்த இடங்கள் குளிரூட்டப்பட்ட அறைகள், தண்ணீர் புழங்கும் இடங்களில் பணியாற்றுவோர் குளிர் சார்ந்த நோய்களால் தாக்கப்பட வாய்ப்புண்டு. அவர்கள் சூடான பானங்கள் பருகுதல், கையுறை, காலுறை அணிதல், ஏ.சி. அறையை விட்டு 10 நிமிடம் வெளியில் வந்து மீண்டும் சென்று அமர்தல் போன்றவை பாதிப்பைக் குறைக்கும். முடிந்த மட்டும் ஏ.சி. பயன்பாட்டைக் குறைத்து வியர்வை வெளியேற வாய்ப்பளிப்பதுதான் உடல் நலத்திற்கு நல்லது.

மாதவிலக்கு

இதனால் பெண்கள் ஒவ்வொரு மாதமும் பாதிக்கப்படுகின்றனர். வயிற்றுவலி, சாப்பிட முடியாமை, குமட்டல், அசதி போன்றவை வரும். சோற்றுக் கற்றாழை தொடர்ந்து உண்ணுதல் நல்ல பயன் தரும். வழக்கமான உடற்பயிற்சி இந்த தொல்லைகளைக் குறைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *