குருதி குடித்துச் சிவக்கும் செம்மரம்

ஏப்ரல் 16-30

– கோவி.லெனின்

வறண்ட காடுகளில் விளையும் செம்மரங்கள் (தாவரவியல் பெயர் Pterocarpus santalinus) கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான ஆந்திர மாநிலம் திருப்பதி வனச்சரகத்தில் நிறைந்து காணப்படுகின்றன. இதற்குத் தண்ணீர்த் தேவை குறைவு. வெட்டினால் மீண்டும் துளிர்க்கும் தன்மையுடையது. அழிந்துவரும் அரிய வகைத் தாவர இனங்களின் பட்டியலில் செம்மரம் வைக்கப்பட்டிருப்பதால் இதன் வளர்ப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

 

கப்பல் கட்டுதல், சாயம் தயாரித்தல், மருந்தாகப் பயன்படுத்துதல், வழக்கமான மரச்சாமான்கள் தயாரித்தல் என செம்மரங்களினால் பலன் அதிகம் என்பதால் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தேவை அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஒரு டன் 20 லட்சம் முதல் 40 லட்சம் வரை விலைபோகும் இம்மரங்கள் வெளிநாடுகளில் இதுபோல மும்மடங்கு விலை போகின்றன. இதுவே செம்மரக் கடத்தலுக்கு முக்கியக் காரணமாகும்.

தமிழகத்தின் வேலூர்-, திருவண்ணாமலை (பழைய வடஆற்காடு) மாவட்டங்களும் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்குட்பட்டவை. இந்த மலைப் பகுதிகளில் வாழும் உழைக்கும் மக்கள், காடு சார்ந்த தொழில்களில் அனுபவம் வாய்ந்தவர்கள். தற்போது அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில், ஆந்திராவில் செம்மரம் வெட்டித் தந்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என்று தமிழகம்-ஆந்திரா என இரு மாநிலங்களைச் சேர்ந்த இடைத்தரகர்-களும் இவர்களை அழைத்துச் செல்கிறார்கள்.

ஒருநாளைக்கு 7000 ரூபாய்கூட கூலி கொடுப்பது உண்டாம். அதனால்தான் ஆபத்து எனத் தெரிந்தும், சில நாட்களிலேயே நல்ல வருமானம் ஈட்டிவிடலாம் என்ற எண்ணத்தில் செம்மரம் வெட்டுவதற்கு இத்தொழிலாளர்கள் செல்கின்றனர். பக்கத்து வீட்டுத் தொழிலாளர் இவ்வளவு தொகை சம்பாதிக்கிறார் எனத் தெரிந்தால் அக்கம்பக்கத்தாரும் அதே வேலைக்குச் சென்று அதிகம் சம்பாதிக்க ஆசைப்படுவது இப்பகுதியில் ஒரு வாழ்க்கைமுறையாகிவிட்டது.

செம்மரக் கடத்தல் ஆந்திர அரசுக்குப் பெரும் வருவாய் இழப்பு என்பது ஒரு பக்கம், இதில் தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் ஈடுபடுகிறார்கள் என்ற கடுப்பு மறுபக்கம். இரண்டும் சேர்ந்துதான் ஆந்திர மாநிலத்தை ஆளும் சந்திரபாபு நாயுடு அரசின் காவல்-துறையைக் கொலைவெறியாட்டம் போட வைத்துள்ளது. 7.-4.-2015 அன்று திருப்பதி அருகே சேஷாசலம் மலையில் ஈத்தகுண்டா (ஸ்ரீவாரிமெட்டு) பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத் தொழிலாளர்கள் 20 பேரைச் சுட்டுக் கொன்றது ஆந்திரக் காவல்துறை.

எச்சரிக்கை விடுத்து, பிடிக்க வந்த போலீசார் மீது தமிழகத் தொழிலாளர்கள் தாக்குதல் நடத்தியதால்தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்கிற வழக்கமான போலீசின் திரைக்கதை இப்போதும் சொல்லப்படுகிறது. நிகழ்விடத்தில் இருந்த கட்டைகள் பல. நாள்களுக்கு முன்பு வெட்டப்பட்டவை, கொல்லப்பட்டவர்களின் உடல்கள் கிடந்த நிலையும் அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதைக் காட்டுவதாகத் தெரியவில்லை. வழக்கமான என்கவுண்ட்டர்கள் போலவே பிடித்து வைத்து சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்கிற சந்தேகம் பரவலாக உள்ளது. தேசிய மனித உரிமை ஆணையம் உடனடியாக இவ்விவ-காரத்தில் தலையிட்டிருப்பதிலிருந்து இந்த என்கவுண்ட்டர் கொடூரத்தின் தன்மையை உணரலாம். அடுத்தகட்ட விசாரணைகள் உண்மையை வெளிக்கொண்டு வருமா என உறுதியாகச் சொல்ல முடியாது.

தமிழக அரசியல் கட்சிகள், அமைப்புகள் யாவும் இதனை வழக்கம்போல உணர்ச்சிகர-மான நிகழ்வாகப் பார்க்கின்றன. பல முனைகளில் தமிழகம் வளர்ச்சி பெற்றுள்ள-போதும் இங்குள்ள தொழிலாளர்கள் ஆந்திரா போன்ற மாநிலங்களுக்குத் தொடர்ச்சியாகச் சென்று மரம் வெட்டுவதும் சிக்கிக் கொள்வதும் சுட்டுக் கொல்லப்படுவதும் ஏன் என்பதற்கான அடிப்படைக் காரணங்களை அலசுவதற்கு அவற்றிற்கு நேரம் இல்லை. கடந்த ஓராண்டில் இதற்குமுன் தமிழகத் தொழிலாளர்கள் 7 பேர் ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப்-பட்டுள்ளனர். அப்போது இங்குள்ள யாரும் இதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மொத்தமாக 20 பேரைக் கொன்றால்தான் நம்முடைய கவனம் இத்தகைய பிரச்சினைகள் மீது திரும்பும்போல.

பீஹார் போன்ற மாநிலங்களிலிருந்து கட்டடப் பணிகளுக்காகத் தமிழகத்திற்கு வரும் தொழிலாளர்களாக இருந்தாலும், தமிழகத்தி-லிருந்து ஆந்திராவுக்குச் செம்மரம் வெட்டச் செல்லும் தொழிலாளர்களாக இருந்தாலும் அவர்களின் பொருளாதாரத் தேவை-, ஆசை இவற்றைக் காரணமாக வைத்து உழைப்பைச் சுரண்டும் பணமுதலைகளும் இடைத்தரகர்-களும் மொழிபேதமின்றி செயல்பட்டு வருகிறார்கள். தொழிலாளர்களின் உயிர்கள் எளிதாகப் பறிக்கப்படுகின்றன. பணமுதலைகளும் இடைத்தரகர்களும் எளிதாகச் சிக்குவதில்லை. சிக்கினாலும் சில நாள்கள் சிறைவாசத்திற்குப் பின் வெளியே வந்துவிடுகிறார்கள். சட்டங்கள் இவர்களுக்குச் சாதகமாகவும், சட்டத்திற்குப் புறம்பான என்கவுண்ட்டர், தொழிலாளர்களின் உயிருக்கே எதிரானதாகவும் உள்ளது. அதனால்தான் குருதி குடித்து வளர்ந்து கொண்டிருக்கிறது செம்மரம்.

வெட்டப்பட்டாலும் மீண்டும் துளிர்த்து-விடும் தன்மை கொண்டவை செம்மரங்கள். மனித உயிர்களோ சுட்டுக் கொல்லப்பட்டால் திரும்பப் பெற முடியாதவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *