அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். எனினும் இப்போதைய சூழ்நிலையில் கோவில் கட்ட முடியவில்லை. காரணம், ராஜ்யசபாவில் எங்கள் கட்சிக்குப் போதிய பலம் இல்லை. அதனால்தான் ராஜ்யசபாவில் மசோதா கொண்டுவந்து நிறைவேற்ற முடியவில்லை.
– ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர்
முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறைவேற்றிய நிலம் கையகப்படுத்துதல் சட்டம் அவசரக் கோலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம். அதற்கு பா.ஜ.வும் ஆதரவு அளித்து அப்போது தவறு செய்துவிட்டது. நான் பிரதமரானதும் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என பல மாநில முதல்வர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அவர்கள் எழுதிய கடிதங்கள் என்னிடம் உள்ளன.
– நரேந்திர மோடி, இந்தியப் பிரதமர்
திருநங்கைகள் பாதுகாப்பை உறுதி செய்யும்விதமாக அவர்களுக்கு எதிராக இருக்கிற 377 சட்டப் பிரிவை முழுமையாக நீக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு என்பது எப்படி அரசு மற்றும் தனியார் துறையில் அனைவருக்கும் கிடைக்கிறதோ அதேபோல் திருநங்கைகளுக்கும் வழங்க அரசு இடஒதுக்கீடு செய்ய வேண்டும்.
_ திருநங்கை ரேவதி
உயர் பதவிகளில் இருப்பவர்கள் வழக்கமான சிந்தனையிலிருந்து மாறுபட்டுச் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் மக்களின் பிரச்சினைகளுக்குப் புதுமையான தீர்வுகளைத் தர முடியும்.
_ ஹர்ஷ் வர்தன், மத்திய அமைச்சர்
சென்னையிலும் அதனைச் சுற்றியுள் ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் உள்ள மரங்களின் அடர்த்தி 13 விழுக்காடு குறைந்திருக்கின்றன. இந்த அளவில் மரங்களின் மோசமான இழப்புக்குக் காரணம் ரியல் எஸ்டேட் தொழில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருவதே ஆகும்.
இதனைச் சரிசெய்ய அனைவரும் ஒன்றிணைந்து மரங்களை நடும் முயற்சியில் ஈடுபட வேண்டும். மரங்கள் நடுவதோடு நமது கடமை முடிந்து விடுவதில்லை. அதனை முறையாகப் பராமரிப்பதுதான் அந்த முயற்சியின் முழுமையான வெற்றி.
– சாந்தா ஷீலா நாயர், தமிழ்நாடு திட்டக்குழுத் துணைத் தலைவர்
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள வெளிநாட்டினர் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் விஷயத்தில் பன்னாட்டு விதிமுறையைப் பின்பற்ற சுவிட்சர்லாந்து முடிவு செய்துள்ளது. இதற்கேற்ப சட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து சுவிட்சர்லாந்து நாடாளுமன்றம் விரைவில் பரிசீலிக்கும்.
_ அம்மான், பொருளாதாரத்துறை அமைச்சர், சுவிட்சர்லாந்து
மாநிலங்களவை உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. மாநிலங்களவையின் கருத்துக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும்.
_ சோம்நாத் சட்டர்ஜி, மக்களவை மேனாள் தலைவர்
கார்கில் போரின்போது நான்கு இடங்களில் பாகிஸ்தான் வீரர்கள் முன்னேறினர். அந்தப் போரில் இந்தியாவின் கழுத்தை நெரித்துவிட்டோம். அதை இந்தியாவால் மறக்கவே முடியாது.
_ பர்வேஸ் முஷாரப், மேனாள் அதிபர், பாகிஸ்தான்