திராவிடற்குரியதை ஆரியமயமாக்கலின் அடுத்த முயற்சியே யோகா!

ஜூலை 01-15

யோகா  என்ற வடமொழி பெயர் கொண்ட இந்த மூச்சுப் பயிற்சி – தியானக்கலை – உடற்பயிற்சிக் கலை என்பது, கி.மு. 400ஆம் ஆண்டில் பதஞ்சலி முனிவர் என்பவரால் உருவாக்கப்பட்டது என்பதும், யோக சுலோகன்களில் 196 என்பதும், சூர்ய நமஸ்கார் என்றும் இன்று சொல்லிக் கொடுக்கப்படும் இதன் துவக்க வரலாறு, திராவிடர் நாகரீகம் பரவிய ஆதிகால சிந்துவெளி நாகரீகத்திலிருந்து துவங்கியது என்பதை மேலைநாட்டு ஆராய்ச்சியாளர்கள் பலர் தங்கள் ஆய்வு நூல்கள் பலவற்றில் எழுதியுள்ளனர்.

ஆனால், அவற்றிக்குப் போதிய விளம்பரம் இல்லை, காரணம் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பினால் ஏற்பட்ட இந்த அபகரிப்பு அகிலத்திற்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதாலேயாகும்.

இண்டிக் மதங்கள் (Indic Religious) என்ற பார்ப்பன மதம் (Brahmins) சமணம், பவுத்தம் ஆகியவைகளுக்கு ஒரு ஒட்டுமொத்தப் பெயர் கொடுத்துள்ளனர். சில மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள்.

“The Origins of Yoga and Tantra
– Indic Religions of the Thirteenth Century”

யோகா மற்றும் தாந்திரீகத்தின் மூலம்  நம் நூற்றாண்டின் இண்டிக் மதங்கள் என்ற தலைப்பில் இங்கிலாந்து நாட்டின் கார்டிஃப் (cardiff) பல்கலைக் கழகத்தில் ஆய்வுசெய்து, அந்த பேராசிரியரால் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் 2002இல் ஆற்றிய உரையின் தொகுப்பே இந்நூல், இதை கேம்பிரிஜ் பல்கலைக் கழகம் 2008இல் வெளியிட்டுள்ளது.  நான் இதை 2009இல் வாங்கி முன்பே இதுபற்றி கட்டுரை வெளியிட்டுள்ளேன். சிந்துவெளி நாகரீகம் பாகிஸ்தானில் உள்ள மொகஞ்சாதாரா, ஹரப்பா (இவை வடமேற்கு பகுதியில் உள்ள தொல்லியல் துறையில் புதையுண்டு கண்டறிந்த நாகரிகங்களாகும். 1930களிலேயே சர்.ஜான் மார்ஷல் என்ற தொல்லியில் துறை ஆய்வாளர், இதுபற்றி எழுதியுள்ளார். அக்கால திராவிடர் நாகரீகத்தில் திராவிடர்கள் மூச்சுப்பயிற்சி – உடற்பயிற்சிகளை பல்லாயிரம் ஆண்டுகால முன்பே செய்து கொண்டிருந்தார்கள். என்பதற்கான ஆதாரம் உள்ளன என்று மேற்காட்டிய  பல்வேறு ஆராய்ச்சி அறிஞர்களின் கருத்துகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.

எத்தனையோ நம்முடைய மொழியிலிருந்து வடமொழி பல சொற்களைக் கடன்பெற்று பிறகு அவர்களது மொழிபோல சித்தரித்துக் கொண்டார். புரட்சிக்கவிஞரின் வந்தவர் மொழியா செந்தமிழ் செல்வமா எனும் நூலில் தமிழ்ச் சொற்களையே வடமொழி சொற்களாக கொண்டமை ஆதாரபூர்வமாக விளக்கப்படுகிறது. கருநாடக இசையின் ஆதி மும்மூர்த்திகள் – முன்னோடிகள் தமிழர்களே.

1.    முத்துத்தாண்டவர் (1525- 1625)
2.    மாரிமுத்தாப்பிள்ளை (1717-1787)
3.    அருணாசலக்கவிராயர் (1712-1779)

இவர்களை மறைத்துவிட்டு மும்மூர்த்திகள்

1.    தியாகய்யர் (1767-1848)
2.    ஷியாமாசாஸ்திரிகள் (1762-1827)
3.    முத்துசாமி தீட்சதர் (1776-1835)

என்பது இன்னமும் இவர்களையே முன்னிருத்துகின்றனர்.

நம் அமைப்புகளில்தான் உண்மை விளக்கம் தரப்பட்டது. இப்படி மீட்டுருவாக்கம் பலப்பல தேவை.

இதுபற்றி கருநாடக மாநிலம் நிடுமாமுடி மடத்தின் மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல சுவாமிகள், யோகக்கலை திராவிடர் கலாச்சாரம் கொடுத்த கொடையாகும். அதை ஆரியர்கள் சூழ்ச்சி செய்து தனதாக்கிக் கொண்டார்கள் என்று கூறியதும் வரவேற்கத்தக்கது.

கி.வீரமணி
ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *