திரைப்பார்வை : காக்கா முட்டை

திரைப்பார்வை ஜூலை 16-31

பாத்திரத் தேர்விலேயே இயக்குநர் வெற்றிபெற்று விடுகிறார். அந்தளவுக்கு ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக் களத்திற்கு அவ்வளவு பொருந்திப் போகிறது. காக்கா முட்டை -_ ஒரு திரைப்படமாக இல்லாமல் நம் கண் முன்னால் ஒரு வாழ்க்கையாகவே விரிகிறது. காக்காமுட்டை தமிழ்த் திரைப்படத்திற்கு அரிதான டைனோசர் முட்டை. இந்த அளவுக்கு தாராள மயத்தின் தாக்கத்தை _ ஏழை, பணக்காரன் என்ற இரு பிரிவினரிடையே ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பை மிக வலிமையாக சமரசத்திற்கு இடமின்றி வேறு எந்த படமும் பதிவு செய்ததில்லை.

காட்சிகளுக்குள் கலை இயக்குநர், தேர்ந்த உரையாடல் ஆகியவற்றைத் தாண்டிமிகவும் நுட்பமான விசயங்களையும், அரசியலையும் கலை நுட்பத்தோடு சொல்லிய விதம், இந்த சமூகத்தின மீதான இயக்குநரின் தெளிந்த பார்வையைக் காட்டுகிறது. ரேசன் கடைக்கு அரிசி வாங்கச் சென்று டி.வி. வாங்கி வருவது. ஆர்ப்பாட்டங்களுக்கு காசு கொடுத்தது கூப்பிடுவது, பிரச்சினைகள் ஏற்பட்டால்தான் நாம் பஞ்சாயத்து செய்ய முடியும் என்று எம்.எல்.ஏ. சொல்வது, சிறுவர்கள் கொண்டு வரும் நிலக்கரியின் எடையை குறைத்து ஏமாற்றுகிற குடிகார கடை முதலாளியை, இருவர் ஏமாற்றுவது என்று காட்சிக்குக் காட்சி செறிவாக செதுக்கப்பட்டிருக்கிறது.

எளிய மற்றும் யதார்த்த வசனங்களும் புருவங்களை உயர்த்த வைக்கிறது. பீட்சா _ கடை கட்டுவதற்காக அங்கிருக்கும் ஓங்கி உயர்ந்த மரத்தை வெட்டிச் சாய்க்கும்போது, மற்ற சிறுவர்கள், அந்த மரத்தில் காக்கா முட்டை _ திருடிய கதாநாயகர்களைப் பார்த்து, இனிமே காக்கா முட்டை குடிக்க முடியாது என்று நக்கல் செய்து சிரிக்கும்போது, வெறுப்படைந்த அந்த சகோதரச் சிறுவர்கள், ஏன் வேகவேகமாகச் சொல்லிவிட்டு, அகலும்போது, நமக்கு  சுருக்கென்று ஒரு முள் தைத்ததுபோல இருக்கிறது.

அதேபோல, பீட்சா_வுக்காக தனது பேரன்கள் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அதே வேலையாக அலையும்போது, நூல் நூலா வந்தா கெட்டுப் போச்சுன்னு அர்த்தமடா என்று சொன்னதும், மருமகளிடம் தனது பேரன்கள் திட்டு வாங்கிவிடக் கூடாது என்ற ஆதங்கத்தில், குடமிளகாயையும், தக்காளியையும் வைத்து தோசை ஊற்றி பீட்சா _ செய்து தருவதைக் காணும்போது, பாட்டி, பேரன்களிடம் இருக்கும் அந்நியோன்யம் நமக்குள் ஏக்கத்தை தோற்றுவித்துவிடுகிறது. அதே பாட்டி செய்துதரும் பீட்சாவை சாப்பிட்டுவிட்டு, த்து _ என்று துப்பிவிட்டு போ பாட்டி எங்கள ஏமாத்திட்டே என்று வெறுப்படைந்து வேகவேகமாக வெளியேறிவிடும் சிறுவர்கள், பணக்காரனுக்கும் அரசியல்வாதிக்கும் ஏற்பட்டுவிட்ட சமரசத்தில் பீட்சா சாப்பிடும்போது, அஷ்டகோணல் முகபாவத்துடன், டேய் நல்லாவே இல்லடா. இதுக்கு பாட்டி சுட்ட தோசையே மேல் என்று சொல்லும்போது, இப்படிப்பட்ட துரித உணவுகளின் மேலான விமர்சனத்தை லாவகமாக இயக்குநர் வெளிப்படுத்தியதாகத்தான் கொள்ளத் தோன்றுகிறது. ஆனாலும், நாங்கள் அவங்களை விடப் போவதில்லை. 300 ரூபாய்க்கு இருந்த பீட்சாவை ரூபாய் 45க்கு கொண்டு வந்து அவர்களை சாப்பிட வைத்தே தீருவோம் என்று வலியுறுத்துவதை வியாபார உத்தி என்கின்ற பெயரில் முதலாளிகளின் நிலைமையையும் சொல்லி விடுகிறார்.

அதுமட்டுமல்ல, தனது மகன்களைத் தேடி அலைந்து ஒரு வழியாக கண்டுபிடித்து கனவில் ஆய்வாளருடன் ஜீப்பில் செல்லும்போது, தன் பிள்ளைகளை அடிக்கக் கூடாது என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கும் அந்தத் தாய், எவனோ ஒருவன் தன் பிள்ளையை அடித்துவிட்டானே என்ற ஆத்திரத்தில் பொங்கும்போது, ஆய்வாளர் என்னம்மா நான் இருக்கும்போதே இப்படியெல்லாம் பேசறே என்று அதட்டும்போது, பின்ன என்ன சார், இல்லாதவங்க இருக்கிற இடத்தில் கடையைத் தொறந்து உசுப்பேத்திகிட்டு என்று பதில் சொல்கிற அந்த ஒற்றை வசனத்தில் உலகமயம், தனியார் மயம், தாராள மயம் எப்படியெல்லாம் ஏழைகளின் வாழ்க்கையில் கோடி தாண்டவம் ஆடி அலைகழிக்கிறது என்பதை பளிச் சென்று சொல்லி விடுகிறது.

அதேபோல, ஊடகங்களும் மக்களை எப்படிச் சுரண்டுகிறது என்பதையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல காட்டிவிடுகிறார். அதையும் தாண்டி, இது ஏழை _ பணக்காரன் பிரச்சினை மட்டுமல்ல என்பதை நாயகர்கள் விலை உயர்ந்த உடைகள் அணிந்து பீட்சா கடைக்குச் சென்றதும் அவர்கள் சேரி மக்கள் என்பதற்காகவே அடிபடும் மிக நுட்பமான சமூக அரசியலைத் தொட்டுக் காட்டுகிறார் இயக்குநர்.

எல்லாவற்றையும் தாண்டி ஏழைகளுக்குத்தான் சுயமரியாதை அதிகம் என்பதை, பீட்சாவுக்காக அம்மா, பாட்டியிடம் பொய் சொல்வதும், அம்மா, பாட்டி இருவருக்கும் தெரியாமல் பல வழிகளில் பீட்சாவுக்காக காசு சேர்ப்பதுமாக இருக்கும்பொழுது, பூங்காவில் அவர்களுக்கு அறிமுகம் ஆகும் பணக்கார சிறுவன் சாப்பிட்டு மிச்சமான பீட்சாவை கொடுக்கும்போது, மறுத்துவிட்டு, திரும்புகிற இடத்தில் அந்த கதாபாத்திரத்தின் கனம் கூடி பார்வையாளர்களை நிமிர வைக்கிறது. அப்படிச் சேர்த்த காசு அவர்களின் பாட்டியின் இறுதிப் பயணத்திற்கு பயன்படும்போது, கதையின் கனம் கூடி கனக்க வைக்கிறது.

செல்லூலாய்டில் இவ்வளவு தீவிரமாகவும், கலை நுட்பத்துடனும், படைத்து அளித்ததற்கு இயக்குநரையும், இதுபோன்ற அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை சமூகப் பொறுப்புடன் வெளியிடுவதற்கு முன்வந்த தயாரிப்பாளரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அதேசமயம், இலவசக் கல்வி, வாரம் இரண்டு முட்டை, மதிய உணவு கொடுத்து பள்ளிக் கல்வியை அரசு ஒரு இயக்கமாகவே செயல்படுத்திவரும்போது, சென்னையில் நடக்கும் கதையில் கோழி முட்டை வாங்க காசிருந்தா, அவனுக ஏன் காக்கா முட்டை சாப்பிடறாங்க என்று கேட்பதும், காக்கா முட்டை என்பதையே தலைப்பாக வைத்து வறுமையின் ஆழத்தை சொல்ல முற்பட்டிருப்பதும் இன்றைய சூழலில் முரண்பாடாகத் தோன்றுகிறது. பள்ளிக்கு சென்று வந்த பிறகும்கூட, நிலக்கரி எடுக்க செல்வது போலக்கூட காட்டியிருக்கலாம். இதனால் கதைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்காது.

– உடுமலை வடிவேல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *