நான் ஒரு கடவுள் மறுப்பாளன் பிரகடனப்படுத்திய பிபிசி தொகுப்பாளர்

மே 16-31

நான் ஒரு கடவுள் மறுப்பாளன்

பிரகடனப்படுத்திய பிபிசி தொகுப்பாளர்

இலண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் பிபிசி வானொலியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்  ஸ்டீபன் நோலன் என்பவர் தன்னை ஒரு கடவுள் மறுப்பாளர் என்று கடவுள் நம்பிக்கை உள்ள கிறித்தவப் பாதிரியாரைப் பேட்டி கண்டபோது பிரகடனப்படுத்தியுள்ளார்.

வடக்கு அயர்லாந்து பகுதியில் அரசு நிர்வாகத்தின் ஒரு பகுதியாக உள்ள உள்ளாட்சிக்குழுக்  கூட்டத்தில் பிரார்த்தனைக் கூட்டம் நடத்தப்படலாமா? என்கிற தலைப்பில் பிபிசி வானொலியில் விவாதம் நடைபெற்றது.

வானொலியின்  சார்பில் விவாதத்தை ஒருங்கிணைத்து  வழங்கியவர்  அந்த விவாதத்தின்-போது தாம் ஒரு கடவுள் மறுப்பாளர் என்று கூறினார்.

விவாதத்தின் தொலைப்பேசி மூலம் பங்கேற்ற வானொலி நேயர்களில் ஒருவரான டங்கான் பகுதியைச் சேர்ந்தவரான ஸ்டீபன் என்பவர், “நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்  எப்படி ஒரு சார்பாக தம்மைக் கடவுள் மறுப்பாளர் என்று குறிப்பிடலாம்? என்று கேட்டுள்ளார்.

மேலும் ஸ்டீபன் கூறுகையில், “நிகழ்ச்சியை வழங்குபவர் என்ற முறையில் நீங்கள் நடுநிலையுடன் இருக்க வேண்டும். ஈஸ்டர் திங்களன்று மாவ்ட் கெல்லிஸ் என்பவரிடம் எடுத்த பேட்டி மிக நன்றாக இருந்தது.

பேட்டியின்போது, நீங்கள் மாவ்ட் கெல்லிசிடம் “நீங்களும் நானும் எங்கே வேறுபடுகிறோம் என்பதில்தான் என்றால், நான் கடவுளை நம்பவில்லை” என்றீர்கள். நிகழ்ச்சியைத் தலைமை தாங்கி நடத்துபவரான நீங்கள் நடுநிலையுடன் இருப்பதிலிருந்து மோசமான நிலையை உருவாக்கிவிட்டீர்கள்.

நான் பிபிசி ஒரு சார்பானது என்கிறேன். ஏற்கெனவே ஒரு பாலின திருமணம் குறித்த விவாதத்திலும் அப்படித்தான் இருந்தது என்று  குறிப்பிட்டுள்ளார்.

உள்ளாட்சிக் குழுக் கூட்டம் என்பது பொது நிகழ்வு, அரசு சார்ந்த ஒரு நிகழ்வு என்பதால், அதில் கடவுள், மத சம்பந்தமான  பிரார்த்தனைக்  கூட்டங்கள்  நடத்தப்-படலாமா? என்பதற்காக நடைபெற்ற விவாதத்தில், நிகழ்ச்சியை வழங்கியவர்  தன்னை  ஒரு  நாத்திகர்  என்று  குறிப்பிடுவதா? என்று கேட்டுள்ளனர்.

நிகழ்ச்சியை நடத்துபவர்  தம்முடைய சொந்தக் கருத்துகளை வெளிப்படுத்திவிட்டார் என்று சில வானொலி நேயர்கள் கூறினர். அந்தப் பேட்டியில் அப்படி என்னதான் சொன்னார் நோலன்…

ஸ்டீபன் நோலன்: நீங்கள் மிகவும் உணர்ச்சிவயப்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன்.

மாவ்ட் கெல்லிஸ்: ஆமாம். நான் கடவுளைப்பற்றி எண்ணும்போது உணர்ச்சி-மயமாகி விடுகிறேன். காரணம், நான் கடவுள்மீது வைத்துள்ள நம்பிக்கை.

ஸ்டீபன் நோலன்: அப்படியா? உங்களுக்குத் தெரியுமா, அதில் தாக்குவதாகக் கருத-வேண்டாம். நான் கடவுள் இருப்பதாக நம்பவில்லை. இதில்தான்  நாம் மாறு-படுகிறோம். நீங்கள் உணர்ச்சிமயமாகி விடுவதற்குக் காரணம், உங்களை மற்ற மக்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டுள்ளீர்கள்

என்று அந்த விவாதம் தொடர்ந்துள்ளது.

இதுபற்றிக் கூறிய நோலன், ஒரு விவாதத்தை ஒருங்கிணைப்பவர் என்பவர் பணிக்கு வரும்போது, அவருக்கு உள்ள தனித்தன்மை மற்றும் நம்பிக்கைகளைக் கூறக்கூடாது என்று கூறப்படுகிறது.

நான் கடவுளை நம்புகிறேனா என்பது பிரச்சினையல்ல… எனக்கான சோதனை, பணியின்போது பக்க சார்பாக நடந்து கொள்கிறேனா? என்பதில்தான் உள்ளது என்று கூறியுள்ளார்.

“இதற்கு முன்னர் மிஷினரியுடன் பேட்டி எடுத்தபோதுகூட தம்முடைய நாத்திகக் கருத்துகளை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை என்று கூறி, தற்போதைய விவாதத்தில் கடவுள் குறித்து விவாதிக்க முயன்றேன்.

அதில் கடைசிவரை நேர்மையாக இருக்கவே முயற்சித்தேன். அதுதான் தவறாகிவிட்டது” என்று நிகழ்ச்சி நடத்திய ஸ்டீபன் நோலன் குறிப்பிட்டுள்ளதாக ‘தி ஜர்னல்’ இதழ் குறிப்பிட்டுள்ளது.

தன்னை ஒரு நாத்திகர் என்று வெளிப்-படுத்திக் கொண்டதை நடுநிலை இல்லாதவர்-போல் குறிப்பிடுவோர்,  வார்த்தைக்கு வார்த்தை ஓ காட், ஓ கடவுளே என்று கூறுபவர்கள் குறித்து என்ன கூறுவார்கள்? என்று கேள்வி-யெழுப்புகிறார்கள் மனிதநேயர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *