செந்நிற மலைகளும் செதுக்கப்பட்ட நகரமும்!
– மருத்துவர்கள் சோம & சரோஜா இளங்கோவன்
அழகு அழகு மிருகங்களிடமிருந்து பிரியா விடை பெற்று விமானத்தில் ஏறினோம். பேராசிரியர்கள் மிகவும் உணர்ச்சிவசத்துடன் பாடம் எடுத்தனர். ஜோர்டன் நாட்டைப் பற்றியும், அதன் வரலாறு, நெபோட்டியன் மக்கள் பற்றியும் சொன்னார்கள்.
ஜோர்டனின் மிகவும் சிறப்பான இடம். புதிய ஏழு உலக அற்புதங்களில் ஒன்று. சுமித்சோனியன் எனும் ஆராய்ச்சி சிறப்பாளர்கள் உலகில் பார்க்க வேண்டிய 28 இடங்களில் ஒன்று என்று சொல்லியுள்ளனர். எங்களுக்கு அந்த உற்சாக நோய் நேரே சென்று பார்த்ததும் தொற்றிக் கொண்டது.
எங்கு பார்த்தாலும் மிகவும் உயரமான செந்நிறப் பாறை மலைகள். இதில் என்ன இருக்க முடியும் என்ற அய்யப் பாட்டுடனேயே ஏறினோம் ஏறினோம், ஏறிக் கொண்டே இருந்தோம். பாதி தொலைவு ஏறியதும் அங்கே பெரிய திறந்த வெளி. சுற்றிலும் பாறைகளில் குடையப்பட்ட மாட மாளிகைகள். அழகான பெரிய தூண்கள், கலை அழகுடன் செதுக்கப்பட்ட நுழை வாயில்களும், பாறைக்குள்ளேயே அமைக்கப்பட்ட கட்டிடங்களும் 800க்கும் மேற்பட்டவை இருந்தனவாம். தற்போது பல பாழடைந்துவிட்டன. இன்னும் மக்கள் அங்கேயே வாழ்கின்றனர். ஒரு பெரிய மாளிகை நாட்டின் கருவூலமாம். பெரிய வணிகர்கள் கூடுமிடம். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்து பார்க்குமாறு ஒரு நாடக மேடையும், அமரும் இடங்களும். பெரிய குளியல் இடங்கள். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. மிகப் பெரிய பாலைவனம் போலச் சுற்றிலும் ஒன்றுமே இல்லை. இங்கே ஏன் இதைக் கட்டினார்கள்?
2300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட நகரம். மிகவும் பாதுகாப்பானது. கிழக்கேயிருந்து ரோமாபுரி வரை அமைந்திருந்த வணிகப் பாதையின் முக்கிய இடம். தண்ணீர் வசதி இந்தப் பாலைவனத்திலே மிகவும் முக்கியம். இங்குள்ள ஊற்றை அனைத்துக் கட்டிடங்களுக்கும் செல்லுமாறு பாறைகளின் ஓரத்திலேயே வாய்க்கால்கள் செதுக்கப்பட்டுள்ளன. மிகவும் முக்கியமான வணிகத்தளமாக நெபோட்டியன் மக்களுக்கு இருந்துள்ளது. அவர்கள் இசுலாமிய மதத்திற்கு முன்னரே இருந்தவர்கள். அவருடைய மூதாதையர்களையும், மன்னர்களையும் தொழுது வந்துள்ளனர். அங்கேயே அவர்களை அடக்கம் செய்துள்ள பல கட்டிடங்கள் உள்ளன. அதில் வைத்திருந்த பல பொருள்கள் திருடப்பட்டு விட்டன.
பின்னர் கிருத்துவம் இங்கே வந்துள்ளது. மோசஸ் இதன் வழியே சென்றாராம். மோசசின் தம்பி ஆரான் இங்கே புதைக்கப்பட்டுள்ளதாக ஒரு இடத்தைப் பாதுகாத்து வருகின்றனர். பாதி வழியில் அங்கே கடைகளும் உணவகங்களும் உள்ள பெரிய இடம் இருந்தது. அங்கே மரத்தடியிலும், போடப்பட்டிருந்த வண்ணப் பந்தலிலும் அமர்ந்து உணவுண்டோம். பல பழைய ரோமன் நாணயங்கள் என்று சொல்லி விற்றனர். ஆனால் நம்ப முடியுமா என்று தெரியவில்லை.
பாதி வழிக்கும் மேலே ஏறுவதற்குப் பழைய கருங்கல் படிக்கட்டுகள், இருநூற்றுக்கும் மேலே. அதற்காகவே பழக்கப் படுத்தப்பட்ட குதிரைகள் அங்கே இருந்ததால் நாங்கள் தப்பித்தோம். பலர் உடல் வலிமையுடன் ஏறினார்கள். நாங்கள் எளிதாக, ஆனால் அச்சத்துடன்தான் குதிரை மேலே ஏறிச் சென்றோம். அவை படிக்கட்டுகளில் மிகவும் எளிதாக (நம்மைத் திட்டிக் கொண்டே) ஏறின. வழியில் கைகளால் செய்யப்பட்ட பல நகைகளும், ஆம்பர் என்ற விலை உயர்ந்த சாம்பிராணியும் விற்றனர். அந்த ஆம்பர் பெரிய வணிகப் பொருளாக இருந்திருக்கின்றது.
ஆனால் அதையுந்தாண்டி அதற்கு மேலே நூறு படிகள் நாம் தான் ஏறவேண்டும். மலை உச்சியை அடைந்து அந்த அழகிய பள்ளத்தாக்கைப் பார்த்து மகிழ்ந்தோம். அங்கிருந்து இசுரேலைப் பார்த்தோம், அங்கே அழகான மாட மாளிகைகள் அவர்கள் பக்கம், ஜோர்டான் பக்கம் வெறும் பாலைவனம். பணம் பத்தும் செய்துள்ளது. அதிலும் அமெரிக்காவிலிருந்தும், உலகெங்குமிருந்தும் குவியும் பணம் இசுரேலுக்கு!
கீழே படிகளில் இறங்கக் குதிரையும், பின்னர் அதற்குங் கீழே செல்ல ஒட்டகமும் ஏற்பாடு செய்து எங்களைத் தப்பிக்க வைத்தார்கள்.
400 ஆண்டுகள் நன்றாக இருந்த நெபோட்டியர்கள் பின்னர் ரோமானியப் பேரரசிடம் தோற்றனர். பின்னர் சிதைவுற்ற இந்த இடத்தை 1812இல்தான் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பர்க்கார்ட் கண்டுபிடித்துள்ளார். சோகான் பர்கினோ என்ற கவிஞர் நாகரிகத்தின் பாதி வயதடைந்த செந்நிற ரோசா நகரம் என்றழைக்கின்றார்.
அன்றிரவு மிகவும் சிறப்பான ஜோர்டானிய மன்னருக்குப் பிடித்த இடத்திற்கு விருந்திற்குச் சென்றோம். முதலில் மன்னர்தான் வருகின்றாரோ என்று வியக்கும் வண்ணம் அந்தப் போர்வீரர்களின் இசை நிறைந்த வரவேற்பு. அங்கே பெரிய அடுப்பிலே முழு உடலுடன் சமைக்கப்பட்ட ஆடு பெரிய பாத்திரத்திலே இருந்தது. அதை சிறு சிறு துண்டுகளாக கலை அழகுடன் நறுக்கிப் பரிமாறினார்கள். மற்றவர்கள் உணவும் பிரியாணி போல நன்றாக இருந்தது.
அடுத்த நாள் வாடிரம் என்ற செம்மண் பாலைவனத்தில் பாலைவன ஜீப்புகளில் பயணம். இங்குதான் மிகவும் புகழ் பெற்ற லாரன்சு ஆஃப் அரேபியா படம் எடுக்கப்பட்டது. அங்குள்ள செந்நிறப் பாறைகள் சூழ்ந்திட பெரிய வெட்ட வெளி. ஒட்டகங்கள் ஆங்காங்கே மேய்ந்து கொண்டிருந்தன. மதிய உணவு பெரிய பெய்டூன் கூடாரத்தில். அங்கே அமைதியாகத் தங்கி இரவில் நட்சத்திரங்களைப் பார்த்து மகிழவே பல பயணிகள் வருகின்றார்களாம்.
மிகவும் அன்புடன் பழகினார்கள். பலர் நன்கு படித்து உள்ளனர். ஜோர்டான் பள்ளத்தாக்கு அருகே உள்ளது. அங்குதான் விளை பொருள்கள். வடக்கே அம்மான் தலைநகரம். இன்னும் பலர் பழைய மாதிரியே வாழ்ந்து வருகின்றனர்.
மோவென்பிக் விடுதி மிகவும் மத்திய கிழக்கு நாட்டு வேலைப்பாட்டுடன், மேற்கத்திய வசதிகளுடன் கூடிய பாலைவனத்தில் சோலைவனமாக இருந்தது. அசதி போன இடம் தெரியவில்லை.
அடுத்தநாள் பயணத்தின் கடைசி இடம்! பார்ப்போமா?