– மதிமன்னன்
பிறக்கும்போதே காது கேட்காமல், செவிடாகச் சிலர் பிறக்கிறார்கள். சிலர் பேச இயலாத ஊமையாகப் பிறக்கிறார்கள். காது கேளாதவர்களுக்குப் பேச்சு வராது. ஒலிகளையும் உச்சரிப்புகளையும் கேட்டு அவை மூளையில் பதிவானால்தான் அதே ஒலிகளையும் உச்சரிப்புகளையும் குழந்தையால் திருப்பிக் கூற முடியும். பேச முடியும். கேட்கும் திறனே இல்லையென்றால் பேசவும் இயலாது. செவிட்டு ஊமை என்ற பெயர் கிடைக்கும். (Deaf and Dumb) என்கிறார்கள். இக்குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவியை எந்நேரமும் வைத்துக்கொள்ளச் செய்வதன்மூலம் கேட்கும் ஆற்றல் வரும்! நாளடைவில் பேசும் ஆற்றலும் வரும். முழுவதும் செவித்திறன் இழந்தவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் காதுக்குள் அறுவை செய்து காது கேட்கச் செய்ய முடியும். செவிப்பறை அதிர்ந்து, அவை நரம்புகளின் மூலம் மூளைக்குச் செல்லும் இயற்கை முறைக்கு மாற்றாக, மின் அதிர்வுகளை ஏற்படுத்தி அவை நரம்புகள் மூலம் மூளைக்குச் செல்லும் வகையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. காக்ளியர் இம்ப்ளான்ட் (Cochlear Implant) எனப்படும் முறையை வில்லியம் ஹவுஸ் எனும் அமெரிக்கர் கண்டுபிடித்தார். 1961இல் மூன்று செவிடர்களுக்கு இத்தகைய கருவியைப் பொருத்தி சிறிதளவு முன்னேற்றம் கண்டார். 1969இல் தொடர்ந்த ஆய்வுகளின் மூலம் இதனைச் சரியான இடத்தில் பொருத்துவதில் வெற்றி கண்டார். காதுக்குள் அணிந்துகொள்ளும் கருவியைக் கண்டுபிடித்து வெற்றி கண்டார்.
ஆனாலும் செயற்கைமுறைத் தூண்டல் மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கும் என்கிற கருத்து பரப்பப்பட்டது. மீண்டும் ஆய்வுகள் தொடர்ந்தன. 1984ஆம் ஆண்டில் இக்கருவிகளுக்கான அங்கீகாரம் அமெரிக்க உணவு மற்றும் மருந்துத் துறையால் அளிக்கப்பட்டு வாதப் பிரதிவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தற்போது இருக்கும் இம்ப்ளான்ட் கருவி மேம்படுத்தப்பட்டு 2005இல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
குருடர்கள் பார்ப்பதும், செவிடர்கள் கேட்பதும், ஊமையர் பேசுவதும், முடவர்கள் நடப்பதும் கடவுளால் அல்ல! மனிதர்களால், அறிவியலாளர்களால்!
இந்துமத வேதம் எனப்படும் ரிக் பாடல்களில் ஒரு கதை. விஷ்பிளா எனும் ராணி போரிடும்போது ஒரு காலை இழக்கிறாள். தேவலோக மருத்துவனான அஸ்வின் இரும்புக்கால் ஒன்றைப் பொருத்திவிட்டானாம். அரசி மீண்டும் சண்டை போட்டாளாம்.
கிரேக்கத் தொன்மங்களில் ஹெகசிஸ்ட் ராடஸ் எனும் பாரசீகப் போர்வீரன் ஸ்பார்டன் அரசால் கைது செய்யப்படுகிறான். தப்பித்துப் போகாமல் இருப்பதற்காக அவனது கால் வெட்டப்படுகிறது. இருந்தாலும் அவன் மரக்கால் ஒன்றைச் செய்து அணிந்து கொண்டு 30 மைல்கள் நடந்து டிரெக்யா எனும் நகருக்குப் போய்விடுகிறான். ஜாக்கின்தியசால் அங்கே சிறைபிடிக்கப்பட்டுக் கொலை செய்யப்படுகிறான்.
பழங்கால வரலாற்று ஆசிரியரான பிளினி (Pliny) ஒரு சம்பவத்தை மார்கஸ் செர்ஜியஸ் எனும் ரோமப் பேரரசன் வரலாற்றை எழுதும்போது படைத்தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த அவன் 23 காயங்களைப் பெற்றதனால் அவனது வலது கையை வெட்டி எடுக்க வேண்டி நேரிட்டதையும் இரும்புக்கரம் ஒன்றைச் செய்து பொருத்திக் கொண்டு போருக்குத் திரும்பியதையும் அதன் பின்னர் நான்கு போர்களில் சமர் செய்ததையும் விவரித்திருக்கிறார்.
1858இல் இத்தாலி நாட்டில் உள்ள கபுவா (Capua) எனும் இடத்தில் ஒரு சமாதி கண்டுபிடிக்கப்பட்டது. சாம்னைட் போரின்போது ஈடுபட்டவர்களின் புதைகுழி. அதில் மரம், செம்பு ஆகியவற்றால் செய்யப்பட் செயற்கைக்கால் அதில் கிடைத்தது.
தொழிற்சாலைகளில் பணியின்போது கை, கால்களை இழக்கும் தொழிலாளர்களின் பயன்பாட்டுக்காக மின்சக்தியால் இயங்கும் செயற்கைக் கைகள் 1949இல் வடிவமைக்கப்பட்டது. மூனிச் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படித்துவந்த ரீன்ஹோல்ட் ரீய்டர் என்பார் கண்டுபிடித்தார். அதனை எளிமைப்படுத்தித் தயாரிக்கும் முயற்சியில் இருந்தபோது ஜெர்மனியின் பொருளாதார சீர்கேட்டால் நிதி கிடைக்காமல் ஆய்வு நிறுத்தப்பட்டது. 1958இல் கி.ணி.கோப்ரின்ஸ்கி என்பாரின் தலைமையிலான ரஷியக் குழு 1958இல் செயற்கைக் கரம் ஒன்றை உருவாக்கியது. 1968, 1974 ஆகிய ஆண்டுகளில் மாசசூசட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நார்பர்ட் வெய்னர், மெல்வின் கிளிம்சர், அமர்போஸ், ராபர்ட் மாண் ஆகியோர் மற்றும் சிலருடன் சேர்ந்து உருவாக்கிய செயற்கைக் கரம் சிறப்பாகச் செயல்பட்டது. பாஸ்டன் எல்போ என இதற்குப் பெயரிட்டார்கள். தசைச் சுருக்கத்தால் ஏற்படும் மின்சக்தியை உணர்ந்து செயல்படும் உணர்விகள் (Sensors) பொருத்தப்பட்டு இவை செயல்படுகின்றன.
படைத்தானே, படைத்தானே! மனிதனை ஆண்டவன் படைத்தானே! என்று சாக்குருவி வேதாந்தம்/சித்தாந்தம் பாடிக் கொண்டிருக்கும் திண்ணைத் தூங்கிகளைப் போல் இல்லாமல் மேலை நாட்டவர்கள் பலரும் அறிவியல் மனப்பான்மையுடன் ஆய்வுகளில் ஈடுபடுகின்றனர். மனித குலத்திற்கு நன்மை பயக்கும் புதிய, புதிய கண்டுபிடிப்புகளைச் செய்கின்றனர். கடவுளால் செய்யப்பட்ட கோளாறுகளைச் சரி செய்கின்றனர்.
அந்த வகையில் செயற்கைத் தோலை உருவாக்கியுள்ளனர். மனித உடலில் உள்ள தோல் அற்புதமான பொறியியல் சாதனை. மிகவும் வன்மையானது. விரிந்து கொடுக்கக் கூடியது. நெகிழக்கூடியது. கடும் வெப்பம், மழை, நோய்த்தொற்று போன்றவற்றில் இருந்து காப்பாற்றக்கூடியது. அதற்கு மாற்றுப் பொருள் ஒன்றைச் செய்திட இயலாது. அத்தகைய தனித்தன்மை வாய்ந்தது.
தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொருத்துவதற்குத் தோல் அவசியமாகத் தேவைப்படுகிறது. உடலின் எல்லா இடங்களிலும் தோல் உள்ளது. என்றாலும் பாதி உடம்புக்குமேல் தீப்புண் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்குத் தோலை பிற பகுதிகளிலிருந்து எடுத்துப் பொருத்த இயலாது. என்ன செய்வது? என்று ஆய்வு செய்தனர் ஜான்பர்க் எனும் அறுவை மருத்துவரும், பயன்னாஸ் எனும் வேதியியல் பேராசிரியரும்! விலங்குகளின் தசைகளை எலும்புடன் பிணைக்கும் தசை நாண்களில் மிகுந்திருக்கும் புரோட்டீன்களைப் பற்றிய ஆய்வில் இருந்தவர். இருவரும் இணைந்து மாட்டின் தோலில் உள்ள புரோட்டீனைப் பிரித்தெடுத்து பாலிமர் சவ்வு தயாரித்தனர். இதனை உலரவைத்து விஸ்கோஸ் பிளாஸ்டிக் உடன் இணைத்தனர். இவை இரண்டும் காகிதம் அளவு கனமாக இருந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதனைக் கொண்டு மூடினால், தோலைப் போலவே நோய்த்தொற்று ஏற்படாமல் காக்கின்றன. நீர்ச்சத்து இல்லாமல் வறண்டு போகாமல் பாதுகாக்கின்றன. புதிய தோல் உருவாகிச் செல்கள் வளர உதவுகின்றன. புதிய தோல் செல்கள் வளர்ந்து முழுமை அடைந்ததும் இது சிறிது சிறிதாக உடைந்து வெளியேறுகின்றன. கையினால் உரித்து எடுத்து விடவும் முடிகின்றன. புதிய தோல் முந்தைய இயற்கைத் தோலைப் போலவே இருக்கிறது. வியர்வைச் சுரப்பிகள், மயிர்க்கால்கள் அமைவதில்லை. 50 முதல் 90 விழுக்காடு வரை தீக்காயங்கள் பட்டவர்களுக்கான சிகிச்சையில் செயற்கைத் தோல் மாபெரும் வெற்றியைத் தந்துள்ளது.
தோலை உரித்துவிடுவேன் என்று எவராவது மிரட்டினாலும் இனிமேல் கவலையில்லை. செயற்கையாகப் புதிய தோலை வளர்த்துக் கொள்ளலாம்!
கொடுமை செய்பவனைப் பார்த்து உனக்கு இதயமே இல்லையா? என்று கேட்பார்கள். தமிழ்த் திரைப்படங்களில் இதனை பார்க்கலாம். ஈவு, இரக்கம், அன்பு, கோபம், கொடூரம், துரோகம், வஞ்சம் போன்ற பலவகைக் கெட்ட குணங்களும் மனிதர்களிடம் இருப்பதற்கு இதயம்தான் காரணி என்கிற (மூட) நம்பிக்கை! இதனாலேதான் மேலை நாடுகளில் இதயத்தின் பகுதியில் கை வைத்துக் கொண்டு உறுதிமொழி கூறுகிற மடத்தனம் உள்ளது. குணங்களுக்கும் இதயத்திற்கும் தொடர்பில்லை என்று சிக்மண்ட் ஃபிராய்டு எழுதி எண்பித்த பிறகும்கூட, பழக்கத்தை விடவில்லை என்றால் வேறு எப்படித்தான் அழைப்பது?
நம் ஊரில்கூட ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இப்பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். அதனைப் பார்த்தோ என்னவோ, வணக்கம் சொல்லும்போது கையை இதயத்தின் மேல் வைப்பதுபோலச் சைகை செய்கிற பழக்கம் பரவி வருகிறது. ஆன்மீக வேடம் போடும் போலிகளின் மத்தியில் பரவலாகப் பார்க்கலாம்.