புதுப்பாக்கள்

ஜூன் 01-15

சீறும் சீமாறு

(துடைப்பம்)

முத்தத்துல செத்தை, எலை
முள்ளுகல்லு குப்பையெல்லாம்
மொத்தமாக வாரிக்கொட்டி
சுத்தமாக்கத் தேடுவீங்க
மூத்தாளையே ஓட்டிடவும்
முனிப்பேயை வெரட்டிடவும்
சுத்தமாக்கி சீதேவியெ
குடிவைக்கத் தேடுவீங்க

மொத்தசுத்தம் ஆனபின்னே
மூலையிலே போடுவீங்க
சித்தநேரம் வெளியே வந்தா
நிமித்தம்தான் கெட்டுச்சாமே?

– கே.பி.பத்மநாபன், சிங்காநல்லூர்

கேடுகெட்ட மானி(ட்)டரே!

ஆண்களுக்குப் போதை மதுக்கடையின் ஒரு பாட்டில் மானிட்டர்!
பெண்களுக்குப் போதை
தொலைக்காட்சித் திரை மானிட்டர்!
இளைஞர்களுக்குப் போதை தருவது
கம்ப்யூட்டர் மானிட்டர்!

-க.அருள்மொழி, குடியாத்தம்

சொற்கள் உலாவும் மனசு!

முன்னெப்போதும்
கிட்டாத புதியதோர் வாழ்நிலையாய்
முடங்கிக் கிடக்கிறேன்
ஆளரவமற்றதொரு  தனியறையில்

ஊமைப் பேச்செனினும்
உரத்துப் பேசுகின்றன
மௌனமாய் எழுத்துகள்

மனிதன் கற்றுத் தராததைக் கற்றுக் கொள்ளவும்
பெற்றுக் கொள்ளவுமாய்
தனியறை என் தவச் சாலையாய் உருமாறிற்று
எழுத்துகளே ஆசானாகவும்
ஆயுதமாகவும் முன் நடத்துவதால்
என் கழுத்துக்கும் கூட
ஒருநாள் விலைபேசப்படலாம்
கவலையில்லை –

கிளர்ந்தெழும் புயல்காற்றாய்
அறைச் சுவருடைத்து
புறப்பட்டுச் செல்லுமொரு நாளில்
பீடங்கள் தகர்ந்து
சர்வசமம் நிலம் பிறக்கும்

– மீனா சுந்தர், மன்னார்குடி

மாற்றம் வேண்டும்

புதுமைப் பெண்கள் நாம்
உடையில் புதுமை
நடையில் புதுமை
அலங்காரத்தில் புதுமை
நடை, உடை, பாவனை
புதுமை புதுமை புதுமை
நெஞ்சு விம்முகிறது சந்தோசத்தில்
கர்வம் மெல்ல எட்டிப் பார்க்கிறது
தோழி சொன்னாள் இவ்வளவும்
ஏறிட்டு அவளைப் பார்த்தேன்
உச்சி முதல் உள்ளங்கால் வரை
அலங்காரப் பதுமையாய் அவள்
சிரிப்பு வந்தது எனக்குள்
கோபப்பட்டாள் தோழி
செல்லமாய்த் தட்டிக் கொடுத்தேன்
காலங்கள் சென்றன
தோழியைக் கண்டேன் மறுபடியும்
கண்டதும் கண் கலங்கினாள்
கூண்டுக்கிளி ஆக்கப்பட்டேன்
புழுவினும் கீழான நிலை எனக்கு
அடிமை வாழ்வு வேண்டாம் எனக்கு
புலம்பினாள் தோழி
சிரிப்பு வந்தது எனக்கு
கோபப்பட்டாள் தோழி
தெளிவாய்ச் சொன்னேன்
புதுமைப் பெண்ணானாய்
புரட்சிப் பெண் ஆனாயோ
பெரியார் கண்ட கனவு
உனக்குள் தோற்றுப் போனது
விழித்துக்கொள் தோழி
நீ ஆளப் பிறந்தவள்
உன் பலம் உனக்குள்
தன்னம்பிக்கை கொள்
சுய கர்வம் வேண்டும் உனக்கு
உனக்காகச் சிந்தித்த பகுத்தறிவு உனக்காகப் பேசிய வெண்தாடி
உனக்காக உழைத்த தந்தை
அவரை நினைத்துப் பார்
சொன்னவற்றைப் புரட்டிப் பார்
உன் நிலை புரியும்
உன் மறுபக்கம் தெரியும்
பெண்ணியம் பேசு
பெண்ணியம் நேசி
வாழ்வு உயரும்
தெளிவாய்ச் சொன்னேன்
நிமிர்ந்தாள் தோழி; உண்மை உணர்ந்தேன்
மறுபடி வருவேன் அய்யாவின்
புரட்சிப் பெண்ணாய்,…
சொன்னாள் தோழி
சிரிப்பு வந்தது எனக்குள் சந்தோஷப்பட்டாள் தோழி

– ந. தேன்மொழி, குடியாத்தம்

உழைப்பாளி

பேருந்தின் ஒலிகளுக்கும்….
பென்சுகாரின் ஒலிகளுக்கும்…..
இடையே _
எனது சைக்கிள் மணியின் ஓசை
முடங்கிப் போனது!!…

வளர்ப்பு
வண்ண விளக்குகள்…..
துள்ளல் இசை…..
இரட்டை அர்த்த வரிகள்….
விசில் பறக்கிறது?
சிறுமியின்
ஆபாச நடனம் _
வெள்ளித்திரையில் இல்லை _
பள்ளிக்கூடத்தில்!!!!

– முத்தழகன் சாத்தப்பன், கோனாப்பட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *