கணவன் இறந்தபின் வளையல் மட்டுமே உடைக்கப்பட்டது
– மஞ்சை வசந்தன்
இதுவரை கண்ணதாசன் அவர்கள் தமிழுக்கு தாலியில்லையென்று விளக்கி உறுதி செய்தவற்றைப் பார்த்தோம். இனி தாலி சார்ந்த சில கருத்துகளை ஆய்ந்து இதனை நிறைவு செய்வோம். கணவன் இறந்த பின் பெண் (மனைவி) கைவளையல் உடைப்பதே வழக்கிலிருந்தது. வெளிமான் என்ற வள்ளல் இறந்த பின் அவன் உரிமை மகளிர் தொடிகழிக்கப்பட்டார்
தொடிகழிமகளிர் (புறம்_238) என்பது ஈண்டு ஒப்பிட்டு நோக்கத்தக்கது.
ஆக, கணவன் இறந்த பின் வளையல் உடைத்தல் மட்டுமே வழக்கிலிருந்தது என்பதால், தாலி அணியும் வழக்கம் இல்லையென்பது உறுதியாகிறது. தாலியிருந்தால் தாலியல்லவா முதன்மையாக அகற்றப்பட்டிருக்கும்? என்ற அறிவார்ந்த கேள்வியைக் கேட்டு கண்ணகிக் காலத்திலும் தாலியில்லை. பார்ப்பனர் நடத்தி தீவலம் வந்தநிலையில்கூட தாலி இல்லை. தாலி மிகப் பின்னாளில் வந்த வழக்கம் என்பதைத் தெளிவுபடுத்துகிறார் மா.இராசமாணிக்கனார் அவர்கள்.
ஊகங்களின் அடிப்படையில் உண்டென்பதா?
சங்கத் தமிழர் திருமணங்களில் தாலியுண்டு என்பதைக் காட்டமுடியாத மதவாதிகள், ஊகங்களின் அடிப்படையில் இது தாலியைத்தான் குறிக்கிறது என்று வாதிட வருகின்றனர். ஆனால், அதையும் தமிழ்ச் சான்றோர் தக்க விளக்கங்கள் மூலம் தகர்த்தெறிந்துள்ளனர்.
ஈகையரிய இழையணி என்பது என்ன?
புறநானூறு 127_ஆம் பாடலில், ஆய் வள்ளல்தான் கொடுக்கத் தகுந்த எல்லாப் பொருளையும் பரிசிலர்க்குக் கொடுத்துப் பின் கொடுத்தற்குரிய பொருள் ஏதுமின்றி வறியவனானான். அந்நிலையில் அவன் மனைவியரிடம் ஈகையரிய இழை அணிமட்டும் எஞ்சி நிற்கிறது.
இப்பாடலுக்கு உரை எழுதிய உரையாசியர், கொடுத்தற்கரிய மாங்கலிய சூத்திரம் என்று பொருள் கூறுகிறார். ஆனால், இதே உரையாசியர், புறநானூறு 224ஆம் பாடலான,
இறந்தோன் தானே அளித்திவ் வுலகம்
மெல்லியல் மகளிரும் இழை களைந்தனரே என்ற பாடலுக்கு இழை என்பதற்கு அருங்கல அணி என்று பொருள் கூறுகிறார்.
மாங்கலியத் தத்துவப்படி மாங்கல்யம் என்பது அணிகளில் வராது. அது திருமணத்தின் பந்தமாகக் கொள்ளப்படுகிறது. அதை கொடையாகக் கொடுப்பது என்ற நிலைக்கோ, அணிதல் என்ற வகைக்கோ கொண்டு வருதல்தகுவதன்று. எனவே, ஈகைக்கரிய இழை என்பது, கொடுக்க இயலாத அணி என்பதே பொருள். அதாவது இருக்கும் அணிகளுள் பலவற்றை ஈகையாகத் தரலாம், ஈகையாகத் தரஇயலாத முதன்மையுடைய, தங்களுடனே வைத்துக்கொள்ளக்கூடிய அணிகளைத் தர இயலாது என்பதே இதன் பொருள். மாறாக, ஈயமுடியாத அணி தாலியைக் குறிக்கும் என்பது சரியன்று. காரணம், மாங்கலியம் அணி அல்ல. அணியென்பது அணியப்படுவது. மாங்கலியம் அணியப்படுவது அல்ல.
அணி யென்பது வேண்டும்போது அணியப்படுவது; தேவையில்லாதபோது கழற்றி வைக்கப்படுவது. ஆனால், மாங்கலியம் கட்டப்படுவது. அது கணவன் உயிருள்ளவரை மனைவி கழுத்தில் இருக்க வேண்டியது. இந்த வேறுபாடு உணரப்பட்டால் இதுபோன்ற பொருள் கொள்ளவோ, ஊகங்களோ வராது.
தமிழ் இலக்கியங்களில் வருவதாயினும், தமிழர் கட்டியதாயினும் அது அணி வகையே! ஆனால், மந்திரம் சொல்லி அணியப்படுவது மாங்கலியம் ஆகும். அதைத் தாலியென்பதே தவறு. தாலியென்பது தமிழ்ச் சொல். தாலி என்றால் தொங்கல் என்றே பொருள். தொங்கும் அணிகலனே தாலி. ஆனால், மாங்கலியம் அணியல்ல. நான் முன்னர் கூறியதுபோல, மந்திர மகத்துவம் ஏற்றப்பட்டு திருமணத்தின்போது கட்டப்பட்டு, கணவன் ஆயுளுக்கும் கழுத்தில் இருப்பது. எனவே, மாங்கலியத்தைத் தாலியென்பதே சரியல்ல. சுருங்கச் சொன்னால் தாலி யென்பது அணிகலன். மாங்கலியம் என்பது புனிதம்.
மந்திரம் ஓதி தாயத்து கட்டுகிறான் என்றால் அது அணிகலனா? இல்லையே! அப்படித்தான் மாங்கலியமும். ஆக, தாயத்தும் மாங்கலியமும் அறியாமையின் அடையாளம் என்பதே உண்மை! மாங்கலியத்திற்கு தமிழில் சொல் இல்லை. காரணம் மாங்கலியம் தமிழர் மரபன்று. அது புரோகிதம் புகுந்த பின் மிகப் பிற்காலத்தில் வந்தது.
ஆக, தமிழில் தாலிஎன்று சொல்லப்படுவது அணிகலனே தவிர அது மாங்கலியம் அல்ல. இலக்கியங்களில் சுட்டப்படும் தாலிகள் அனைத்துமே அணி மட்டுமே. எனவேதான் அது சிறு பிள்ளை பருவம் முதற்கொண்டு, ஆண் பெண் வேறுபாடு இன்றி அணியப்பட்டது.
தாலி எத்தனை தாலியடி!
(அ) ஐம்படைத்தாலி: இது குழந்தைகளுக்கு அணியப்பட்ட அணிகலன். ஆண் குழந்தை பெண் குழந்தை இருபாலருக்கும் அது அணிவிக்கப்பட்டதால், இது திருமண அடையாளமான மாங்கல்யம் அல்ல.
(ஆ) புலிப்பல் தாலி: இதுவும் சிறுவர்களுக்கு அணிவிக்கப்பட்டது. வீரர் தான் கொன்ற புலியின் பல்லைக் கோர்த்து தன் பிள்ளைகளுக்கு அணிவித்தது.
புலிப்பல் தாலி புன்றலைச் சிறார் (புறம்_374)
இப்புலிப்பல் தாலி ஆண் குழந்தைகளுக்கேயன்றி பெண் குழந்தைகளுக்கும் அணிவிக்கப்பட்டது.
-…–..–……………………………………….. பொன்னோடு
புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி ………………..
கற்கெழு சிறுகுடிக் கானவன் மகளே
(அகம்_7)
(இ) குதிரைத்தாலி: மனிதர்களேயன்றி குதிரைக்கும் தாலி அணிவிக்கப்பட்டதை கீழ்க்கண்ட வரிகள் குறிக்கின்றன.
கலினங் கவவிக் கான்றுநுரை தெவிட்டும்
வலியுடை யுரத்தின் வான்பொற் றாலி
(கோயில் வேவு வரி 12_13)
உதயணன் ஏறிய குதிரை தாலி என்னும் ஒரு நகையை அணிந்திருந்தமையை இவ்வரிகள் சுட்டுகின்றன.
(ஈ) கண்ணன் இளம்வயதில் தாலியணிந்தமை கீழ்க்கண்ட வரிகள் மூலம் அறயிப்படுகிறது.
கி.பி.எட்டாம் நூற்றாண்டினரான பெரியாழ்வார் பாடிய திருவாய் மொழியில் ஆமைவடிவத் தாலியை பிள்ளைப் பருவத் திருமால் அணிந்திருந்ததாகக் கூறுகிறது.
அக்கு வடமுடுத்து ஆமைத்தாலி பூண்ட அனந்தசயன்
தக்க மாமணி வண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ
திருவாய்மொழி (1.7.2)
கண்ணன் பிள்ளைப் பருவத்தில் தாலிக் கொழுந்து என்ற கழுத்தணியை அணிந்திருந்தமையை கீழ்க்கண்ட பெரியாழ்வார் செய்யுள் வரி செப்புகிறது.
தாலிக் கொழுந்தைத் தடங்கழுத்தில் பூண்டு (2.6.1)
இந்த இரண்டு தாலியும் பனங் குருத்தில் செய்யப்பட்ட தாலிகள் என்று பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி கூறுவதாய் மா.இராசமாணிக்கனார் கூறுகிறார்.
ஆக இவையெல்லாம் புனிதத்தாலிகள் அல்ல. இவை வழக்கமான அணிகலன்களுள் ஒன்று. தமிழர்கள் அணிந்தவை எல்லாம் இப்படிப்பட்ட தாலிகள்தான். திருமணத்தில் தாலி தமிழர்கள் அணிந்ததில்லை.
மேலும் ஆரியர் வழக்கினும் தாலி இல்லை. ஆரியர்களின் எண்வகைத் திருமணங்களிலும் தாலி சுட்டப்படவில்லை.
யார் யாரோ தாலிகட்டுவாரோ!
தாலி கட்டப்படும் முறையைக் கூர்ந்து நோக்கின் இது ஒரு புனிதம் அல்ல என்பதும், மந்திரத்தால் மகிமை ஏற்றுவதெல்லாம் பின்னாளில் வந்த செயல் என்பதும் துலங்கும். உண்மையிலே மந்திரத் தத்துவப்படி, தாலித் தத்துவப்படி மணமகன் மட்டுமே கட்ட வேண்டும். ஆனால், நடப்பில் அது இல்லை.
பெரும்பாலான குடும்பங்களில், அவர்கள் வழக்கத்தைப் பொறுத்து, நாத்தி (மணமகளின் உடன்பிறந்தவள்) மணப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுகிறாள். நாத்தி இல்லையென்றால், மணமகன் குடும்பத்தைச் சேர்ந்த வேறு ஒரு பெண் கட்டுவாள்.
சில குடும்பத்தில் தாய்மாமன் மணமகளுக்குத் தாலி கட்டுகிறான்.
சில மரபில் தாய்மாமன் மனைவி தாலி கட்டுகிறார்.
சில குடும்பத்தில் கணவனுக்குப் பதில் அவன் குடும்பத்தைச் சேர்ந்த வேறு ஆண் கட்டுகிறான்.
சிலர் மரபுப்படி மணமகளின் தந்தையே தாலி கட்டுவது வழக்கில் உள்ளது.
சிலர் மரபில் குடும்பத் தலைவன், அல்லது அக்குலத் தலைவன் தாலி கட்டுகிறான்.
சிலர் திருமணங்களில் புரோகிதரே தாலி கட்டுவதுண்டு. (இது எப்படி!)
ஆதாரம்: (தமிழர் திருமணத்தில் தாலி. மா.இராசமாணிக்கனார்)
சட்டப்படி தாலி தேவையில்லை:
திருமணச் சட்டமே தாலி தேவையில்லை என்பதை அறிவித்தபின், தாலியை பிடித்துக்கொண்டு தொங்க நினைப்பதும், காலித்தனம் செய்வதும் கண்டிக்கத் தக்கது மட்டுமல்ல, தண்டிக்கத் தக்கதுமாகும்.
சட்டமும், நீதிமன்றத் தீர்ப்பும் என்ன சொல்கின்றன?
சுயமரியாதை அல்லது சீர்திருத்தத் திருமணங்களைச் செல்லுபடியாக்க வேண்டியது அவசியமாகிறது. இதற்காக இந்தச் சட்டம், 1958 இந்து திருமணச் சட்டம் 7 செக்ஷனுக்கு ஒரு புதிய செக்ஷன் 7ஏ சேர்க்கப்படுகிறது.
உறவினர்கள், நண்பர்கள் அல்லது வேறு நபர்களின் முன்னிலையில் நடத்தப்பெற்ற சுயமரியாதைத் திருமணம் அல்லது வேறு எந்தப் பெயரில் குறிப்பிட்ட திருமணமாயினும் அதற்கு இந்த செக்ஷன் உரியதாகும்.
இந்தத் திருமணம் நடத்தப்பட வேண்டிய முறைகள் அல்லது நடத்தப்பட்டிருக்க வேண்டிய முறைகள்:
(அ) திருமணத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தரப்பினரும் அவர்களுக்குப் புரியும் மொழியில் அவரை என் மனைவியாக என்று ஆணும் அல்லது அவரை என் கணவராக என்று பெண்ணும் அறிவிப்பதன் மூலம்
(ஆ) திருமணத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தரப்பினரும் மற்றவருக்கு மாலையணிவிக்க வேண்டும் அல்லது எந்த விரலிலாவது மோதிரம் அணிவிப்பது அல்லது
(இ) தாலி கட்டுவதன்மூலம்
இத்திருமணம் நடத்தப்பட வேண்டும்.
தாலி கட்டவேண்டிய கட்டாயம் இல்லை!
உறுதிமொழி படித்துத் திருமணம் அல்லது மாலை அல்லது மோதிரம் அல்லது தாலி அணிவித்துத் திருமணம் செல்லும் என்பதால் தாலி கட்டாயம் கட்ட வேண்டியது இல்லை என்று சட்டமும் அதை ஒட்டியே தீர்ப்பு கூறியுள்ளன.
மாநில அரசுக்கு உரிமையுண்டு!
எப்படித் திருமணம் செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு என்று நீதிமன்றத்தில் வாதிடப்பட்டபோது நீதிமன்றம் அதை ஏற்கவில்லை.
திருமணம் இந்திய அரசியல் சட்டப் பொதுப்பட்டியலில் உள்ள ஒரு விஷயம் என்பதால், மாநில அரசுக்கும் இதில் சட்டம் இயற்ற உரிமையுண்டு. அதன்படி தமிழ்நாட்டில் மாநில அரசு நிறைவேற்றிய சுயமரியாதைத் திருமணச் சட்டம் செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
எனவே, தாலி என்பது புனிதம் அல்ல. தாலி கணவனோடு கட்டிப்போட்டு அடிமையாக்கும் கருவியல்ல. கணவன் இருக்கும்வரை மனைவி கழுத்தில் சுமக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கணவன் மனைவி விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் அகற்றிக் கொள்ளலாம். உண்மை இப்படியிருக்க விருப்பப்பட்டு தாலி அகற்றிக் கொள்வதை எதிர்த்து காலித்தனம் செய்பவர்களைக் குண்டர் சட்டத்தில் தண்டிக்க வேண்டும்! என்று கூறி இந்த ஆய்வை நிறைவு செய்கிறோம்.