வரதட்சணை
மாப்பிள்ளைச் சந்தையில்
மணமகள் விலை!
மாமியார் பார்வையில்
வருவாயின் தலை!
மணக்கின்ற ஆணுக்கு
மரியாதை நிலை!
கொடுக்கின்ற தந்தைக்கு
கொடுமையின் உலை!
கொண்டுவரும் பெண்ணுக்கு
குறைந்திடில் கொலை!
புரிந்ததா பெண்ணே!
தெரிந்ததா கண்ணே!
பொன்னைக் கேட்கும்
புல்லரைப் புறந்தள்ளி
உன்னைக் கேட்கும்
உயர்ந்தோனை மணம்முடி!
பட்டம் பதவியில்
பகட்டுதான் உண்டு!
பாசம் பற்றில்தான்
பளிச்சிடும் வாழ்வு!
விதவைக்கு விடிவு
உறவுகொள்ள நாடுகின்றவன்
உரிமைகொள்ள ஓடுகின்றான்!
கொள்ளென்றால் கொள்வதும்
கடிவாளம் கக்குவதும்
குதிரைக்கு மட்டுமல்ல
கொடியர்க்கும் வழக்கம்!
அடுத்தவள் கணவனை
அடையத் துடித்து
ஆண்டாள் பாடியது
திருப்பாவை!
கணவனை இழந்தவள்
மறுமணம் முடிக்க
அய்யா பாடியது
தெருப்பாவை!
சூடிக் கொடுத்தாளை
நாடிய கண்ணன்
மனைவி யிருக்க
மறுமணம் முடித்தது
தாழ்நிலை யாகும்
கீழ்நிலை யாகும்!
சூடிய மாலையை
நாடிச் சூடிட தாடிப் பெரியார்
பாடிய தத்துவம்
பாழ்நிலை போக்கும்
வாழ்நிலை யாக்கும்!