பெரியார் உலகமயமாகிறார்!
பெரியாரிஸ்ட்டுகள் ஜெர்மனியில் கூடுவோம்!
உலக பகுத்தறிவாளர்கள்
மாநாடு
உலக பெரியாரிஸ்டுகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு; ஆம் எளிதில் கிடைக்காத அரியதோர் வாய்ப்புதான்! பல ஆண்டுகளாக நாம் கனவு கண்டோம். சில ஆண்டுகளாக ஆழ்ந்து திட்டமிட்டோம். நம் அறிவு ஆசான் – உலகத் தலைவர் பெரியார் ஓர் ஒப்பற்ற பகுத்தறிவுப் பகலவன் என்பதை உலகத்திற்கு நாம் பறைசாற்றிட, பெரியார்தம் தத்துவங்களை பகுத்தறிவு, மானுடநேயம், பெண்ணுரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு இவைகளை உலகறியச் செய்து, அவர்தம் சாதனைகளை – அமைதிப் புரட்சியை அகிலம் அறியச்செய்ய ஓர் அரிய வாய்ப்பு.
ஆம். பெரியார் பன்னாட்டு அமைப்பும், பகுத்தறிவாளர்களும் இணைந்து நடத்தும் பெரியார் பன்னாட்டுறவு பகுத்தறிவாளர் மாநாடு ஜெர்மெனியில் வருகின்ற 2016 ஆண்டில் ஜூலை 28, 29, 30 ஆகிய மூன்று நாள்களில் பல்வேறு கருத்தரங்குகள் _- கலை நிகழ்ச்சிகளுடன் ஜெர்மனியில் எல்லா ஏற்பாடுகளும் தொடங்கி நடைபெறுகின்றன. ஜெர்மனி பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவரான பேராசிரியை டாக்டர் உல்ரிக் நிக்கலஸ் அம்மையார் அவர்கள் தலைமையில் அமைந்த உள்ளூர் குழுவும், பெரியார் பன்னாட்டு அமைப்பின் இருபெரும் ஆற்றல்மிகு இயக்குநர்கள் பேராசிரியர் டாக்டர் இலக்குவன் தமிழ், டாக்டர் (மருத்துவர்) சோம.இளங்கோவன் -_ டாக்டர் சரோஜா அம்மையார் போன்றவர்களும் இணைந்த வரவேற்புக் குழுவினர் தொடக்ககட்ட பணிகளைத் தொடங்கிவிட்டனர். அந்தப் பருவம் குளிர் இல்லாத கோடைப் பருவம்; வெளிநாடுகளிலிருந்து வந்து கலந்து கொள்பவர்களுக் குரிய அந்த தட்ப வெட்ப சூழ்நிலை மிகவும் வசதியாக இருக்கும். ரைன்நதி படகுப் பயணம் _- இறுதி நாள் பொழுது போக்காகவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
வெளிநாட்டுப் பிரதிநிதிகள் -_ பேராளர்கள் விரும்பும் வண்ணம் மிதமான வாடகை ஓட்டல்களையும் _- உள்ளூர் வரவேற்புக் குழுவினர் ஏற்பாடு செய்ய ஆயத்தமாக உள்ளனர். மூன்று நாள் மாநாடு ஜெர்மனியின் கொலோன் நகரில் நடந்த பிறகு ஊர் திரும்புமுன், ஒருவாரம் அல்லது 10 நாட்கள் அய்ரோப்பிய நாடுகளான சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், லண்டன் சென்று திரும்ப பேராளர்கள் விரும்பினால், அவர்கள் பிரபல பயணக் கம்பெனிகள் மூலம் (Package Tour) அவரவர்கள் சொந்த செலவில் ஒட்டுமொத்த பகுத்தறிவாளர்கள் குழு சுற்றுலாவாக அமைத்துக் கொண்டு தமிழகம் -_ சென்னை – திரும்பவும் ஏற்பாடு செய்ய யோசிக்கலாம். மாநாட்டில் கலந்து கொள்ளும் பேராளர்களுக்கு விமான பயணக்கட்டணம் அல்லாமல் எவ்வளவு கட்டணம் (தங்கும் ஓட்டல், மாநாட்டில் மதிய உணவு _- இடையில் தேநீர் உட்பட ஆகும் தொகை) எவ்வளவு என்பது விரைவில் அறிவிக்கப்படும்.
அதிகபட்சம் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் (Delegates) 100 பேர்களும், உள்ளூர்காரர்கள் 200, 300-க்கு மேலும் எதிர்பார்க்கப்படுகின்றார்கள். 100 பேர் First Cum First Served — – முதலில் பதிவு செய்தவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் பதிவு செய்து பேராளர்கள் (Delegates) ஆக்கப்படுவர்.
இங்கே கணிசமானவர்கள் எண்ணிக்கை புறப்பட்டால் (Package Tour) விமான டிக்கெட்டுகளில் விலை குறைய வாய்ப்பு இருக்கக்கூடும். இது சம்பந்தமாக பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் வீ. குமரேசன் (ப.க.மாநில பொதுச் செயலாளர்), கோ.ஒளிவண்ணன், சென்னை தமிழ்ச் செல்வன், தருமபுரி ஊமை ஜெயராமன் ஆகியோர் குழுவினராக முதலில் தொடர்புக்கு செயல்படுவர்.
மற்ற விவரங்கள் அவ்வப்போது வெளியிடப்படும். மாநாட்டின் தலைப்பு (Theme of the conference) கருத்தரங்க அமைப்புகள், ஆய்வுக் கட்டுரையாளர்கள் _ மலர் தயாரிப்பு இப்படிப் பலப்பல பிறகு அவ்வப்போது அறிவிக்கப்படலாம்.
கி.வீரமணி,
புரவலர், பகுத்தறிவாளர் கழகம்