திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை
பூரண மதுவிலக்குக் குறித்து கலைஞர் அறிவிப்பு – வரவேற்கத்தக்கது – தாய்க்கழகம் துணை புரியும்!
தமிழக சட்டமன்றத்திற்கு வருகின்ற 2016 இல் நடைபெறும் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்குக் கொண்டு வரப்படும். டாஸ்மாக் மதுக்கடைகள் ஒழிக்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் அறிவித்திருப்பது பெரிதும் பாராட்டி வரவேற்கப்படவேண்டிய சிறந்த மக்கள் நல அறிவிப்பாகும்.
திராவிடர் கழகத்தின் சேலம் தீர்மானம்
கடந்த 7.12.2014 சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றிய முக்கிய தீர்மானம் – தமிழ்நாட்டில் மது ஒழிப்பு என்பது மிகமிக இன்றியமையாதது; காரணம் இளந்தலைமுறையினர் உள்பட இந்தக் குடிகெடுக்கும் குடியால் வாழ்வு உள்பட பாழ்படுகின்றது.
அன்று முதலமைச்சர் கலைஞர் சொன்னது
தி.மு.க. ஆட்சி மதுவிலக்கை ரத்து செய்து, கொண்டு வந்தபோது, நிதிநிலை அறிக்கையில், கொழுந்து விட்டு எரியும் நெருப்பு வளையத்திற்குள், கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழ்நாடு திகழ்ந்து வருவதால், அனைத்து இந்தியா, அண்டை மாநிலங்களில் அனைத்திலும் பூரண மதுவிலக்கு அமல் ஆனால், நமக்கு வசதி என்றார்.
கொள்ளை லாபம்!
இன்று டாஸ்மாக் கடையின் விற்பனை கொள்ளையோ கொள்ளை.! தமிழ்நாடு அரசுக்குக் கிடைக்கும் மது ஆயத் தீர்வை வருமானத்தைவிட, மதுவை ஏகபோகமாய் உற்பத்திச் செய்து, விற்கும் தனியார் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கே இதனால் கொள்ளை லாபம் என்பது மறுக்கப்பட முடியாத ஓர் உண்மை.
மதுவிலக்குக் கொள்கையை வெற்றிகரமாக அமல்படுத்த அதனுடன் கள்ளச்சாராய ஒழிப்புத் திட்டத்தையும் மாற்று வழியில் அரசு வருவாய் ஈட்டுதற்கான திட்டங்களும் ஒட்டுமொத்தமாக Multi-Pronged Attack and Plan என்ற முறையில், பொருளாதார வரிஇயல் வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்து ஆக்கபூர்வமாக, வெற்றிகரமாக இதைச் செய்ய முடியும் என்று வாக்காளர்கள் மத்தியில் தி.மு.க. பொருத்தமான திட்டத்தை அறிவித்தல் அவசரம், அவசியம்!
தாய்க்கழகம் துணை புரியும்
தாய்க்கழகமான திராவிடர் கழகம் இந்தப் பிரச்சாரத் திட்டத்தில் தி.மு.க.வுடன் தோளோடு தோள் நிற்கும் என்பதையும் அறிவிக்கிறோம்.
– கி.வீரமணி, தலைவர்,
திராவிடர் கழகம்.
முகாம்: சிங்கப்பூர்
21.7.2015