ஆசிரியர் பதில்கள்

ஜூன் 16-30

கேள்வி : வருவாய்க்கு விஞ்சிய சொத்துக்குவிப்பு என்பது அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகளுக்கு பொருந்தும்; முதல்வர் பதவிக்கு பொருந்தாது என்று நீதிபதி குமாரசாமி கூறுவது சரி என்றால் இத்துணை நீண்ட நெடுங்காலம் வழக்கு நடைபெற்றது ஏன்? –  வே.சொர்ணம், ஊற்றங்கரை

பதில் : அந்த வழக்கு, ஒரு விசித்திர வழக்கு. விசித்திரமான வகையில் 18 ஆண்டு கால வழக்கில் தண்டனைக்கு மேல் உயர்நீதிமன்றம் தீர்ப்பு, அப்பீலில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் உச்சநீதிமன்றம் 3 மாதங்களில் முடிக்க ஆணை. அவற்றில் வெவ்வேறு வியாக்யானங்கள்!

அரசு அனுமதியே இல்லாது கர்நாடக அரசு சார்பில் ஒரு பிராசிக்யூட்டர் (பவானிசிங்) வாதாடியதும், பிறகு கர்நாடக அரசு மீது உச்சநீதிமன்றம் ஒரு குட்டுகுட்டி தன் பிராசியூட்டரை (அரசு வழக்குரைஞர்) நியமிக்க சொன்னதும் மற்றொரு விசித்திரம்!

ஆச்சாரியாவை நியமித்தபின் அவரது வாதத்தை வெறும் எழுத்து பூர்வமாக மட்டுமே கொடுக்கச்சொன்னது; அவர் விளக்கமாக வாதங்கள் எடுத்து வைக்க வாய்ப்பே இல்லாத விசித்திரம். கூட்டல் கணக்கில் பிழை இருந்த பிறகும் தீர்ப்பு மாற்றப்பட முடியாத விசித்திரம்!

எனவே உச்ச நீதிமன்றம் தான் கடைசி நம்பிக்கை! இவற்றை தெளிவுபடுத்த நீதிப்போக்கு நேர்கோட்டில் செல்லுகிறது என்று நம்பலாம்!

கேள்வி : மத்திய பா.ஜ.க. அரசினால் தற்பொழுது அடிக்கடி விளம்பரப்படுத்தப்படும் வளர்ச்சி, வளர்ச்சி என்ற வேஷம் (கோஷம்) பற்றி?

_ க.வேல்முருகன், வியாசர்பாடி

பதில் : மயக்க பிஸ்கட்டுகள் பலவிதம் அதில் இது முக்கிய ரகம்!

கேள்வி : நீதி வழங்குவதிலும் பிராமண, வைசிய, சூத்திர, பஞ்சம வேறுபாடுகள் காணப்படுகிறதே? இதற்குத் தீர்வு?             _ கு.பழநி, புதுவண்ணை

பதில் : மனுநீதி – வர்ணதர்ம மனப்பான்மை இல்லாத நீதி மலர்ந்தால் மட்டுமே முடியும்!

கேள்வி : வாரணாசியில் மகளிர், மாணவர் அமைப்பினரின் எதிர்ப்பால் நித்யானந்தா ஓட்டமெடுத்திருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட அந்த சாமியார் ஊர் ஊராக அருளுபதேசம் செய்யப் புறப்பட்டு விட்டாரே?

–  நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

பதில் : அங்கே சொரணை – சூடு உள்ளது. இங்கோ அவை காயடிக்கப்பட்ட பரிதாபநிலை என்பதை நாம் வெட்கத்தோடு ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்!

கேள்வி : கோயில் கோயிலாகப் பூஜையும் செய்துகொண்டு தந்தை பெரியார் சிலைக்கும் மாலை அணிவிப்பதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்? – நீ.தேன்மொழி, காஞ்சி

பதில் : பேச நா இரண்டுடையாய் போற்றிப் போற்றி! வஞ்சக வேந்தே போற்றி! வன்கண நாதா போற்றி என்று அறிஞர் அண்ணா, ஆரியமாயை பற்றி தோலுரித்ததற்கு நல்ல எடுத்துக்காட்டு!

கேள்வி : அய்.அய்.டி.யில் சூத்திரத் தலைவர்களின் கருத்துப் பரவலுக்குத் தடை பற்றி தங்கள் கருத்து என்ன? – க.பாரதிதாசன், மதுரை

பதில் : தடைகளைத் தாண்டி தடம் பதித்து வெற்றி பெறும், காலத்தை வென்ற கருத்துக்கள்-  தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் கருத்துக்கள். -அவர்தம் வயலில் தூவப்பட்ட உரம் இவை! பயிர் தழைத்து வளர உதவிடும்!

கேள்வி : தனியார் துறையில் இடஒதுக்கீட்டுக்காக மாணவர் போராட்டமாக என்ன செய்ய வேண்டும்? – தி.அமுதவள்ளி, பாளையங்கோட்டை

பதில் : மாணவர்களுக்கு அவர்களது வேலை வாய்ப்பு தனியார் மயத்தால் பறிக்கப்படுவது பற்றியும், பெரும்பகுதி தனியார் துறை என்று வந்ததால் ஏற்படும் வேலை பறிப்புப் பற்றிய உண்மைகளையும் சமூக நீதிப் போராளிகள் இடைவிடாது சுட்டிக்காட்டிப் பிரச்சாரம் செய்ய வேண்டும். மாணவர்கள் போராட்டம் நிச்சயம் பலன் தரும்.

கேள்வி : மழைக்கு வருணஜெபம் செய்யச் சொல்கிறாரே மத்திய அமைச்சர்? வளர்ச்சிக்கும் அதுதான் வழியா?        _ செ.கந்தசாமி, அரியலூர்

பதில் : வளர்ச்சி என்று முழங்கிக்கொண்டே கி.மு.காலத்தை நோக்கிய, பின்னோக்கிய காட்டுமிராண்டிக் கால மூடநம்பிக்கை கருத்துக்கள். அவர்கள் பதவிப் பிரமாணம் எடுத்த அரசியல் சட்டத்தின் 51ஏ பிரிவின்படி மகாமகா குற்றமும் கூட!

கேள்வி : தமிழர்களை வழிநடத்தும் தலைவர்களே பிரிந்து கிடக்கும்போது தமிழர்களை ஒன்று சேர்ப்பது எப்படி?     _ கி.கண்ணம்மா, வியாசர்பாடி

பதில் : தணல் குளிரும் தமிழர் ஒன்று சேர்ந்தால்! என்ற புரட்சிக் கவிஞரின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. பாழும் அரசியல் _ பதவிகள் என்ற கிருமிகள் செய்யும் வேலை இது!

கேள்வி : டிராபிக் இராமசாமிக்கு எதிர்கட்சிகளெல்லாம் ஆதரவு தரலாமா?
_ பா.வேலுமணி, வேலூர்

பதில் : அரசியலில் எதுவும் நடக்குமே!
இங்கு யாருக்கும் வெட்கமில்லை
என்ற வரிகளை நினைவு படுத்திக்கொள்ளுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *