கர்வாப்’பசு’

ஏப்ரல் 16-30

இவ்விடம் அரசியல் பேசலாம்  – கல்வெட்டான்

கர்வாப்’பசு’

தோழர் சந்தானம் தீவிர சிந்தனையில் இருந்தபோது அவரது சலூனுக்குள் தோழர் மகேந்திரன் நுழைந்தார்.

“என்ன தோழர், இந்தியா வேர்ல்டு கப்புல தோற்றதை நினைச்சுக்கிட்டிருக்கீங்களா?” என்று கேட்டுச் சிரித்தார் தோழர் மகேந்திரன்.
“அதை எதுக்கு நான் நினைக்கப்போறே ன். நம்ம மக்களே அதிலிருந்து ஒருவழியா மீண்டு வந்துட்டாங்களே தோழர்”

“அதான் தோழர் எனக்கும் ஆச்சர்யம்! முன்னல்லாம் வேர்ல்டு கப்புல தோத்துட்டு இந்தியா திரும்பினாலே வீட்டு மேல கல்லு விடுவாங்க… இப்பல்லாம் ரொம்பவே அமைதியாயிட்டாங்களே!”

“இப்படியெல்லாம் நடக்கும்னுதான முன்கூட்டியே அய்.பி.எல். போட்டியை வேர்ல்டு கப்பு முடிஞ்சதுமே  கொண்டு வந்துட்டாங்க!”

“கிரிக்கெட்னதும்தான் நினைவுக்கு வருது, கிரிக்கெட் பந்து, எந்தத் தோலில் செஞ்சது?” முத்து இடைமறித்துக் கேட்க,

“அது தெரியாதுங்க தோழர், ஆனால் இவங்களுக்கு தோலில் செய்யற பந்தைப் பற்றியோ, பெல்ட்டைப் பற்றியோ, சட்டையைப் பற்றியோ, காலணிகளைப் பற்றியெல்லாம் கவலையில்லை… அதெல்லாம் பிசினெஸ்… இஸ்லாமியர்கள் மாட்டுக்கறி சாப்பிடுறதுதான் உறுத்துது… அதை நேரடியா சொல்ல முடியாமல் கோமாதான்னு சொல்லிட்டு இருந்தவிங்க இப்போ பாரதமாதான்னே சொல்லத் தொடங்கிட்டாங்க!” என நீண்ட விளக்கமளித்தார் தோழர் மகேந்திரன்.

“அதுசரி, நீங்க என்ன தீவிரமா சிந்திச்சுக்-கிட்டிருந்தீங்கன்னு சொல்லலயே? என தோழர் சந்தானத்திடம் கேட்க,

“மத்தியிலிருக்கும் பி.ஜே.பி.க்காரங்க கட்சி நடத்துறாங்களா இல்லை அழகிப் போட்டி நடத்துறாங்களான்னுதான் யோசிச்சுக்கிட்டிருந்தேன்!”

“ஏன் இப்போ திடீர் குழப்பம்?” என தோழர் மகேந்திரன் கேட்க,

“பின்ன என்னங்க, மத்தியிலிருக்கும் இணை அமைச்சர் ஒருத்தரே என்னவோ நாலாந்தர பேச்சாளர் மாதிரி சோனியாகாந்தியோட நிறத்தைப் பற்றிக் கிண்டலடிக்கிறாரு. அந்தக் கிண்டலில்கூட, முகப்பூச்சு கிரீம் விளம்பரக் கம்பெனிகள் சொல்ற அதே சிவப்பழகு கான்செப்ட்டைத்தான் சொல்றாரு! அந்தப் பக்கம் என்னடான்னா கோவா முதலமைச்சர், போராட்டம் பண்ற நர்சுங்களைப் பார்த்து, இப்படி வெயிலில் போராட்டம் பண்ணினால் நிறம் கறுத்திடுவீங்-கன்னு அட்வைஸ் பண்றாரு! பொறுப்பான பதவியிலிருந்துக்-கிட்டே பெண்களை இவ்ளோ கேவலமா கமெண்ட் பண்ற இவங்கதான் நம்ம எல்லோருக்கும் கலாச்சாரத்தைப் பற்றி கிளாஸ் எடுக்குறாங்க! ரொம்பக் கொடுமையா இல்ல?!”

“சரியாச் சொன்னீங்க தோழர்! இதுல உச்சபட்சக் காமெடி என்னன்னா, நம்ம உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வங்காள தேசத்துக்கு மாடுகள் கடத்தப்படுவதைத் தடுக்கணும். அப்படித் தடுத்தால் வங்காளதேச மக்கள் மாட்டுக்கறி சாப்பிட முடியாமல் சைவத்துக்கு மாறிடுவாங்கன்னு கல்யாணத்த நிறுத்த சீப்பை ஒளிச்சு வச்ச கதையா பேசியிருக்கறதைப் பார்த்தீங்களா?”

“இப்படியெல்லாம் மாடுகளுக்கு மரியாதை தர்ற தேசம், மனிதர்களை மாட்டைவிடக் கேவலமா நினைக்குதே சார்” என்றார் முத்து.

“ஆமாம் தோழர். என்னவோ காக்கா குருவியைச் சுடுற மாதிரி செம்மரம் கடத்துனதா சொல்லி, நாடகமாடி, 20 தமிழர்களைச் சித்ரவதை செய்து கொன்னு போட்டிருக்காங்க. இன்னொரு பக்கம், போலீஸ் காவலில் இருந்த அய்ந்து இஸ்லாமியர்களை போலி என்கவுண்டர்ல போட்டுத் தள்ளியிருக்காங்க. ஆனால் இதைப் பத்தி மத்திய அரசு எதுவுமே சொல்லக் கிடையாது.”

“உண்மைதான் தோழர். கொல்லப்பட்ட இருபது மனிதர்களோட சேர்த்து இரண்டு பசு மாட்டையும் கொன்னிருந்தால் வடநாட்டு ஊடகங்கள் அனைத்தும் இந்நேரம் கொந்தளிச்சிருக்கும்! சோறு தண்ணியில்லாமல் விடியவிடிய விவாதம் பண்ணியிருப்பாங்க! பிரதமர் மோடியே தன்னோட சுற்றுப்-பயணத்தை ஒத்திவச்சுட்டு அந்த இடத்தைப் பார்வையிட வந்தாலும் வந்திருப்பார். அட்லீஸ்ட் ப்ளூ கிராஸ் அமைப்பாவது கேள்வி எழுப்பியிருக்கும். மனிதனுக்கு ப்ளூ கிராஸ் என்ன, சமயத்துல ரெட் கிராஸ்கூட உருப்படியா ஒன்னும் பண்றதில்ல!”

“இதுல நம்ம தமிழக அரசின் கள்ளமவுனம் தான் ரொம்பக் கொடுமை தோழர். ஆந்திர போலீசோட போலி என்கவுண்டர் பற்றிக் கேள்வியெழுப்பாமல், கொல்லப்பட்டவங்களுக்கு நிவாரணத்தை மட்டும் கொடுத்துட்டு பிரச்சினையை அப்படியே அமுக்கப் பார்க்குறாங்க.”

“பின்ன, இந்த மாதிரி போலி என்கவுண்டர் பண்றதுல நம்ம தமிழ்நாடும் சளைச்சதா என்ன? திருடனுக்குத் தேள் கொட்டின கதைதான்”

“இன்னொரு பக்கம் என்னடான்னா மொத்த அமைச்சரவையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா புதுசுபுதுசா வேண்டுதல் வச்சு, முன்னாள் முதல்வரை விடுதலை செய்ய வைக்கிறதுக்காக இல்லாத கடவுளை டார்ச்சர் பண்ணிக்கிட்டிருக்காங்க!”

“மக்கள் இதையெல்லாம் பார்த்துப் பார்த்து வெறுத்துப் போயிட்டாங்க! ஜெயா டி.வி. முழுக்க முழுக்க வேண்டுதல் டி.வி.யாவே மாறிப்போயிடுச்சே!”

“ரொம்ப வேதனையான செய்திதான் தோழர். அதேபோல இப்பல்லாம் வடநாட்டு ஊடகங்களைப் போல நம்ம ஊர் ஊடகங்களும் மத்திய அரசுக்கும் இந்துத்துவாவிற்கும் ஜால்ரா அடிக்கப் பழகிடுச்சுங்க தோழர்!”

“அந்த தமிழ் தனியார் தொலைக்காட்சி பேட்டியைப் பத்திதான சொல்றீங்க? அரைகுறைகளை வைத்துக் கேள்வியெழுப்ப வைக்கிறதும், கேள்விகளுக்குச் சரியான பதிலடி கொடுத்ததும், வேறவழியில்லாமல், என்னவோ ஷகீலா படத்துல பிட்டு சேர்க்குற மாதிரி ஆதாரம்ங்கற பெயரில் தவறான செய்திகளைத் திரிச்சிச் சொல்றதுமா மீசையில் மண் ஒட்டாத கதைதான் போங்க!”

அப்போது இடைமறித்த முத்து, “சார், இந்தப் பசுமாட்டைக் கொல்லக்கூடாதுன்னு தடை பண்ணி வீம்பு பண்றதை முறியடிக்கணும்னா ஒரு சூப்பர் அய்டியா இருக்கு சார்! சொன்னால் சிரிக்கக்கூடாது!”

“சரி, தயங்காமல் சொல்லுங்க. சிரிப்பு வந்தால் சிரிப்போம். அதிலென்ன தப்பு!”

இந்தியப் பசு மாடுகளெல்லாம் வெளிநாட்டு மிலேச்ச மாடுகளோட கலந்ததனால, எல்லாமே மதம் மாறிடுச்சு. அதனால நீங்க கோபப்பட உரிமையில்லைனு சொல்லிட்டா என்ன? பசு மாடுகளையும் தாய்மதம் திருப்ப வர்றாங்களான்னு பார்ப்போம்!”

“ஹஹஹ! முத்து உங்களுக்கு செம நகைச்சுவை உணர்வுதான்! கர்வாப்சி _- யை கர்வாப்பசுனு பேரு வச்சி தாய்மதம் திருப்புற சடங்கு நடத்துறவங்களை ஓவர்டைம் வேலை பார்க்க வச்சிடுவீங்க போல!” எனச் சொல்லி அனைவரும் சிரித்தனர்.

“இப்போ வந்த பத்திரிகைகளின் கருத்துக்கணிப்பைப் பார்த்திங்களா? இந்த 300 நாள் ஆட்சியில மோடியோட செல்வாக்கு, மக்கள் மத்தியில சரிஞ்சிடுச்சாம்! விளம்பர டீம் சரியா வேலை செய்யல போல!”
“புதுசா கல்யாணமானவங்களுக்கு ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்னு சொல்ற மாதிரி, புது அரசாங்கத்திற்கு மோகம் முன்னூறு நாள் போல! ஹஹஹ” என்று சொல்லி தோழர் சந்தானம் சிரிக்க, அனைவரும் உடன் இணைந்து கொண்டார்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *