உற்சாக சுற்றுலாத் தொடர் – 6
பாண்டா எனும் அழகுக்கரடி
மருத்துவர்கள் சோம&சரோ இளங்கோவன்
அக்டோபர் 18ஆம் தேதி மதியம் 2 மணிக்கு சயாம் ரீப் கம்போடியாவிலிருந்து 3 மணி நேரம் பயணம் செய்து செங்டு சைனா சென்றடைந்தோம். விமானத்தில் திபெத்தைப்பற்றி கலாச்சாரம், அரசியல் நிலைமை ஆகியவை பற்றி பேராசிரியர்கள் சேக் டால்டன், அலெக்சி மர்பி சொற்பொழிவு செய்து விளக்கினார்கள். விமான நிலையத்திலேயே உணவு கொடுத்தார்கள். உணவு சுமாராக இருந்தது. பிறகு விமான நிலையத்திலிருந்து நேராக பாண்டா கரடி (Panda Bear Habitat ) காப்பகத்திற்குச் சென்றோம்.
அழகான செயற்கை மலை மீது மூங்கில் காட்டை வளர்த்து அதில் இந்த அமைதியான கரடிகளைப் பாதுகாப்பாக வளர்த்து வருகிறார்கள். இந்தக் கரடிகளைப் பார்க்க ஆயிரக்கணக்கில் மக்கள் வருகிறார்கள். இக்கரடிகள் மூங்கில் இலைகளைச் சாப்பிட்டுக்கொண்டு நாள் ஒன்றுக்கு 10 மணி நேரத்திற்கு மேல் தூங்குவன. இவ்வளவு சிறப்பான பாதுகாப்பு ஏன் என்றால், இந்தக் கரடிகளின் இனம் மிகவும் குறைந்து வருவதால். உலக அளவாக பாதுகாப்பு. பாண்டா குட்டிகளுடன் படம் எடுத்துக் கொள்ளலாம். எப்படித் தெரியுமா? முன்னரே பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு இவ்வளவு பேர்தான் என்று கணக்கு உண்டு. மருத்துவமனை அறுவைச் சிகிச்சைக்குப் போவது போல உடல் மறைக்கும் ஆடை அணிந்து, மூக்கை மறைக்கும் மூடி அணிந்து, கைகளில் கையுறை மாட்டிக் கொண்டு செல்ல வேண்டும். கட்டணம் 180 அமெரிக்க டாலர்கள்! நாங்கள் அதை வெளியிலிருந்துதான் பார்த்தோம்.
அதுவே அழகாகத்தான் இருந்தது. இன்னொரு கரடி, அதே இனத்தைச் சேர்ந்த சுறுசுறுப்பான கரடி ஒன்றைப் பார்த்தோம். அது சிவப்பு நிறம், அதற்கு நீளமான வால் இருந்தது. காப்பகத்திலிருந்து நண்பகல் 1 மணிக்கு அய்ந்து நட்சத்திர விடுதிக்குச் சென்றோம். அந்தப் பகுதி உணவில் சேர்க்கப்பட்டிருந்த மிளகாய் மிகுதியான காரம் நிறைந்தது. நல்ல காரசாரமாக சைனா உணவு. சாப்பிட்டுவிட்டு செங்டு நகரத்தைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம். இரவு நேரம், எங்கு பார்த்தாலும் ஒளிமயம். நகரமே புத்தம் புதியதாக இருந்தது. கட்டிடங்கள், சாலைகள், ஊரின் நடுவே சென்ற ஆற்றில் கட்டப்பட்ட கால்வாய் என எல்லாம் 2011இல் கட்டப்பட்டவை என்று சொன்னார்கள்.
சீனாவில் பார்க்க எவ்வளவோ இருக்கின்றது என்கின்றார்கள். பழைய நீண்ட பெரிய சீனா சுவர். பெய்ஜிங் நகர மிகப்பெரிய முற்றமும், அதன் வரலாறும் என்று எவ்வளவோ உள்ளன. நேசனல் ஜியாகிரபி தேர்ந்தெடுத்தது இரண்டு இடங்கள். ஒன்று ஆயிரக்கணக்கான டெரிகோட்டா சிலைகள் நிறைந்திருந்த பகுதி.
அடுத்து சீனாவின் புதிய நகரமும் அதில் அறிவியலுடன் வளர்க்கப்படும் பாண்டா அழகுக் கரடிகளும். நாங்கள் இதைத் தேர்ந்தெடுத்தோம்.
செங்டு 4000 ஆண்டு பழைய நகரம். அதில் ஒரு பகுதியை முழுவதுமாக இடித்துவிட்டுக் கட்டப்பட்ட புதிய நகரம் அமெரிக்காவின் புதிய நகரங்களை விடப் புதியது. அதன் வயதே நான்குதான். ஆம்! மாட மாளிகைகள், எங்கும் கண்ணாடி சன்னல்கள் பதித்த வானுயரக் கட்டிடங்கள், அலுவலகங்கள், வங்கிகள், விடுதிகள், அழகழகான வெளிச்சமுள்ள அலங்காரங்கள். அங்கே உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் அலுவலகக் கட்டிடங்கள் உள்ளன. சீனாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பெரிய நகரம் பல்கலைக்-கழகங்களும், கலைக்கூடங்களும் நிறைந்தது. அங்கே ஓர் ஓடை மாதிரிக் கட்டி, அதன் இருபுறமும் உள்ள மரங்களில் ஒளி விளக்குகளை ஒழுங்குபடுத்தி பாம்பு போவது போல அரை மைல் தூரத்திற்கு ஒளிரச் செய்து விட்டு விட்டு ஒளி வருவது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.
அது சீனாதான் என்று சொல்வதற்காக பழைய ஆற்றையும், அதன் மீது கட்டப்பட்ட பழைய பாலத்தையும் வைத்துள்ளனர். அந்த நகரம் தோன்றிய பழங்காலக் கல்வெட்டை அப்படியே வைத்துள்ளனர். பாலத்திற்கு மறு பக்கம், பழைய சீனா, கடைகள், உணவு விற்பனைக் கூடங்கள் என்று பழையன காக்கப்பட்டுள்ளன. பாலத்திலேயே உணவுக்-கூடங்களும், கடைகளும் இருந்தன. அவற்றில் வெளிநாட்டவர் கூட்டம் நிறைந்திருந்தது. சீன மக்கள் தாயம் போல் ஒரு விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தனர்.
சில தெருக்கள் அமெரிக்காவை நினைவுப்படுத்தின. சைனா இளைஞர்கள் வினோதமான தலை அலங்காரத்துடன் இசை அரங்குகளின் பக்கத்தில் நின்று கொண்டு வாடிக்கையாளர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். கம்யூனிஸ்டு நாடான சைனாவில் இப்படிப்பட்ட இளைஞர்களைப் பார்த்தது ஆச்சரியமாக இருந்தது. சைனாவில் கம்யூனிசம் போய் முதலாளித்துவம் தலை ஓங்குவது வெளிப்படையாகத் தெரிந்தது. முதல் நாள் பார்த்த ஒரு வருத்தம் என்னவென்றால், மாசடைந்த காற்று சூழ்நிலை. தொழில் முன்னேற்றம் மக்கள் நுரையீரலைக் காயப்-படுத்தும் காற்று சூழ்நிலையை உண்டாக்கியது-தான். விளைவு, எனக்கும் உடல் நலம் கொஞ்சம் குறைந்துவிட்டது. மாசு நிறைந்த காற்றினால் உண்டானதோ என்று ஓர் அய்யப்பாடு. அடுத்த நாள் சைனா நாட்டு விமானத்திலிருந்து திபெத் நாட்டுத் தலைநகர் லாசாவுக்குக் கிளம்பினோம்.
புத்த மதம் எப்படி மாறியுள்ளது என்பதை தலாய் லாமாவின் லாசா சென்று பார்ப்போம்!