– கீதா.இளங்கோவன்
திருமணமாகாத இளம் பெண், அதிகபட்சமாக திருமணமாகி சிறு குழந்தை உள்ள பெண்ணையே கதாநாயகியாக காண்பித்த தமிழ் சினிமா, முதன் முறையாக நடுத்தர வயது பெண்ணை நாயகியாக காண்பித்துள்ளது. படம் `36 வயதினிலே.
ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையில் என்ன வேண்டும்? அன்பான கணவன், புத்திசாலிக் குழந்தை, ஆதரவான மாமனார், மாமியார் என்று ஒரு குடும்பம் கிடைத்தாலே போதும், அவளுக்கு வாழ்க்கையில் எல்லாம் கிடைத்துவிட்டது.
இதுவே அதிகம். இப்படித்தான் ஆணாதிக்க சமுதாயம் காலங்காலமாக அவளை மூளைச்சலவை செய்துவைத்திருக்கிறது. இது போதுமா அவளுக்கு? உண்மையைச் சொன்னால் தனக்கு என்ன வேண்டும் என்று அவளுக்கே தெரியாது. விதிவிலக்காக சிலர் இருக்கலாம். ஆனால், பெரும்பான்மை பெண்களைத் தான் இங்கு பேசுகிறோம்.
இப்படத்தின் நாயகி வசந்திக்கும் அப்படித்தான். வருவாய் அலுவலகத்தில் குமாஸ்தா பணி. மத்திய அரசுப் பணியில் கணவன், பதின்பருவ மகள், சொந்த வீடு, கார், அன்பான மாமனார் மாமியார்! சராசரி பெண்ணின் பார்வையில் குறையில்லா வாழ்க்கை. கணவன் தன் கனவை நோக்கி அயல்நாடு போக, மகளும் அங்கு படிக்க விரும்பி உடன் செல்ல. அங்கு வேலை கிடைத்தால் மட்டுமே வசந்தியால் போக முடியும் என்ற நிலையில், நேர்முகத் தேர்வில் தோல்வி. அவளை விட்டுவிட்டு கணவனும், மகளும் அயர்லாந்து சென்று விடுகின்றனர். தனித்துவிடப்பட்ட ஆதங்கத்தில், கையறு நிலையில் தன்னை, தன் வாழ்க்கையை சுய பரிசோதனை செய்து கொள்கிறாள். உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உழைக்கிறாள்.
தன் திறமைகளை மீட்டெடுக்கிறாள். அக்கம்பக்கத்து பெண்களுடன் சேர்ந்து, மொட்டை மாடியில் வெற்றிகரமாக காய்கறி பயிரிட்டு விற்பனை செய்கிறாள். இயற்கை வேளாண்மைக்கான இயக்கத்தை முன்னெடுத்து சமுதாயத்திற்கு உழைக்கத் துவங்குகிறாள். அதற்காக குடியரசுத் தலைவரின் பாராட்டை பெறுவதுடன் படம் முடிகிறது.
கல்லூரிப் பருவத்தில் ஏராளமான கனவுகளுடன், சகதோழிகளுக்காகவும் போராடிய, துடிப்பு மிக்க வசந்தியை முடக்கிப் போட்டது எது? வேறென்ன கல்யாணமும், குடும்பமும் தான். உன் கணவன், குழந்தை, உறவுகள், குடும்பம் அதை மட்டும் பார் என்று சமுதாயம் தரும் அழுத்தங்களால் அடங்கிப் போகிறார்கள் நம் நாட்டு வசந்திகள். சராசரி வாழ்க்கையானது, சுயநலமான, குடும்பத்தை தாண்டி எதையும் சிந்திக்க முடியாத, ஜீவன்களாக அவர்களை உருமாற்றிவிடுகிறது.
குடும்பம் என்பது சுரண்டலுக்கான அமைப்பு என்று பெரியார் சொன்னது எக்காலத்துக்கும் பொருந்துகிற உண்மை. வசந்தி தங்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று கணவனும், வளர்ந்த மகளும் எதிர்பார்க்கிறார்கள். அவள் உழைப்பையும், நேரத்தையும் தங்கள் சுயநலத்திற்காக சுரண்டும் அவர்களுக்கு அதைப் பற்றிய குற்றவுணர்வு ஏதுமில்லை. மட்டுமல்ல, தமது வெளிநாட்டு கனவை அடைவதற்கு அவள் ஏன் தன்னை தகுதிப்படுத்திக் கொள்ளவில்லை என்று கோபப்படுகிறார்கள். அவளுக்கு எதாவது கனவு இருந்ததா? யாரும் கேட்கவில்லை.. சரி போகட்டும், இவர்களின் வெளிநாட்டு கனவுக்காக தன் திறமைகளை வளர்த்துக் கொள்ள _ -வீட்டுவேலை, அலுவலக பணிக்கு பிறகு _- வசந்திக்கு நேரமும், ஆர்வமும் இருந்ததா? தெரிந்து கொள்ள யாரும் அக்கறைப்படவில்லை. ஆனால், உனக்கு ஒன்றுமே தெரியவில்லை என்று கேலி செய்கிறார்கள். சுடு சொற்களால் அவமானப்படுத்துகிறார்கள். ஒரு கட்டத்தில் அவளை விட்டுவிட்டு வெளிநாடு சென்றுவிடுகிறார்கள்.
இப்பொழுதுதான் வசந்திக்கு உறைக்கிறது. தான் யாருக்காக காலமெல்லாம் உழைத்தோமோ அந்த நெருங்கிய உறவுகளே அவமானமாக நினைக்கிறார்களே என்று அதிர்ச்சி அடைகிறாள். தன் வாழ்க்கையின் பொருள் என்னவென ஆராய்கிறாள். ஒரு வேளை கணவனும், மகளும் விட்டுச் செல்லாமல் இருந்திருந்தால் வசந்தி சிந்தித்திருக்கவே மாட்டாளோ? அவர்கள் என்னதான் அவமானப்படுத்தினாலும் சகித்துக் கொண்டு, சராசரிப் பெண்ணாக வாழ்ந்து முடித்திருப்பாளோ?
தனக்கான அடையாளத்தை தேடிக் கொண்ட பிறகும், சமுதாயமும் குடியரசுத்தலைவரும் பாராட்டிய பிறகும், இறுதிக் காட்சியில் கணவன் அவள் கையை அழுத்தி பாராட்டும் கணம்தான் அவளுக்கு பெரிதாக தெரிகிறது. இதை யதார்த்தம் என்று எடுத்துக் கொள்வதா அல்லது எவ்வளவு சாதித்தாலும் கணவன் அங்கீகரிப்பதுதான் முக்கியம் என்று சமூகப் பொதுப்புத்தி வலியுறுத்துவதாக எடுத்துக் கொள்வதா? தெரியவில்லை!
மஞ்சு வாரியார் நடித்த ஹவ் ஓல்ட் ஆர் யூ? என்ற மலையாளப் படத்தை ஜோதிகா நடிப்பில் தமிழில் 36 வயதினிலேவாக எடுத்திருக்கிறார்கள். இரண்டையும் இயக்கி இருப்பவர் ரோஷன் ஆண்ட்ரூஸ். நடுத்தர வயதுப் பெண்ணின் வாழ்க்கையை சொல்லத் துணிந்ததற்காகவே இயக்குனரைப் பாராட்டலாம்.
மலையாளத்தைவிட தமிழ் படம் என்னை அதிகமாக கவர்ந்தது. ஜோதிகா நடிப்பில் இயல்புத்தன்மை கொஞ்சம் கூடுதல். மலையாளத்தில் கதாநாயகி கல்லூரியில் கம்ப்யூட்டர் லேப் வேண்டுமென்று போராடுவார். தமிழில் மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு கூடாது என்ற ஜோதிகாவின் போராட்டம் நெத்தியடி! அந்தக் காட்சியில் அவர் பேசும் வசனங்களும் கூர்மை.
வசன எழுத்தாளர் விஜிக்கு நன்றி! மலையாளத்தில் நீட்டி முழக்கும் சில செண்டிமென்ட் காட்சிகள் தமிழில் தேவைக்கேற்ப நறுக்கப்பட்டுள்ளது அழகு. முக்கியமாக பாடல்களை குறிப்பிட வேண்டும். வாடி ராசாத்தி… வாடி வாலாட்டி… வறியா.. புலியா… தனியா திரிவோம் என்று பெண்ணை அழைத்து `பொட்ட புள்ள போக உலகம் பாதை போட்டு வைக்கும், முட்டு சந்து பார்த்து அந்த ரோடு போயி நிக்கும்… படங்காட்டும் ஏமாத்தி என்று பொது சமுதாயத்தின் இரட்டை வேடத்தை தோலுரிக்கிறது ராசாத்தி பாடல்.
றகுகள் வீசியே சுதந்திர ஆசையில் போகிறேன் பாடலில் வரும் ஆசைகள் எல்லாம் எனக்கென கொண்டு…
மீசைகள் இல்லா கனவுகள் கண்டு…
என்ற வரி தமிழ் சினிமாவில் இதுவரை எந்தக் கதாநாயகியும் பாடாதது என்றே சொல்ல வேண்டும். இந்த ஆசைகள் எல்லாம் எனக்கே எனக்கானது, என் கனவுகளில் ஆண்மகன் இல்லை, அவன் அல்லாத கனவுகள் எனது என்று ஒரு பெண் பாடுவது அவள் ஆளுமையின் அடுத்த பரிமாணம்! பாடல்களை எழுதிய இளம்கவிஞர் வே.விவேக்குக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.
ஒரு பெண்ணின் கனவு காலாவதியாகும் தேதியை முடிவு செய்வது யார் என்ற கேள்வியை எழுப்பும் படத்தில் கதாநாயகியின் இளவயது கனவு என்னவாக இருந்தது என்றே தெரியவில்லை.
சில காட்சிகளில் தலைகாட்டும் செயற்கைத்தனம், கணவன் மனைவி உறவில் யதார்த்தமின்மை, கேள்வியைச் சொல்ல மாட்டேன் என்ற மகளின் வீம்பு என்று சிற்சில குறைகள்.
இருந்தாலும், 36 வயதுப் பெண்ணின் வாழ்க்கையை, குடும்பம் என்ற அமைப்பு அவளை சுயநலமாக சுரண்டுவதை, உழைப்பை அங்கீகரிக்காமல் அவமதிப்பதை, அவள் எடுக்க வேண்டிய முன்னெடுப்புகளை கோடிட்டு காட்டி, அறிவான கேள்விகளை எழுப்பி பெண்களையும், ஆண்களையும் சிந்திக்க வைத்த இப்படம் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்!
கால மாற்றத்திற்கேற்ப இதுபோன்ற படங்களின் வரவு அதிகமாக வேண்டும்!