சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

ஜூலை 01-15

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு!

மானம்

தந்தை பெரியார் இந்த நாட்டு மக்கள் தாங்கள் வாழ்வாங்கு வாழ்ந்த சமுதாயம் என்பதை உணராமல் எங்கிருந்தோ வந்த நாடோடிகள் கூறுவதை எல்லாம் உண்மை என்று நம்பி அவர்களுக்கு அடிமைப்பட்டு மானமிழந்து, அறிவிழந்து, இழிநிலையில் வாழ்வது கண்டு உள்ளம் பொறாமல் இந்த மக்களுக்கு மானமும், அறிவும் ஊட்டி உலக மக்களைப் போல் சிறப்பாக வாழவைக்க வேண்டும் என்று சூளுரை மேற்கொண்டார்.

அதற்காகவே வாழ்நாளெல்லாம் எத்தனையோ இழிவுகளையும், கல்லடி, சொல்லடிகளையும் சர்வ சாதாரணமாக எதிர்கொண்டார். ஏசியோர் பலர், ஏகடியம் செய்தோர் பலர், இடித்துரைத்தோர் பலர், எதிர்த்து நின்றோர் பலர். அத்தனையையும் அலட்சியப்படுத்திவிட்டு தான் கொண்ட கொள்கைக்காக, இந்த சமுதாயத்துக்கு மான உணர்வை ஊட்டிட அயராது பாடுபட்டார். மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு என்பதை வலியுறுத்தினார்.

திருவள்ளுவர் மானம் என்று ஓர் அதிகாரமே படைத்துள்ளார். எந்த நிலையிலும் தன்னிலைத் தாழாமலும், தாழுமிடத்து உயிர் வாழாமலும் ஆகிய பண்புகளோடு தன் நிலை மாறாமல் வாழ்தலுமே மானமாகும். மானத்தைப் பற்றிக் கூறும்போது,
புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று

இகழ்வார்பின் சென்று நிலை
_ (குறள் எண்: 966, அதிகாரம்: மானம்)

என்ற குறளில் ஒருவன் தன்மானத்தை விட்டுத் தன்னை இகழ்வார்பின் சென்று நிற்கும் நிலை, தன் நிலையிலிருந்து தாழ்ந்து நிற்கும் நிலை ஏன்? அது புகழ் பயக்காது. அது வேறு புதிய உலகிலும்கூட புகழ் தராது. அப்படியிருக்க தன்மானமின்றி தன்னை இகழ்வாரை உயர்ந்தவரென்றெண்ணி மானமிழந்து அவரை நாடி நிற்பது ஏன்? என்கிறார்.

தனி மனித வாழ்வில் உயிரைவிட மானமே பெரிது எனக் கருதும் இந்தக் குறளின் கருத்தும் பெரியாரை ஏற்கத்தான் செய்திருக்கும் (புத்தேள் நாட்டு என்று இருக்கிறதே! பெரியாருக்கு இது ஏற்புடையதல்லவே என்ற அய்யம் உண்டாகலாம். பல இடங்களில் மேலுலகம் என்று குறிப்பிடும் வள்ளுவர் இந்த இடத்தில் புத்தேள் என்று குறிப்பிட்டிருப்பது புதியதோர் உலகம் என்ற பொருளிலும் வேறு எந்த உலகமானாலும் என்று கொள்வதே பொருந்தும்.

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயர்நீப்பர் மானம் வரின் -_ (குறள் எண்: 969, அதிகாரம்: மானம்)

கவரிமான் தன் உடலினின்றும் ஒரு மயிர் வீழ்ந்து விட்டால்கூட உயிரை விட்டுவிடும். அதைப்போல மானம் இழந்தால் தன்மானமுள்ளவன் தன் உயிரைத் துச்சமாக மதித்து இறந்து விடுவான் என்று வள்ளுவர் கூறியிருப்பது மானத்தோடு வாழவேண்டும். நீ மனிதன்! மற்ற மனிதர்களைப் போன்றே நீயும் பிறந்தாய். எல்லாரைப் போலவே பிறந்து வாழ்ந்து வருகிற நீ இன்னொருவன் உன்னை இழிசொல் கூறி இகழும்போது அதை எதிர்த்து நான் மானமுள்ள மனிதன் என்பதை காட்ட வேண்டாமா? அதை விட்டு உயர்ஜாதி என்று கூறுபவனிடம் அடிபணிந்து நிற்கிறாயே! மானமிழந்தால் உயிர் வாழ்தல் இழுக்கல்லவா? எனவே, மானமே பெரிதென வாழக் கற்றுக்கொள். நீ மானமுள்ளவன் என்பதை உணர்ந்து மனிதனாக வாழ வேண்டும்! என்று காலமெல்லாம் இடித்துக்கூறி இந்த சமுதாயத்தைத் தலைநிமிர செய்த பெரியாருக்கு இந்தக் குறள் ஏற்புடையதாகத்தானே இருக்கும்!

அறிவு

இப்படி மானமிழந்து வாழும் நிலை உனது இயற்கை நிலையல்ல. நீ அறிவைப் பயன்படுத்தாமல், சிந்திக்காமல், யார் யாரோ சொல்வதையெல்லாம் வேதவாக்காக ஏற்று வாழ்கிறாயே! இது சரிதானா? எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளலாமா? முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காக ஏற்றுக்கொள்ளலாமா?
ரிஷிகள் சொன்னார்கள் என்பதற்காக ஏற்றுக் கொள்ளலாமா? வழிவழியாக வருகிறது என்பதற்காக ஏற்றுக் கொள்ளலாமா? இப்படி அவர் சொன்னார், இவர் சொன்னார் என்பதற்காக ஏற்றுக் கொள்கிறாயே? அதனால், உன் வாழ்வு வளமடைந்ததா? இல்லையே! எனவே, எதையும் ஏன்? எதற்காக? என்ற வினாக்களால் வினவி விடைகாண முயற்சி செய். உனக்கு அறிவிருக்கிறது. உன் அறிவை கொண்டு சிந்தித்துப் பார். உன் அறிவுக்கு சரி என்று பட்டால் ஏற்றுக்கொள். இல்லையேல் தள்ளிவிடு. நான் சொல்கிறேன் என்பதற்காகவும் ஏற்றுக் கொள்ளாதே! நான் சொல்வதையும் உன் அறிவைக் கொண்டு சிந்தித்துப் பார். சரி என்றால் ஏற்றுக்கொள். இல்லாவிட்டால் தள்ளிவிடு என்று அறிவுறுத்துவார்.

இப்படிக் கூறும் பெரியாருக்கு அதே கருத்தைக் கொண்ட குறள்கள் இருக்கும்போது அந்தக் குறள்கள் எவ்வளவு தூரம் பெரியாரை ஏற்றுக்கொள்ள வைத்திருக்கும்! அந்தக் குறள்களாவன,

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
-_ (குறள் எண்: 421, அதிகாரம்: அறிவுடைமை)

ஒருவனுக்கு அழிவு வராமல் காக்கின்ற கருவிதான் அறிவு. அந்த அறிவு பகைவராலும்கூட அழிக்க முடியாத அரணாகும். மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்ற குறிக்கோளோடு வாழ்ந்த பெரியார், மனிதன் அழிவுக்கு ஆட்படாமல் வாழ அறிவு ஒரு அரணாக இருக்கும் என்று வள்ளுவர் கூறியிருப்பதைத் தன் கருத்துக்கொப்பதாக உள்ளதை அறிந்துதானே ஏற்றிருப்பார்.
இது தவிர, எப்போதும் எதையும் உடனே நம்பிவிடாதே! யார் கூறினாலும் அவர் எப்பேர்பட்டவனாலும் அவரே சொன்னதாயிற்றே என்று நம்பி விடாதே. எதையும் உன் அறிவை கொண்டு சிந்தித்துப் பார் என்று அறிவுறுத்தும் பெரியாருக்குக் கீழ்க்காணும் குறள்கள் மிகவும் பிடித்திருக்கும் என்பதில் அய்யமில்லை.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
-_ (குறள் எண்: 423, அதிகாரம்: அறிவுடைமை)

எந்த ஒரு பொருளையும் கூறுபவர் யாராயினும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், அப்பொருளில் உள்ள உண்மையான பொருளைச் சிந்தித்து, ஆராய்ந்து, முடிவு காண்பதே அறிவாகும் என்று வள்ளுவர் கூறுகிறார் இதை போல இன்னொரு குறளாவது,
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

-_ (குறள் எண்: 355, அதிகாரம்: மெய்யுணர்தல்)

எந்தப் பொருளானாலும் அது எப்படிப்பட்டத் தன்மை உடையதாக இருந்தாலும், எப்படிப்பட்ட சிறப்பான, அருமையான, கவர்ந்திழுக்கும் தோற்றம் உடையதானாலும் அந்தத் தோற்றத்தில் மயங்கி விடாமல் நுணுகி ஆராய்ந்து, அப்பொருளின் உண்மை மெய்ப்பொருள் என்ன என்பதைக் காண்பதே அறிவு என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

இப்படிப்பட்ட குறள் கருத்துக்கள் தனது கருத்துகளுக்கு ஒப்ப அமைந்திருப்பதைக் கண்டே பெரியார் திருக்குறளை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

மேலும், அறிவுடைமை என்று ஓர் அதிகாரமே அதற்கென படைத்த திருவள்ளுவர், உலகின் முதன்முதல் அறிவுக்கு முதலிடம் கொடுத்த அறிஞர் அல்லவா?

அதேபோல், அய்யாவும் அறிவுக்கே முதலிடம் கொடுத்தவர் அல்லவா?

அறிவு என்பதைக் கல்வியாலும், கேள்வியாலும், பொறிகள் வாயிலாகவும் அறியலாம். இப்படி கல்வி மூலமும், கேள்வி மூலமும், பொறிகள் வாயிலாகவும் அறியும் அறிவு நமக்கு வாழ்வில் நல்ல பயன் தரும் என்பது அனுபவத்தின் மூலம் அறிந்துள்ளோம். இப்படி அறிகிற அறிவில் அய்யா அடிக்கடி கூறுவது பகுத்தறிவு என்பதாகும்.

எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் மனத்தை கண்டபடி அலையவிடாமல் நன்மை எது, தீமை எது என்பதை ஆராய்ந்து, அறிந்து, நன்மையே நன்மை பயக்கும், தீமை தீமையையே விளைவிக்கும் என்பதைக் கண்டறிந்து, தீமையை ஒருசிறிதும் மேற்கொள்ளாமல் நன்மையையே நாடி அதன் விளைவை அறிந்து நன்மையைக் கைக்கொள்ள வேண்டும். அதுவே பகுத்தறிவு ஆகும் என்று திருவள்ளுவர் கூறுகிறார். இக்கருத்தமைந்த குறளாவது,

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.
_ (குறள் எண்: 422, அதிகாரம்: அறிவுடைமை)

இப்படிப் பகுத்தறிவு கருத்தமைந்த குறளெல்லாம் பெரியாரைக் கவர்ந்திருப்பதனால்தான் பெரியார் திருக்குறளை ஏற்றுக்கொண்டார் எனக் கருதலாம். தவிர நன்மை பயக்கும் என்று கூறும் வள்ளுவர் தீமையைப் பற்றி கூறும்போது,
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

– (குறள் எண்: 202, அதிகாரம்: தீவினையச்சம்)

தீய செயல்கள் தீமையை விளைவிக்கும். எனவே, அவை தீயைவிடக் கொடியவை எனக் கருதி அஞ்சப்படும் நிலை உருவாக்கும் என்ற குறள் கருத்து நன்மை பயக்கும் என்ற குறளுக்கு மேலும் வலிமை சேர்ப்பதாக இருப்பதால் இந்தக் குறளும் பெரியார்க்கு உடன்பாடானதாகவே இருந்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *