கோபுர தரிசனம் செய்வதால் மட்டுமே கோயிலுக்குச் சென்றுவந்த பலனைப் பெற முடியுமா?
– இது 11.12.14 தினமலர் பக்தி மலரில் கேட்கப்பட்ட கேள்வி. அதற்கு, வேலைநிமித்தமாக கோவிலுக்குச் செல்ல முடியாதவர்களுக்கும், பயணம் செய்பவர்களுக்கும் பொருத்தமான விஷயம் இது. மற்றபடி கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்தால்தான் சிறப்பு – என பதில் தரப்பட்டிருக்கிறது. ஆக,
ஆரியக் கூத்தாடினாலும் ஆரியம், காசு காரியத்தில் கண்ணாயிருக்கும் என்பது இதன் வாயிலாக உறுதிப்படுத்தப்படுகிறது. பக்தர்கள் கோவிலுக்குப் போனால்தானே குருக்களுக்குத் தட்சணை கிடைக்கும். பக்தியின் பெயரால் இப்படிச் சுரண்டித்தானே… பார்ப்பனீயம் இதுவரை செழித்துக்கொண்டிருக்கிறது. இதன் ஆணிவேரை அறுக்கத்தானே தந்தை பெரியார் அகவை 95லும் அயராது உழைத்தார்!
விளைவு? இன்று….
அறிந்தோம்! தெளிந்தோம்!!
கோபுர தரிசனம் எதற்கு? தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோர் இந்து மதத்தைவிட்டு விலகவும் கூடாது… ஆனால், அதேசமயம் அவர்களை கோயிலுக்குள்ளே அனுமதிக்கவும் கூடாது! ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதுதானே பார்ப்பனீயத்தின் சூழ்ச்சி! அதன் தாரக மந்திரம்!! இதைத் தோலுரித்துக் காட்டிவிட்டாரே தந்தை பெரியார்!
அதனால்தானே இன்று தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களின் தலைமையில் இளைஞர் படை அணிவகுத்து நிற்கிறது. இன்று அறிந்தோம்! தெளிந்தோம்!! என்று உறுதிகூறி!
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்