தூக்கம் உடல் நலம் காக்கும்

ஜுன் 1-15,2021

– நேயன்

தூக்கம் தொலைத்தால் தொல்லைகள் பலவந்து சேரும்! மனித மூளையை, நலத்தை, இரத்த அழுத்தத்தை, சுரப்பிகளை, உடல் உறுப்புகளை, நலத்தோடும், பலத்தோடும், வளத்தோடும் வைத்து, புத்துணர்ச்சியை, புதுப்பொலிவை தருவது தூக்கம் என்பதை பலர் மறந்துவிடுகின்றனர் அல்லது அறியாமல் உள்ளனர்.

பணம் சம்பாதிக்க வேண்டும், பதவியைப் பிடிக்க வேண்டும், அடுத்தவரை வீழ்த்த வேண்டும் என்று பரபரப்போடும், பதட்டத்தோடும் செயல்பட்டு, மன உளைச்சலை உருவாக்கிக் கொள்வதால் தூக்கம் தொலைக்கப்படுகிறது.

ஒரு மனிதனுக்கு 6 முதல் 8 மணி நேர தூக்கம் என்பது கட்டாயம். மொத்தமுள்ள 24 மணி நேரத்தில் 8 மணி நேரம் உழைப்பு. 8 மணி நேர உழைப்புக்கு செல்லவும் வரவும் (பயணமாக) 2 மணி நேரம்; உடலை தூய்மை செய்ய, பத்திரிகை படிக்க 1 மணி நேரம், சாப்பிட அரை மணி நேரம்; தொலைக்காட்சி, பொழுதுபோக்கு ஒன்றரை மணி நேரம்; குடும்பத்தாருடன் கலந்து பழக, மகிழ ஒன்றரை மணி நேரம். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவற்றிற்கு 1 மணி நேரம் ஆக இவற்றிற்கு 8 மணி நேரம்.  8 மணி நேர உறக்கம் என்று மூன்றாகப் பகுத்து 24 மணி நேரத்தில் வாழ்வதே முறையான வாழ்வு.

16 மணி நேரம் உடலும் மூளையும் உழைத்த நிலையில், 8 மணி நேர ஓய்விற்குப் பின்தான் அவை மீண்டும் உழைக்கத் தயாராகும். அந்த ஓய்வு என்பது தூக்கம் மட்டுமே.

பகல் உணவிற்குப் பின் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் 30 நிமிடம் குறுந்தூக்கம் மிகவும் நல்லது. அத்தூக்கம் குறைவான நேரம் என்றாலும் மிகுந்த புத்துணர்ச்சியையும், சோர்வு நீக்கத்தையும், வேலை செய்வதற்கான ஆர்வத்தையும் தரும். பகலில் அதிக நேரம் தூங்கக் கூடாது. அது உடல் பருமனுக்கு வழி செய்யும்.

ஆனால், இன்றையச் சூழலில் இரவு தூக்கத்தைத் தொலைப்பது, 4 மணி அல்லது 5 மணி நேரம் மட்டுமே தூங்குவது என்பது நடப்பில் உள்ளது. இது மிகவும் கேடான செயல். தூக்கத்தைத் தவிர்த்து சாதிக்க நினைப்பது தவறான செயல்பாடு; ஒரு வகையில் அறியாமை!

ஒரு மனிதரின் செயல்பாடு மூன்று முதன்மைத் தன்மையைப் பெற்றிருக்க வேண்டும். 1. அச்செயல் நல்லதாக இருக்க வேண்டும். 2. அது திறமையாகச் செய்யப்பட வேண்டும். 3. செயல்கள் தெளிவாகச் செய்யப்படுதல் வேண்டும். இந்த மூன்றையும் சரியாகச் செய்ய தூக்கம் கட்டாயத் தேவை யென்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

தூக்கம் கெடுவது ஆண்மைக் குறைவை உருவாக்கும். செல் வளர்ச்சியைப் பாதிக்கும். செல்களில் உருவாகும் டாக்ஸின் வெளியேறாமல் பல நலக்கேடுகளை உருவாக்கும் புற்றுநோய் உட்பட. இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை தூங்குவதற்கு உரிய சரியான நேரம். படிக்கும் பிள்ளைகள்கூட இந்த நேரத்தில் கண் விழித்துப் படிக்கக் கூடாது. இந்த நேரத்தில் கட்டாயம் தூங்க வேண்டும்! காலை 4 மணிக்கு எழுந்து படிக்க வேண்டும் என்பது அறியாமை. தொல்லையில்லாத அமைதியான சூழலை ஏற்படுத்திக் கொண்டால், மற்ற நேரத்தில் படித்தாலே போதும். தேர்வுக்கு முதல் நாள் அதிகம் கண்விழிப்பது முட்டாள்தனம் என்பதை மாணவர்களும் மற்றவர்களும் அறிய வேண்டும்.

இரவு தூங்கச் செல்வதற்கு இரண்டரை மணி நேரத்திற்கு முன்பு சாப்பிட வேண்டும். தூங்குவதற்கு முன் வயிறுமுட்ட சாப்பிட்டுப் படுப்பது மிகவும் தப்பு. படுக்கும் முன் பல் துலக்க வேண்டும். வயிறு காலியாக இருப்பது போன்ற உணர்வுடன் படுக்கச் செல்ல வேண்டும். இளம் சூடான பால் பருகுவது நலம். இது தூக்கத்திற்கு நல்லது.

தூங்கும் இடத்தில் காற்றோட்டம் கட்டாயம். ஆக்ஸிஜன் முழுமையாகக் கிடைக்க வேண்டும். உடல் நலம், உள்ள நல்லம் எல்லாம் இதில் அடங்கியுள்ளது.

தூக்கம் இளமையையும் வளமையையும், புத்துணர்ச்சியையும், சிந்தனைத் தெளிவையும் தரும் என்பது மட்டுமல்ல; இவற்றை வேறு எதுவும் தர முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு தூங்குவது கட்டாயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *