தாலி பல்கோணப் பகுத்தாய்வு (2)

ஜுன் 01-15

தாலி பல்கோணப் பகுத்தாய்வு (2)

தமிழர்க்குத் தாலியில்லை!

ம.பொ.சி.க்கு கண்ணதாசன் மறுப்பு

– மஞ்சை வசந்தன்

சாலியொருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழிக் காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார்…..

என இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். பார்ப்பான் மறைவழி காட்டியது, தீவலம் செய்தது, அருந்ததி பார்த்தது எல்லாம் குறிப்பிடுகிறார். தாலிகட்டியது அல்லது அரும்பத உரையாசிரியர் கருத்துப்படியும் அதைத்தழுவிய சிவஞானம் கருத்துப்படியும் மாங்கல்ய சூத்திரம் கட்டியது இதிலே இல்லை. இதிலிருந்து மங்கல அணி மாங்கல்ய சூத்திரம் ஆக முடியாது என்பது புலனாகும்.

அதுவுமன்றி, எல்லாச் சடங்குகளையும் புகுத்திய பார்ப்பனர், அந்நாளில் தாலி கட்டும் பழக்கத்தைப் புகுத்தவில்லை என்பதும் அறியக் கிடக்கும். அதற்குப் பின்னரே, அடிமைத்தனத்தை உறுதிப்படுத்துவான் வேண்டிப் புகுத்தியிருக்கலாம். ஆய்விலே காணும் முடிபு, இளங்கோ அடிகளும் அவருக்கு முந்திய சங்க இலக்கியகர்த்தர்களும் தாலிகட்டும் முறை இருந்ததாகவே குறிப்பிடவில்லை என்பதுதான்.

இந்த அரும்பத உரையாசிரியன் உரை, பொருந்தா உரை என, தமிழ்ப்புலவர் கு.மதுரை முதலியார் அவர்களால் ஒருமுறை எடுத்துக்காட்டப் பெற்றிருக்கிறது. மேலும் மங்கல அணி என்பது இயற்கை அழகு என்ற பொருளிலேயே சிலப்பதிகாரத்தின் மற்றோர் பகுதியில் கையாளப்படுகிறது. மனையறம் படுத்த காதையில் அறுபத்தி மூன்றாவது வரியில் மங்கல அணி பற்றிக் குறிப்பிடுகிறார், சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள்.

நறுமலர்க் கோதை நின் நலம் பாராட்டுநர் மறுவின் மங்கல அணியே யன்றியும்
பிறிதணி அணியப்பெற்றதை யெவன் கொல்

என்கிறார். இதன் பொருள்:

நறுமலரணிந்த கோதையே! நின்னைப் புனைந்து அழகு செய்யும் மகளிர், குற்றமற்ற உனது இயற்கை அழகு இருக்கும்போது வேறு நகைகளையும் அணிந்ததனால் பெற்றது யாது கொல்?

_ ஆமாம்; இயற்கையழகாகிய மங்கல அணி இருக்கும்போது வேறு அணிகள் எதற்கு என்று கேட்கிறார் இளங்கோ அடிகள். இதே உரையைத்தான் பெரும்புலவர், நாவலர் ந.மு.வெங்கடசாமி நாட்டார் அவர்களும் கூறிப்போந்தார். சிவஞானம் பாராட்டுகிற கம்பன்கூட ஒரு இடத்தில்,

உமிழ் சுடர்க்கலன்கள் நங்கையுருவினை
மறைப்பதோரார்

என்கிறான். இயற்கையான மங்கல அணியை நகைகள் மறைக்கின்றன என்கிறான், கம்பன். ஆகவே அணிகள் யாவினும் பெரிது, மங்கல அணி _ அதாவது இயற்கை அழகு என்னும் பொருளையே இளங்கோவடிகள் வலியுறுத்தியுள்ளார் என்பது யாவர்க்கும் புலனாகும்.

_ மங்கல அணி, தாலிதான் என்பதற்கு சிலப்பதிகாரத்தில் துளிக்கூட இடமில்லை. முழுதும் ஆராயாத தோழர் சிவஞானத்தின் குறைபட்ட ஆராய்ச்சி தாலிதான் மங்கல அணி என்று கூறுகிறது. மங்கல அணியை இயற்கை யழகு என்ற பொருளில் மங்கல வாழ்த்துப் பகுதியிலும், மனையறம் படுத்த காதையிலும், முறையே அகலுண் மங்கல அணி எழுந்தது என்றும், மறுவின் மங்கல அணியே என்றும் கூறியிருப்பதைப் பார்த்துவிட்டு, அந்திமாலை சிறப்புச் செய்காதைக்கு வருவோமானால் இங்கேயும் அதே பொருளைக் காண முடியும்!

சிவஞானம் இப்படிக் கூறுகிறார்:

மற்றும், அந்திமாலை சிறப்புச் செய்காதையில், கோவலனைப் பிரிந்த வருத்தத்தால் வாடியிருக்கும் கண்ணகியின் தோற்றத்தைக் கூறுமிடத்து,

அஞ்செஞ்சீரடி அணிசிலம் பொழிய
கொங்கை முற்றிற் குங்குமம் எழுதாள்
மங்கல அணியிற் பிறிதணி மகிழாள்

என்ற வரிகளால், சிலம்பிழந்த சீரடி, குங்குமத் தொய்யில் எழுதாக் கொங்கை என, அங்கங்களின் அணிகளை அல்லது அலங்காரத்தைத் துறந்ததைக் கூறுகிறார். மார்புக்கு மேலிடமான கழுத்து வரும்போது மங்கல அணி என்று குறிப்பிட்டிருப்பதால் அவ்வணி தாலியே என்பது உறுதிப்படுகின்றது.

_ இது சிவஞானத்தின் சீரிய கருத்து. இதுவரை பார்ப்போம். இதில்கூட இளங்கோவடிகளின் ஒரு வரியை நண்பர் விட்டுவிட்டார். அந்த வரியைச் சொன்னால் எங்கே ஆபாசம் என்று மற்றவர்கள் கூறி விடுவார்களோ என்ற பயத்தில் இளங்கோவடிகளைக் காப்பாற்ற ஆசைப்பட்டு, விட்டுவிட்டார் போலும்! தோழர் பயப்பட வேண்டியதில்லை! இந்த இடத்தில் அந்த வரி வருவது இலக்கியத்துக்குப் புறம்பும் அல்ல; ஆபாசமும் அல்ல. மேலும் இது மனிதக்கதை. அந்த வரி இதுதான்: மென்துகில் அல்குல்மேகலை நீங்க… மறைவிடத்தே மேகலை அணிதலும் ஒழிந்தாள் என்பது பொருள்.

சிவஞானத்தின் பெருந்தவறான ஆராய்ச்சி, உண்மையாக முடியாமல், அவர் வரிகளும் அவரைக் காட்டிக் கொடுக்கின்றன! இளங்கோவடிகள், கண்ணகியின் தோற்றத்தை, உள்ளங்கால்முதல் உச்சிவரையில் கூறுவதாகவும், ஒவ்வொரு அங்கத்தின் நகைகளையும் கூறும்போது கழுத்தருகில் வந்து மங்கல அணி என்பதாகக் குறிப்பிடுவதாகவும் ஆகவே அது தாலிதான் என்றும் சாதிக்கிறார். ஒவ்வொரு அங்கத்தின் அணிகளை அல்லது அலங்காரத்தைத் துறந்தாள் என சிவஞானம் கூறுகிறார். அதன்படி இளங்கோவடிகள் முழுதும் அணிகளையே கூறவில்லை; அலங்காரத்தைச் சில அங்கங்களுக்கும் கூறுகிறார் என்கிற உண்மை அறியக் கிடக்கிறது. உதாரணமாக, கால் சிலம்பு இல்லை _ இது நகை. கொங்கைக்கு தொய்யில் எழுதவில்லை  இது அலங்காரம்! நகையல்ல! எழுதுவிக்கும் ஒரு செயற்கை அலங்காரம்  அவ்வளவுதான்! அதேபோல, தொடர்ந்து போகும்போதும் இளங்கோவடிகள்,

மங்கல அணியிற் பிறிதணி மகிழாள்
கொடுங்குழைதுறந்து வடிவந்துவீழ்காதினள்!
திங்கள்வாண் முகம் சிறுவியர் பிரியச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்
பவள வாணுதல் திலகம் இழப்பத்
தவள வாணகை கோவலன் இழப்ப
மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக்
கையறு நெஞ்சத்துக் கண்ணணி…
_ என்கிறார்.

இந்த வரிகள், இளங்கோவடிகள் வெறும் அணிகளைப் பற்றி மட்டும் கூறவில்லை என்பதும், ஒவ்வொரு அங்கத்தின் செயற்கை அழகையும் துறந்தாள் என்று சொல்ல வந்து, அணிபூட்டக் கூடியவற்றிற்கு அணிகளையும், அது முடியாத, நெற்றி, கண் முதலியவற்றிற்கு அலங்காரத்தையும் துறந்தாள் என்று கூறுகிறார். காலில் சிலம்பு இல்லை; மேகலை இல்லை; கொங்கைக்கு அலங்காரம் இல்லை; எனக் கூறி, கழுத்தில் ஒரு அணியும் இல்லை என்பதை _ இயங்கை அழகன்றி வேறு அணிகள் சூடவில்லை என்பதை _ வேறு அழகு செய்யாமல் இயற்கை அழகோடு இருந்தாள் என்பதை _ மங்கல அணியிற் பிறிதணி மகிழாள் என்று கூறுகிறார். கழுத்தில் ஒரு அணியும் இல்லை என்பதே பொருள். தாலி கட்டப்பட்டிருந்தால் அதைக் கழற்றக் கூடாது என்கிற புனிதத் தன்மைப்படி, கழற்றியிருக்க முடியாது. ஆகவே தாலி கட்டப்படவில்லை _ ஒன்று!

மங்கல அணியைத் தவிர வேறு அணி இல்லை _ தாலி தவிர வேறு இல்லை என்ற சிவஞானக் கருத்துப்படி பார்த்தால், ஏதோ நூற்று எட்டு நகைகளைக் கழுத்தில் அணிந்தாள்; தாலியைத் தவிர மற்றவற்றைக் கழற்றி விட்டாள் என்று வலிந்து பொருள் கொள்ளவேண்டும்! இது தவறு! ஆகவே, பெரும்புலவர் வேங்கடசாமி நாட்டார் கருத்துப்படி, இயற்கை அழகன்றி செயற்கை அழகு செய்யாள் எனப் பொருள் கொள்வதே முறை. அடிமுதல் நுனிவரை முழுதும் அணிபற்றிக் கூறியிருந்தால் சிவஞானம் கருத்துச் சரிதான்! ஆனால் அப்படி இல்லையே! பின்பும், காதிற்குழையில்லை; முகத்தில் காதலில் வரும் சிறுவியர்வுஇல்லை; கண்களில் அஞ்சனம் இல்லை; நெற்றியில் பொட்டு இல்லை என்று அலங்காரத்தை _ அணியல்லாத அலங்காரத்தை அடுக்கி வைத்துள்ளாரே! அதுபோன்றே, கழுத்தில் இயற்கை அழகன்றி செயற்கை அழகில்லை என்று பொருள் கொள்ளவேண்டும். இந்த இடத்திலும் மங்கல அணி தாலி அல்ல!

அப்படி அது, தாலிதான் என்றால், கணவன் இறந்ததும் அலங்காரங்களைச் சிதைக்கிற கண்ணகி தாலியையும் கழற்றினாள் என்று இளங்கோவடிகள் கூறியிருக்க வேண்டும். அவர் அப்படிக் கூறவில்லை. கட்டுரை காதையில்

கருத்துறு கணவற் கண்டபின் அல்லது
இருத்தலும் இல்லேன்; நிற்றலும் இலனெனக்
கொற்றவை வாயிற்பொற்றொடி தகர்த்து…!
_ என்கிறார்.

இதில், கண்ணகி, துர்க்கை கோயிலில், தன் வளையல்களை உடைத்து, தன் கணவனைக் கண்டபின் அல்லது இருத்தலும் இல்லேன் நிற்றலும் இல்லேன் என்கிறாள். கொலைச் செய்திக்குப்பின், இச்செய்தி வருகிறது. தாலி கட்டப்பட்டிருந்தால், கண்ணகி தாலியைக் கழற்றினாள் என, இளங்கோவடிகள் குறிப்பிடாமல் இருந்திருக்க முடியாது. கண்ணகியும் தாலியைக் கழற்றாமல் முடியாது! இங்கேயும் கண்ணகி, வளையல்களை உடைக்கிறாளே தவிர, தாலி கழற்றவில்லை, காரணம் தாலி இல்லை!
கோவலனுக்கும் கண்ணகிக்கும்; திருமணம் நிகழ்ந்த பின்னர், சில தோழியர், அவர்களை அமளியில் ஏற்றுவித்து, பின்வருமாறு வாழ்த்துகிறார்கள்.

காதலற்பிரியாமல் கவவுக்கை நெகிழாமல்
தீதறுக!

_ அதாவது, கண்ணகி, தன் இன்னுயிர்க் காதலனை கண்ணிலும் நெஞ்சிலும் பிரியாமல் வாழ்க! கோவலனும் தன் துணையாகிய கண்ணகியைத் தழுவியகை நெகிழாமல் எக்காலத்திலும் வாழ்வதாக! என்பதாகும். இதிலும் தாலிக் கயிறு தங்கவேணும் என்கிற நவீன ஒப்பாரி இல்லை!
ஆகவே, நன்று, முறையே கற்றுத் தேர்ந்து ஆராய்ந்த, வெங்கடசாமி நாட்டார், மதுரை முதலியார், ராசமாணிக்கனார் முதலியோர் கருத்துப்படி, சிலப்பதிகாரத்திலும் சங்க இலக்கியங்களிலும் தாலி குறிப்பிடப்படவே இல்லை என்னும் சரியான ஆராய்ச்சி முடிவுக்கு நாம் வரலாம்.

தோழர் சிவஞானம், சிலம்புச் செல்வன் என்றெல்லாம் புகழ் வாங்கிக் கொண்டவர்; அதிலே தேர்ந்த அறிவாளி என்று தமைத்தாமே பாராட்டிக் கொள்பவர். நாமும் அவருக்குத் தெரிந்தது அது ஒன்றுதான் என்று கருதிக் கொண்டிருந்தோம். இப்போது அதுவும் பூஜ்யமா அவருக்கு என்ற ஆயாசம் பிறக்கிறது!

மேலும் தோழர் சிவஞானம் தாலி உண்டு என்ற கூற்றுக்கு, புறநானூற்றுப் பாடல்களிலிருந்தும் ஆதாரம் தேடுகிறார். சான்றாக, ஒரு புறநானூற்றுப் பாடலிலிருந்து இந்த வரியைக் கூறுகிறார்:

ஈகையரிய இழையணிமாதர் _ அதாவது, கொடுத்தற்கரிய தாலி (மங்கல அணி!)யை அணிந்த பெண்கள் என்று உரையாசிரியர் கூற்றையும் சேர்த்துக் காட்டுகிறார். தாலி, கொடுத்தற்கு அரியது என்பது ஆரிய வழக்குப்படி ஏற்பட்ட புனித எண்ணம். இதை, வாதத்துக்காக சரி என்று வைத்துக் கொண்டாலும், வெறும் இழையணி என்றாலே, கொடுத்தற்கரியது என்னும் பொருள் வந்துவிடும். மனிதன் என்று சொன்னாலே, சாப்பிடாமல் வாழமுடியாதவன்; சாகாமல் இருக்க முடியாதவன் என்கிற பொருள்கள்_ மனிதனுக்கு இயற்கையாக உள்ள நிலைகள் தோன்றிவிடும்! சாப்பிடாமல் வாழுதற்கரிய மனிதன்; சாகாமல் இருத்தற்கரிய மனிதன்; சாகாமல் இருத்தற்கரிய மனிதன் என்றெல்லாம் கூறிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. அதிலும் புறம்பாடியவர்களில் ஒரு சிறந்த புலவர் இந்தக் குற்றத்திற்கு ஆட்படமாட்டார். ஆகவே, இழையணி என்பதற்கு ஆபரணங்கள் என்ற பொதுப் பொருளைத்தான் கொள்ள முடியும். தாலிஎன்கிற ஸ்பெஷல் பொருள் கொள்ள முடியாது! ஈகையரிய என்றால், கொடுத்தற்கரிய விலையுயர்ந்த என்னும் பொருள் சுலபமாக வந்து நிற்கிறது. ஆகவே, பொதுவாக, விலையுயர்ந்த நகைகளை (தாலி அல்ல!) அணிந்த பெண்கள் என்று கொள்வதே அறிவுடமை!

இதற்கு எடுத்துக்காட்டாக, புறநானூற்றிலேயே வேறு பாடலைக் காணலாம்! முள்ளை முள்ளால்தானே எடுக்கமுடியும்!

(தொடரும்)


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *