நாட்டையே பாதுகாக்கும் செயல்களை நிறைவேற்றும் நாடாளுமன்றத்தில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்யும் பெண் ஒருவர் அவரது மேலதிகாரியால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியுள்ளார்.
நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களின் துப்புரவுப் பணியை ஒப்பந்த அடிப்படையில் பி.வி.ஜி. லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் செய்துவருகிறது. நாடாளுமன்ற இணைப்புக் கட்டிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான பெண் 2013ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார். 2014ஆம் ஆண்டு புதிய மேற்பார்வையாளராகப் பொறுப்பேற்ற நபரால் பாலியல் துன்புறுத்தலை அனுபவித்துள்ளார்.
கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும்போது, மேற்பார்வையாளர் பின்தொடர்ந்து வந்து அநாகரிகமாகப் பேசுவார் என்றும், எதிர்ப்புத் தெரிவித்தால் மிரட்டுவார் என்றும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், கழிப்பறைகள் சுத்தம் செய்வதற்கான இரசாயணப் பொருள்கள் காலியாகிவிடவே, புதிதாகத் தருமாறு அவரது அறைக்குச் சென்று கேட்டுள்ளார். உடனே, பதிலுக்கு நீ என்ன தருவாய்? என மேற்பார்வையாளர் கேட்டதும், கழிப்பறையைச் சுத்தம் செய்யும் என் கடமையை ஒழுங்காகச் செய்வேன் என்று கூறியுள்ளார் அந்தப் பெண். அதுதவிர நீ கொடுப்பதற்கு நிறைய இருக்கிறது என்றதும் மேற்பார்வையாளரை வன்மையாகக் கண்டித்து எச்சரித்ததும், பணிநீக்கம் செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து, டெல்லி கனோட் பிளேசில் இருக்கும் பி.வி.ஜி. தலைமை அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்ததையடுத்து, அந்தப் பெண்ணுக்கு மக்களவையில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. 2015 ஏப்ரலில், பி.வி.ஜி நிறுவனம் மீண்டும் நாடாளுமன்ற வளாக இணைப்புக் கட்டிடத்தில் பணி வழங்கியிருப்பதாக கூறியதும், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மேற்பார்வையாளரை மன்னிப்புக் கேட்கும்படிக் கூறியுள்ளது.
இன்றுவரை அந்த மேற்பார்வையாளர் மன்னிப்புக் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நான் என் உரிமைகளுக்காகப் போராட விரும்புகிறேன். என் குழந்தையைப் பராமரிக்க நான் மட்டுமே இருக்கிறேன். இந்நிலையில் என் பணிக்குப் பாதுகாப்பு இல்லாமல் போனால் அது இன்னமும் சிக்கலாகும் என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்குரைஞர், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களைப் பரிசீலிக்கும் குழு நாடாளுமன்றத்தில் வெறும் காகிதங்களில் மட்டுமே இருக்கிறது. ஆனால், உண்மையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு பெண் தன் வேலையைக் காப்பாற்றிக் கொள்ளக்கூட வழியில்லாமல் இருக்கிறது என வருத்தத்துடன் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணே தனது குறைகளுக்குத் தீர்வு காண எவ்வித உதவியும் பெற முடியவில்லை என்பது கவனிக்க வேண்டிய பிரச்சினை என மே 3 அன்று தி.மு.க. எம்.பி. கனிமொழி குரல் எழுப்பினார்.
இப்பிரச்சினையில் சிறப்புக் கவனம் செலுத்திய ராஜ்யசபா துணைத் தலைவர் பி.ஜே.குரியன், இப்பிரச்சினை தொடர்பாக சிறப்புக் கவன ஈர்ப்பு நோட்டீஸ் சமர்ப்பிக்க அனுமதி வழங்கினார்.
பின்னர் மக்களவையிலும் எதிரொலித்தது.
இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, நாடாளுமன்றத்தில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறிய புகார் தொடர்பாக லோக்சபா செயலர் தகவல் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.