அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் தாலி அகற்றும் நிகழ்ச்சி ஏன்?

ஏப்ரல் 16-30

ஏப்ரல் 14ஆம் தேதி பாபா சாகேப் அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களது 125 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா!

அந்நாளில் திராவிடர் கழகத்தின் சார்பில், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகிய இருபெரும் ஒப்பற்ற புரட்சியாளர்களின் சிந்தனைகளைச் செயலாக்கும் வகையில் விழா நடத்துவதே பொருத்தமாக இருக்கும் என்பதால், இரண்டு முக்கிய நிகழ்வுகளை திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.

1. தங்களது கொள்கைக்கும், விருப்பத்திற்கும் மாறாக, திருமணத்தின்போது அணிவிக்கப்பட்ட தாலி என்ற பெண்ணடிமைச் சின்னத்தை, ஜாதியைப் பாதுகாக்கும் சின்னத்தை, தங்களுக்கு உண்டான விழிப்புணர்வு, துணிவு, தெளிவு, அச்சமின்மை காரணமாக, அன்றைய நாளில் பெரியார் திடலுக்கு வந்து, அந்நிகழ்வில் தாலியை அகற்றிக் கொள்ளும் நிகழ்வைப் பகிரங்கமாக, மக்கள் முன்னிலையில் நடத்திக் காட்டுவது, இதில் விருப்பமுள்ள தாய்மார்கள், திருமணமானவர்கள் முன்கூட்டியே அனுமதி பெற்று வந்து கலந்து கொள்ளலாம் என்று அறிவித்ததற்கிணங்க, ஏராளமான திருமணமான வாழ்விணையர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

எந்தவித நிர்ப்பந்தமோ, கட்டாயமோ அல்லது அவர்களுக்கான லாப நோக்கோ _- இந்த நிகழ்வில் இல்லை.

2. தந்தை பெரியார் அவர்களும், அண்ணல் அம்பேத்கரும், உண்மையான திராவிடர் இயக்கங்களும், கொள்கையாளர்களும், முற்போக்குச் சிந்தனையாளர்களும் விரும்பும் புரட்சிகர பெண்ணடிமை ஒழிந்த ஒரு புதிய சமூகத்தின் விடிவெள்ளியாகவே இந்த நிகழ்வு.

இதுபோல தனித்தனியே திராவிடர் கழக மாநாடுகளிலும், கழகப் பிரச்சாரக் கூட்ட மேடைகளிலும் ஆங்காங்கே தாலி அகற்றும் நிகழ்ச்சி நடந்து வந்திருக்கிறது! இது புதுமையும் அல்ல; முதல் தடவையும் அல்ல!

3. இப்போது ஏன் நடத்தப்படுகிறது என்றால், சென்னையில் உள்ள ஒரு தொலைக்காட்சியில் தாலி அணிவது பொருத்தமா? என்பதுபற்றி விவாதம் நடைபெறும் என்று அறிவிப்புத் தரப்பட்ட நிலையில், அதற்கு மிரட்டல், எதிர்ப்புக் காட்டினர் ஹிந்துத்துவாவைப் பரப்பும் பல மதவெறிகள் _- காவி அணிந்த அமைப்பினர். பிறகு அடுத்த-கட்டமாக அந்தத் தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் டிபன்பாக்ஸ் வெடிகுண்டை எறிந்து, வெடித்தனர்.

நாங்கள்தான் செய்தோம்; இனியும் இதைவிட அதிகமாகவே செய்வோம் என்று பட்டாங்கமாய் அறிக்கையை அந்த அனாமதேய, பாசிச சமூக விரோதிகள் வெளியிட்டு வருகிறார்கள்.

அவர்கள்மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்க வேண்டாமா? தமிழ்நாட்டின் அமைதியைக் குலைத்து, சமூக நல்லிணக்கத்தைப் பாழாக்கிட முயல்கின்றவர்களிடம் அரசு எப்படி நடந்து கொள்கிறது? பாம்புக்கும் நோகாமல் பாம்படிக்கும் கோலுக்கும் நோகாமல் என்றபடி நடந்துகொள்கிறது!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை இத்தகைய அச்சுறுத்தல்களால் பலியாகலாமா?

இந்தக் கருத்து பரவக்கூடாது என்று மிரட்டப்பட்டதன் எதிர்வினையாகத்தான் 14ஆம் தேதி சென்னை, பெரியார் திடலில் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அது விருப்பமுள்ள பெண்களின் தனி உரிமை. மற்றவர்கள் கூச்சல் போட என்ன உரிமை உள்ளது?

தாலி என்பதற்கு இவர்கள் கூறும் ஹிந்து மதத்தின் எட்டு வகைக் கல்யாணங்களில் தாலி எங்காவது கட்டாயம் என்றோ, ஆதியில் இருந்த முறை என்றோ காட்ட முடியுமா?

சங்க இலக்கியத்தில்கூட அகநானூறு இலக்கியத்தின் இரண்டு பாடல்களில் அக்கால மணமுறைபற்றி உள்ளனவே, அந்த முறையில் இந்தத் தாலி கட்டும் பழக்கம் உண்டா? (அ) பழைமையில் இருந்தது என்றுகூட வாதத்திற்கு ஒப்புக்கொண்டால்கூட, முந்தைய பழைமை முறைகளை எல்லா ஹிந்துத்துவா வீட்டுப் பெண்களும், தூண்டிவிடும் பார்ப்பனர்களும் இன்று பின்பற்றுகிறார்களா?

பார்ப்பன விதவைகளை மொட்டைப் பாப்பாத்திகளாக்கி – வெள்ளைச் சேலையில் காட்சியளிக்க வைத்தனரே, அது இன்று உண்டா?

புனிதத்தைத் தேடும் இந்தப் புரட்டர்கள் அங்கே போய் எதிர்ப்புக் காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினரா?

பொட்டும், பூவும் வைத்துக்கொள்ளும் கணவனை இழந்த பெண்களின் முற்போக்கு மனிதநேய சிந்தனைகளை, செயற்பாடுகளை எதிர்த்து கிளர்ச்சியா செய்தனர்?

சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு எழுதிய இரண்டு பார்ப்பன நீதிபதிகள், நாரதர், பராசரன், யாக்ஞவல்கியர் போன்றவர்களின் பல சுலோகங்களைக் காட்டி, சப்தபதிபற்றித்தான் கூறினார்களே தவிர, தாலி கட்டாயம் ஹிந்து திருமணத்திற்கு என்று கூறவில்லையே!

விதவை மறுமணம் வந்ததே, அதை எதிர்த்தனரா?

இன்னமும் பெண்களுக்கு 9 வயதுக்குள் திருமணம் பால்ய விவாகம் செய்துவிட வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியார்கள் கூறுகிறார்களே, அதைப் பகிரங்கமாகச் செய்தால், தண்டனை கிரிமினல் குற்றம் என்று உள்ளதே!

அதை எதிர்த்து இந்த வீராதி வீரர்கள், சூராதி சூரிகள் குரல் கொடுப்பார்களா? சட்டத்தை எதிர்த்து புனிதம், மத ஆச்சாரம் கெட்டுவிட்டது என்று கூறுவார்களா?

இன்னும் சில அரைவேக்காடுகளும், புதிதாக தமிழ்த் தேசிய வியாதிகளும் தமிழன் வீரத்தின் அடையாளம் என்று கூறி, ஆகா, தாலியை எதிர்ப்பதா? என்று உளறுகிறார்களே, அந்த வீரர்கள் திருமணத்திற்குத் தாலியை நகைக் கடைகளில் வாங்குகிறார்களா? அல்லது காட்டிற்குச் சென்று புலியோடு போராடி, சாகடித்துப் புலிப் பல்லைப் பிடுங்கிக்கொண்டு வந்து வீரத்தின் அடையாளம் இதோ என்று கட்டுகிறார்களா?

அந்த நிபந்தனை இன்று வைக்கப்பட்டால், திருமணமே வேண்டாம் என்றுதானே ஆண்கள் ஓடி ஒளிவார்கள்.

எனவே, ஒத்த கருத்தாளர்கள் அனைவரும் வந்து கலந்துகொள்ள அழைப்பை விடுக்கிறோம்.

கருத்து மோதலுக்குத் தயாரா?

கருத்து மோதலுக்குத் தயார்! தயார்!! வேறு மோதலுக்குத்தான் தயார் என்றால், காவல்துறை பார்த்துக் கொள்ளும்; மீறி அவர்களால் முடியாத நிலை ஏற்பட்டால், மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

தயார்! தயார்!!

– கி.வீரமணி,
ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *